ஒரு காலத்தில், குனிந்த தலை நிமிராத பெண்கள் தமிழ்நாட்டில் இருந்தனர் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் . இன்னும் அந்த வகைப் பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனரா? இல்லை என்றுதான் நீங்கள் சொல்வீர்கள், வங்கிக் கிளைகளுக்குள் நுழையும் வரை! ஆம், அங்கு இருக்கும் ஊழியர்கள், ஆண்களோ, பெண்களோ, குனிந்த தலை நிமிராமல், வேலை பார்ப்பவர்கள். அவர்கள் நிமிர்ந்து பார்க்க மாட்டார்களா, என்று ஏக்கத் துடன் காத்துக் கொண்டிருக்கும், பரிதாபத்துக்குரிய வாடிக்கையாளர்கள் அவர்கள் முன்னால் ! இதுதான் இன்றைய வங்கி சேவையின் இயல்பான நிலை. இதுதான் இன்றைய, வங்கி வாடிக்கையாளர் சேவையின் படம் ! ஆனால், 1980களில், நிலைமையே வேறு! நம்ப முடியவில்லையா? இதோ என் கதை!
1984 லிலிருந்து 1986 வரை நான் ஒரு பெரிய வங்கியின் , தனிநபர் வங்கியியல் மேலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன்.கேரளா எல்லையில் இருந்த அந்த வங்கி கிளையில் எப்போதும் கூட்டம் அலைமோதும் .காலை 9 வாக்கில் நான் வங்கிக்குள் நுழைய முற்பட்டால் ,ஒரு 300 பேராவது என் வழியை மறைத்துக்கொண்டு நிற்பார்கள் .வங்கி காவலர் சத்தம் போட்டு எனக்கு வழி வகுத்து கொடுப்பார் !
அந்த வங்கி கிளையில் வெளி நாட்டு இந்தியர்களின் கணக்கு (NRE )நிறைய இருந்தன .அந்தக் கணக்குதாரர்களுக்கு நான் ஒரு உற்ற நம்பிக்கையான குடும்ப நண்பனாக சேவை செய்தேன் .பொதுவாகவே பணக்காரனோ ஏழையோ யாராயிருந்தாலும் அவர்களுக்கு என் மனதார முடிந்த அளவு உதவி செய்வது என்பது என்னுடைய இயல்பு. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு மேலும் சிறப்பான சேவை நான் செய்வதற்கு காரணம் அவர்கள் தங்கள் குடும்பங்களை இங்கே விட்டுவிட்டு தனியாக அங்கு சென்று அல்லும் பகலும் உழைத்து ,குடும்பத்திற்க்காக பணம் அனுப்புகிறார்கள். அவர்கள் முற்றிலும் நம்பி இருப்பது இந்த வங்கியை தான். இந்த பணம் போய் அவர்கள் குடும்பத்தில் சேர்ந்த பின்னர் தான் அவர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் செய்ய வேண்டும். அது எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களுடைய பார்வையில் நான் எப்போதும் பார்ப்பேன் . ஆதலால் NRE என்று சொல்லப்படும் அந்த வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த சிறப்பான சேவை எப்போதும் செய்வேன் .அவர்கள் அனுப்பும் காசோலை வந்தவுடன் அந்த இடத்திலேயே ஒரு அச்சடித்த பதிலை அவர்களுக்கு அனுப்பி விடுவேன். ஆதலால் அவர்கள் எல்லோருமே என்னுடைய சேவைக்காக எப்போதும் பாராட்டி கொண்டே இருப்பார்கள். அப்படி ஒரு தனி சிறப்பான சேவை நான் கொடுத்துக் கொண்டிருந்தேன் .அவர்கள் குடும்பத்தினரும் என்னை தங்கள் குடும்பத்தில் ஒரு ஆளாகவே எடுத்துக் கொள்வார்கள். நான் அவர்கள் வீட்டிற்கு சென்று பலமுறை உதவி செய்திருக்கிறேன். பல வீடுகளில் சாப்பிட்டு இருக்கிறேன். அந்த அளவுக்கு நெருக்கமாக அவர்களுடன் இருந்தேன் .
