Wednesday, 12 December 2018

தமிழில் வேண்டாமே ஆங்கிலக் கலப்பு ` !

தமிழர்களின் உன்னத  மொழிப்பற்று இந்த உலகே அறியும் .உலகிலே மொழிக்காக தன் உயிரையே தரும் ஒரு இனம் உண்டென்றால் அது  தமிழ் இனம் மட்டும் தான்  .மொழிக்காக இதுவரை, எனக்கு தெரிந்த வரை, ஆங்கிலேயர்கள் தங்கள் உயிர் தந்ததில்லை ;இந்திக்காரர்கள் தந்ததில்லை !மலையாளியோ ,கன்னடரோ தந்ததில்லை ,ஆனால் தமிழர் மட்டும் 18 பேர், 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், இந்திக்கு எதிராக போராடி தன் இன்னுயிர் ஈந்தார்கள் .
                                                அது போல உலகில் எந்த இனமும் தன் மொழிப் பெயரை  தன்னுடைய சொந்தப் பெயரின்  பகுதியாக கொள்வதில்லை .எடுத்துக்காட்டாக ,ஆங்கிலேயர் பொதுவாக English Son என்று பெயர் வைப்பதில்லை .இந்திக்காரன் எவனும் இந்தி கா பேட்டா  என்று பெயர் வைப்பதில்லை .ஆனால் ,தமிழரோ, தமிழ் மகன் ,தமிழ் ,தமிழ் செல்வன் ....என்று எத்தனையோ, தமிழ் மொழியை  மகிமைப்படுத்தும் பெயர்கள் வைப்பதை வழக்கமாய் கொண்டுள்ளார்கள் .
                                                தமிழனுக்கு ,தமிழ் வெறும் பரிமாறும் மொழி அல்ல .அது ஒரு உணர்வு .அது அவன் மூச்சு .அது அவன் ஆவி ,ஆத்துமா ,சரீரம் என்று எங்கும் வியாபிக்கும் ஒன்று . ஆனால் ,இவ்வளவு மொழிப்பற்று கொண்ட தமிழர்கள் ,ஒரு விதமான அதீத ஆங்கில மோகம் கொண்டுள்ளார்கள் என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத மாபெரும் உண்மை .அது ஏன் ?
ஆங்கிலம் மேல் ஏன் அந்த அதீத அன்பு ?
                                                                    தமிழர்களுக்கு  ஆங்கிலம் மேல் உள்ள மாபெரும் அன்பிற்கு காரணம் ,தமிழர்களை  பிராமண அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தது ஆங்கிலம் தான் ,என்ற நம்பிக்கை  ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் .மேலும் பிராமணத்தால் நசுக்கப்பட்டு கிடந்த அவர்களுக்கு ஆங்கிலம்  சம உரிமை வழங்கியது .சமஸ்கிருதம் படிக்க தடை செய்யப்பட்ட தமிழர்களை, ஆங்கிலேயர்கள் ஆங்கிலம் படிக்க தடை செய்யவில்லை .மாறாக ஊக்கப்படுத்தினார்கள் .ஆங்கிலம் படித்தவர்களுக்கு ,பிரிட்டிஷ்  அரசில்,பிராமணருக்கு சமமாக  வேலையும்  கொடுத்தார்கள் .