இப்படி இருக்கையில் ஈரான் ஈராக் போர் 1984இல் வெடித்தது. ஈரானில் எங்கள் வங்கியின் ஒரு முக்கியமான வாடிக்கையாளர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.அவர் தங்கியிருந்த இடத்தில் மேலே குண்டு போட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது.அவருக்கு ஒரே பயம் .எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் .அவர் உயிர் கூட போய்விடலாம் .அப்படி ஒரு பயங்கரமான சூழ்நிலை.அப்படி போனால் குடும்பத்தை யார் பார்ப்பார்கள் ? யாரை நம்பி அவர் சொத்துக்களை கொடுக்க முடியும் ?உறவினர்கள் எல்லோரும் துரோகிகளாக இருந்தார்கள். அவருக்கென்று ஒருவருமே இல்லை என்ற நிலை.
இந்த சூழ்நிலையில் அவர் என்ன செய்தார் தெரியுமா?அப்போது எல்லாம் சின்ன டைப்ரைட்டர் உண்டு . அவசர அவசரமாக, குண்டு மழை ஒரு பக்கம் பொழிந்து கொண்டிருக்கும்போது , தன்னுடைய ஒரு பக்க உயிலை டைப் அடித்து அங்கிருந்த இரண்டு ஊழியர்களை சாட்சி கையெழுத்து போட வைத்து , அதை அப்படியே ஒரு கவரில் வைத்து, குண்டு மழை ஓய்ந்திருக்கும் நேரத்தில் தபாலில் சேர்த்தார் .அப்போதெல்லாம் அவ்வாறான தபால் இந்தியா வந்து சேர்வதற்கு 15 நாள் 20 நாள் வரை எடுக்கலாம் .அப்படி 20 நாள் கழித்து அந்த உயில் என் கையில் வந்து சேர்ந்தது. அதை பிரித்து படித்தவுடன் எனக்கு ஒரே அதிர்ச்சி. அவருடைய சொத்துக்கள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு, அதை பாகம் செய்யும் அந்த உரிமையை Administrator அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமையை என் பெயரில் எழுதி வைத்திருந்தார் !ஒரு பக்கம் அவர் என் மேல் கொண்டிருந்த நம்பிக்கை என்னை வியப்படைய வைத்தது. இவ்வளவுக்கும் அவரை நான் நேரில் ஒருபோதும் சந்தித்தது இல்லை .வெறும் கடிதம் வாயிலாக தான் நாங்கள் பேசிக் கொள்வோம். அவருடைய மகள் பெயரும் என்னுடைய மகள் பெயரும் ஒன்றுதான். ஆக. ஒரு பக்கம் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னொரு புறம் நான் அவ்வாறாக உயில் அட்மினிஸ்ட்ரேட்டராக ஆக முடியாது . வங்கியில் அப்படி ஏற்பாடு கிடையாது.ஆனால் வங்கி அந்தப் பொறுப்பை ஏற்று administrator ஆக முடியும். ஆதலால், நான் உடனே அவருக்கு ஒரு பதில் போட்டேன். உங்கள் கடிதம் கிடைத்தது, உங்களுக்கு ஒன்றும் ஆகாது, நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். நீங்கள் நலமுடன் திரும்பி வருவீர்கள் என்று உறுதி அளித்துவிட்டு, உங்கள் உயிலை நான் செயல்படுத்த எனக்கு வங்கி அனுமதி கிடையாது .ஆதலால் அதை சென்னை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி எங்கள் வங்கி அட்மினிஸ்ட்ரேட்டர் ஆகும் படியாக நான் ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லி ஆறுதலோடு அந்த கடிதத்தை உடனே தபாலில் சேர்த்தேன். கடவுள் கிருபையால் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. அவர் உயிர் பிழைத்து பின்னர் 2007 வாக்கில்,கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பின்னர்,பணி நிறைவு பெற்று இந்தியா வந்தபோது என்னை சந்தித்தார் .அவருக்கு ஒரே சந்தோஷம். அப்போதுதான் முதன்முதலாக அவர் என்னை பார்க்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். என்னை பார்க்காமலேயே அவருடைய உயிலுக்கு என்னை administrator ஆக நியமித்தார் என்றால் அந்த அளவுக்கு வாடிக்கையாளர் சேவை நான் அந்த காலத்தில் நான் செய்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது இப்போது இருக்கும் வங்கி ஊழியர்களை நினைத்து வேதனைப்படுகிறேன். போய் நின்றால் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். போதாததற்கு தமிழ் தெரியாத வட இந்தியர்கள் வேறு அதிகாரிகள் பதவியில் இருக்கிறார்கள். வாடிக்கையாளர் சேவையின் தரம் இப்போது அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது என்பதை மறுக்க முடியாது. அந்த நாட்கள் திரும்பி வருமா என்ற ஏக்கத்துடன் இதை முடிக்கிறேன்.