                                  எந்த ஒரு தமிழனும் இன்னொரு தமிழனை சந்திக்கும் போது ,முதலில் தெரிந்து கொள்ள மனதளவில் விழைவது அவரின் ஜாதியை தான் .தமிழ் பேசினாலே கீழ் ஜாதி தான் என்ற ஒரு எண்ணத்தை காலப்போக்கில் விதைத்து விட்டனர் தமிழ் பிராமணர்கள் .இந்த நிலையில் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொண்டவர்கள் உயர் ஜாதி மக்களுடன் எளிதில் சேரும் படியான சூழ்நிலை உருவானது .ஆங்கிலம் பேசும்  கீழ் ஜாதி மக்களை ,யாரும் ஜாதியை துணிந்து  கேட்பதில்லை .ஆங்கிலம் பேசினாலே அவர்கள் உயர் ஜாதி தான் என்ற எண்ணம் விரைவில் நிலைக்க ஆரம்பித்தது .இதனால் பல தமிழருக்கு ஆங்கிலம் மேல் ஒரு தனி  மோகம் வந்தது .நாளடைவில் ஆங்கிலம் அறிந்த தமிழர் எல்லோரும் ஒரு தனி ஜாதியாகவே பார்க்கப்பட்டார்கள் .மதிக்கப்பட்டார்கள் .அவர்களின் உண்மையான ஜாதி எதுவாக இருந்தாலும் ஆங்கில அறிவினால் மதிக்கப்பட்டார்கள் .
 'பாண்டிப் படா 'என்ற மலையாளப் படத்தில் ,ஊரில்  2 பெரிய  தமிழ் தாதாக்கள் சண்டை போடும் நேரத்தில் ,ஒரு பக்க தாதாவின் மகள்  ஆங்கிலத்தில் தாட் பூட் என பேச ,எதிர் பக்க தாதாவே பயந்து போவதாக ஒரு காட்சி அமைத்திருக்கிறார்கள் .ஆங்கிலம் தெரியவில்லை என்றால் ஒரு தாழ்வு மனப்பான்மையும் ,அறிந்திருந்தால் உயர்வு மனப்பான்மையும்  தமிழக பண்பாட்டில் ஊறிப்போய்விட்ட ஒன்று  .நானே இந்த யுக்தியை அலுவலகத்தில் பலமுறை பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கிறேன் . நான் ஊழியர்களின் தொழிற் சங்கத்தோடு  பேச்சு வார்த்தை நடத்தும் போதேல்லாம் ,முக்கியமான தருணங்களில் ஆங்கிலத்திற்கு சட்டென்று மாறிவிடுவேன் !எதிரணியில் என் ஆங்கிலத்திற்கு இணையான ஆள்  யாரும்  இல்லாததால்  அவர்கள் ஒரு கணம்  திகைப்பது எனக்கு நன்றாகவே தெரியும் ! அவர்கள் யாரும் 'ஏன் ,நீங்கள் ஆங்கிலத்திற்கு மாறுகிறீர்கள் ?'என்று துணிச்சலுடன் என்னைக் கேட்டதில்லை .ஏனென்றால் ,ஆங்கிலம் பேச எனக்கு தெரியாது என்று சொல்ல தமிழர்கள் தயக்கம் காட்டுவது  தான் ..
ஆங்கிலத்தை அலுவலுக்கு மட்டும் வைத்தால் தப்பில்லை !
                                       ஆங்கிலம் ஒரு பன்னாட்டு மொழியாக வளர்ந்து வணிக உலகில் எங்கும் வியாபித்தித்து இருப்பதை யாரும் மறுக்க முடியாது .ஆதலால் ,அதைக் கற்று ,தேர்ந்து ,அலுவல்  தேவைகளுக்கு  மட்டும் பயன் படுத்துவதில் ஒரு தப்பும் இல்லை .ஆங்கிலத்தை வீட்டிற்கும்,சமூக நிகழ்ச்சிக்கும்  கொண்டுவருவது தான் மாபெரும் தவறு .இது தமிழ் நாட்டில் எந்த அளவு மோசமாகி விட்டது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டுகள்  இதோ !
                         சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன் .வரவேற்பு நிகழ்ச்சியின் போது ,நிகழ்ச்சிதொகுப்பாளர்  முழுதும் ஆங்கிலத்திலே நடத்தியது எனக்கு என்னவோ மாதிரி ஒரு உணர்வைக் கொடுத்தது .வந்திருந்தவர்கள் எல்லோரும் தமிழர்கள் தான் ,ஒன்றிரண்டு வட இந்தியர்கள் .மலையாளிகளை தவிர .எந்த அமெரிக்கனோ ,ஆங்கிலேயனோ கூட்டத்தில் நிச்சயமாக இல்லை .அப்புறம் ,யாருக்காக இந்த ஆங்கில மேடை பேச்சு ? கூட்டத்திலிருந்த தமிழ் மட்டும் அறிந்த பெரியோர்கள், மேடையில் பேசிய பேச்சு ஒன்றும் புரியாமல் சங்கடப்பட்டார்கள் .இது போதாதென்று ,நிகழ்ச்சி தொகுப்பாளர் பெருமையாக 'ஐ நவ் இன்வைட்  கிரான்னி ......' என்று முத்தம்மாள் பாட்டியை மேடைக்கு அழைக்கிறார் ! முத்தம்மாள் பாட்டிக்கு ஒரு சொல் ஆங்கிலம் கூட தெரியாது !அவர் பாட்டுக்கு வெற்றிலை போட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்க ,இன்னொருவர் 'பாட்டி ,உங்களைத்தான் மேடைக்கு அழைக்கிறாங்க !'என்று சொல்ல ...ஒரே கூத்து தான் ,போங்கள் !
                                                  தமிழ் நாட்டின் வணிக நிறுவனங்கள் எல்லாம் தமிழை முற்றிலும் புறக்கணிப்பது இன்னொரு பெரிய அவலம் .பெயர்கள் ஆங்கிலத்திலே இடப்படுகின்றன .(உ -ம்) புட் பிஎஸ்தா ஸ்ட்ரீட் என்று கோவையில் ஒரு உணவகம் .பெயர்ப்பலகைகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே வைக்கப்படுகின்றன .அரசு விதிகளின் படி வணிக நிறுவனங்கள் பெயர்ப் பலகை தமிழில் ஆங்கிலத்தை விட பெரிதாக இருக்க வேண்டும் என்பதை யாரும் பின்பற்றுவதில்லை .அப்படியே தவறி தமிழிலும் வைத்தாலும் ,ஆங்கிலம் இமயம் போல அளவிலும் தமிழ் பல்லாவரம் மலை அளவிலும் இருக்கும் .கிராமப் புறங்களில் கூட முழுதும் ஆங்கிலத்தில் பெயர்ப் பலகை வைக்கிறார்கள் .பெயர்ப் பலகைகளை மட்டும் பார்த்தால் தமிழ் நாடு இங்கிலாந்தின் ஒரு பகுதி தானோ என்று ஆங்கிலேயர்கள் சந்தேகப்படும் படி இருக்கிறது .தலைக் கவசத்திற்காக கவலைப்படும் நீதி மன்றமோ அரசு அதிகாரிகளோ இதைக் கொஞ்சமும் கண்டுகொள்வதில்லை .ஜல்லிக்கட்டுக்கு துள்ளி வரும் காளைகள் இதற்கு கிள்ளுவது கூட கிடையாது .ஓவியாவுக்கு ஒன்றரை கோடி வாக்குகள் அளிக்கும் தமிழர்கள் இதை ஒரு பிரச்னையாக பார்ப்பதே இல்லை .
                                                 ஆங்கிலம் தமிழ் சமூக வாழ்க்கையையும்  மிகவும் பாதிக்கும் அளவுக்கு இன்றைய தினம் ஆக்ரமித்து கொண்டிருக்கிறது .வாழ்வின் முக்கிய தருணங்களை ஆங்கிலம் எடுத்துக்கொள்கிறது .பிறந்த நாள் வாழ்த்து தமிழர் ஹாப்பி பர்த்டே  என்கிறார்கள் !காதலியைப் பார்த்து ஐ லவ் யு என்கிறார்கள் !புத்தாண்டுக்கு ஹாப்பி நியூ இயர் என்கிறார்கள் !நண்பனை அழகாக 'நண்பா 'என்று சொல்லாமல் ட் யூ ட்  என்கிறார்கள் !அப்பாவின் பெயரின் முதல் எழுத்தை ஆங்கிலத்தில் எழுதும் பழக்கம் தமிழரிடையே மட்டும் தான் இருக்கிறது .இது எவ்வளவு கேவலம் என்பதை தமிழர்கள் யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை .இது போதாதென்று ,தன் செல்ல நாய்க்குட்டியிடமும் கூட தமிழர்கள் 'எஸ் ,நோ ' என்று தான் கட்டளையிடுவார்கள் !இதற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல ,தமிழ் கவிஞர்கள் இப்போது ஆங்கிலம் கலந்து கவிதை எழுதும் படுகேவலம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது .சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்களில் தாராளமாக ஆங்கிலம் கலந்து பாடியதைக் கண்டுதமிழர்கள்  யாருமே அதிர்ச்சி அடையாது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .
                                             தமிழ்க் குழந்தைகளோ  ஆங்கிலத்தில் விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள் .இதனால் அவர்கள் ஆங்கிலம் தெரியாத குழந்தைகளை விளையாட்டுக்கு சேர்த்து கொள்வதில்லை .எங்களுடைய தெருவில் விடுதலை தினத்தன்று கொடியேற்றிய பின், ஒரு சிறுவன் விடுதலை தினத்தை பற்றி ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தியதை அங்கிருந்த தமிழ் பெரியவர்கள் எல்லோரும் பெருமையுடன் ரசித்தனர் !ஒருவருக்கும் ஒரு சொல் கூட ஆங்கிலம் தெரியாது என்பது சுவையான தகவல் !ஆனால் ,எங்களுக்கு புரியவில்லை என்று யாரும் வாய் திறந்து சொல்லமாட்டார்கள் !அது தான் தமிழன்டா !
ஆங்கிலத்தின் அடிமையா தமிழன் ?
                                                ' இன்று காலை ஹாஸ்பிடல் சென்றேன் .அங்கு டாக்டரை பார்த்தேன் .அவர் பிளட் டெஸ்ட் எடுக்க சொன்னார் .லேபுக்கு போனால் ஈவினிங் வாங்க என்று சொன்னார்கள் .எப்போது என்றால் 6 ஓ கிளாக் ஓகே என்கிறார்கள் .ஹஸ்பண்ட் வர 7 ஆகிரும் ,வழியில் கேஸ் புக் பண்ணனும் .' இது ஒரு சராசரி தமிழனின் பேச்சு வழக்கு .இதில் ஏழைகளும் ,பிச்சைக்காரர்களும் கூட அடங்குவர் !தமிழ் பேச்சில் நஞ்சாக சுமார் 20 % - 30% சொற்கள் ஆங்கிலம் கட்டாயம் கலந்திருக்கும் .இளைய தலைமுறை தமிழர்கள்  40% வரை ஆங்கிலக்கலப்பு செய்கிறார்கள் .பாடல்களிலும் கவிதையிலும் இந்த நோய்  தொற்றியிருக்கிறது .'சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே,அட கலக்குது பார் இவ ஸ்டைலு,சிக்குவாலா சிக்குவாலா மயிலு,இவ ஓக்கேன்னா அடி தூளு'  என்று சொல்லுக்கு சொல் ஆங்கிலத்தை நுழைத்திருக்கிறார்கள் .ஆக ,தமிழ்க்  கவிஞர்களும் எழுத்தாளர்களும் கூட இதற்கு விலக்கல்ல . இந்த தமிழ் சிதைக்கும் போக்கு ஒரு எதிர்ப்பும் இல்லாமல் தமிழகத்தில் வேரூன்றி விட்டது .
                                                 பேச்சுத் தமிழ் தான் இப்படியென்றால் அச்சு ஊடகங்கள் அநியாயத்திற்கு ஆங்கிலக்கலப்பு செய்கின்றன .அமேசான் தமிழ் விளம்பரங்கள் 95% வரை ஆங்கிலக்கலப்பு செய்கின்றன .இந்த விளம்பரத்தில்  6 சொற்கள் ,அதில் 5 ஆங்கிலம் ,1 தமிழ் !
இதைப் பாருங்கள் !
இந்த தமிழ் விளம்பரத்தில் ஆங்கிலம் தான் அக்கிரமித்துக் கொண்டிருக்கிறது .'வெல்க தமிழ் 'என்று தலைப்பில் போட்டுவிட்டு ,தினத்  தந்தி நாளிதழ் கமுக்கமாக 'டி டி எஸ்  நெக்ஸ்ட் 'என்று ஆங்கில இணைப்பு வெளியிடுகிறது !
இது போதாதென்று ,தமிழ் பாடல் காணொளிகளில் ஆங்கிலத்தில் வரிகளை போடுவது இப்போது ஒரு மோசமான பாணியாகிக்கொண்டிருக்கிறது .இதோ பாருங்கள் 'பேட்ட' படப்பாடல் ஒன்றை !
பேட்ட பாடல் 
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்றால் இதைவிட படு மோசமாக ஆகிக்கொண்டிருக்கின்றன . பல நிகழ்ச்சிகளின் பெயர்களே ஆங்கிலத்திலே இருப்பதும் இல்லாமல் ,ஆங்கிலத்திலே அச்சிடப்படுகின்றது .எடுத்துக்காட்டாக 'புல்லெட் நியூஸ் 'என்று பெயரிட்டு ,அதை 'BULLET நியூஸ் ' என்று போடுகிறார்கள் .தொகுப்பாளர்கள் எல்லோரும் பேசும்போது, எப்படியாவது அவர்களுக்கும் ஆங்கிலம் தெரியும் என்று காட்டிக்கொள்ள துடிப்பது நிகழ்ச்சிகளை பார்த்தாலே புரியும் .
ஆங்கிலத்தின் சிந்தனை வழிகளையே பின்பற்றி தமிழ் பேசுபவர்கள் பலர் இன்று உருவாகிக்கொண்டிருக்கிறார்கள் .ஆங்கிலத்தில் ,மேடை பேச்சாளர்கள்,இடை இடையே  கூட்டத்தை நோக்கி 'ஆர் யு தேர் ?'என்பார்கள் .'நீங்கள் கவனிக்கிறீர்களா ?'என்பது அதன் பொருள் .சமீபத்தில் ஒரு தமிழ் பேச்சாளர் ,அதே பாணியில் கூட்டத்தை நோக்கி ,'நீங்கள் இருக்கிறீர்களா ?'என்று தமிழில் கேட்க, கூட்டத்தினர் அனைவரும் குழம்பிப்  போய் விட்டனர் !உலகிலே இயல் ,இசை ,நாடகம் என்ற  3 கிளைகளை கொண்ட ஒரே மொழி தமிழ் .அது மற்ற மொழிகளுக்கு தலைமை ஏற்கும் மொழியே அன்றி ,வேறு எந்த மொழியையும் பின்பற்ற அவசியமில்லை .தமிழர்கள் அதை மறந்து ,ஆங்கில மொழி முறைகளை பின் பற்றுவது வெட்கம் .
                                  இன்னும் இதைப் பற்றி பேசிக்கொண்டே போகலாம் .அந்த அளவு தமிழர்கள் ஆங்கில மன நோயாளிகள் ஆகி விட்டனர் .
யார் இந்த நிலையை மாற்றுவது ?
                                                              தமிழர்கள் தன் சொந்த தாய் மொழியை இவ்வளவு மோசமாக சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது  தமிழருக்கே தெரியாது !தெரிந்தால் 8 கோடி தமிழரில் யாராவது இதை எதிர்த்து போராட மாட்டார்களா ? இதைப் பற்றி யாரும் பேசுவது கூட இல்லை .தஞ்சை தமிழ் பல்கலை கழக வேந்தர் இதைப் பற்றி பேசியதில்லை .தமிழ் வளர்ச்சி துறை அரசு செயலர் இதைப் பற்றி பேசியதில்லை .தமிழைக்  கொண்டே ஆட்சிக்கு வந்த தி .மு .க  பேசவில்லை .கலைஞர் பேசியதில்லை .அன்புமணி பேசியதில்லை .திருமா பேசியதில்லை .சீமான் பேசியதில்லை வைரமுத்து பேசியதில்லை .இளையராஜா ஆங்கிலத்திற்கே மாறிவிட்டார் .சமஸ்கிருத திணிப்பை எதிர்க்கும் வீரமணி அவர்கள் இதைப் பற்றி பேசியதில்லை .ஜெயா அம்மா பேசியதில்லை .எதற்கெல்லாமோ வழக்கு போடும் டிராபிக் ராமசாமி கூட இதற்கு போடவில்லை !
ஏன் இந்த நிலை ?கண்முன்னே கற்பழிக்கப்   படும் தமிழ்த்  தாயை காப்பாற்ற யாருமில்லை !ஏன் இந்த அவல நிலை ?
இப்போது தேவை ஆங்கில எதிர்ப்பு இயக்கம் !
                                                ஆக ,தமிழ் நாட்டில் இப்போது உடனடி தேவை ,தமிழில் ஆங்கில கலப்புக்கு  எதிர்ப்பு இயக்கம் ஒன்றே !இது காலத்தின் கட்டாயம் .அழிவின் விளிம்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் தமிழை காப்பாற்ற அது ஒன்றே வழி !இல்லையென்றால் ,இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ் 50%ஆங்கிலமாக நிச்சயம் மாறிவிடும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி .இதற்கு ஆராய்ச்சி தேவையில்லை .கண் முன்னே அரங்கேறும் அவலமாய் தெரியும் உண்மை இது .
                                                              இந்த மாதிரி இயக்கத்தை முன்னெடுக்க ,ஆங்கில சித்தப் பிரமையில் மூழ்கியிருக்கும் தமிழ் இனத்தில் உள்ள ஒருவரும் வரமாட்டார்கள் .பிரமையில் இருக்கும் தமிழர்களை உலுக்கி சுய நினைவுக்கு கொண்டுவர ஒரு தடாலடி திட்டம் தேவை .அது தான் 'தமிழில் ஆங்கிலம் கலப்பதை தடை செய்யும் ஒரு சட்டம் !'.இதைக் கொண்டு வந்தால் இந்த விடயம் ஒரு பேசுபொருளாக மாறி தமிழகத்தை உலுக்கி நிச்சயமாக சுய நினைவுக்கு கொண்டு வந்து விடும் ! இதை அரசு தான் செய்ய முடியும் .இதைக் குறித்து பலமுறை,தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத்துறை அமைச்சர் திரு .கே .பாண்டியராஜன்  அவர்களிடம் கீச்சு மூலமாக எடுத்துரைத்திருக்கிறோம் .பலமுறை அவர் கீச்சுகளை விருப்பம் போட்டிருக்கிறார் .விரைவில் அந்த சட்டத்தைக் கொண்டு வருவார் என நம்புகிறோம் .தற்போது அவர் தமிழ் நாட்டின் ஊர் /தெருப் பெயர்களை தூய தமிழுக்கு மாற்றும் உன்னத செயலில் இறங்கியுள்ளார் . அதற்காக அவரை பாராட்டுகிறோம் .
                           2021 மாநில  தேர்தலுக்கு முன் இந்த மொழி காக்கும் சட்டத்தை தமிழக அரசு இயற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது .தாய்த்  தமிழ் ஆங்கிலத்தால் சிதையாமலிருக்க அது ஒன்றே சிறந்த வழியாகப் படுகிறது .
--------------------------------------------------------------------------------------------------------------------------இந்த பதிவு முக்கியமான பதிவு .தமிழ் அன்பர்கள் ஒவ்வொருவரும் இதை குறைந்தது 10 பேருக்காவது பகிரும் படி கேட்டுக்கொள்கிறேன் .நன்றி . 
இது வரையில்,8 கோடி தமிழரில் வெறும் 300 பார்வைகள் தாம் பட்டிருக்கின்றன .விரைவில் குறைந்தது 1000 தொட உதவும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
--------------------------------------------------------------------------------------------------------------------------