Saturday, 24 October 2020

கள்ள ஆசீர்வாத வியாபாரிகள் !

                            

                                           இன்றைய தினம், தமிழ்நாட்டில் கிறிஸ்தவ ஊழியர்கள் பலர் 'ஊழியம்' செய்து கொண்டிருக்கிறார்கள் .இவர்கள் செய்வது ஊழியம் தானா அல்லது மதத்தின் பெயரால்  வியாபாரமா என்பது  பலருக்கு ஐயமாக உள்ளது .அதைக் குறித்து இப்போது நாம் ஆராயலாம் . 

                                                      இது குறித்து அலசும் முன், முதலில் ஊழியம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் .தமிழ் அகராதிப்  படி 'ஊழியம்' என்றால் 'தொண்டு' என்று பொருள் . வேதாகப்படி , மத்தேயு 28:19 &20 வசனங்கள் ஊழியத்தைக்  குறித்த அடிப்படை வசனங்கள் ஆகும் .அவை  இரண்டும் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம் . இந்த இரு வசனங்களையும், இயேசு கிறிஸ்துவின் 'பெரும் கட்டளை' (Great Commission ) என்று சொல்வார்கள்.

இதோ ,அந்த வசனங்கள் !


                                                                     ஆக, இதன் படி 'ஊழியம்' என்றால் என்ன ?1)ஊழியம் செய்பவர் யாருக்கு ஊழியம் செய்ய வேண்டுமோ அவரிடத்தில் போக வேண்டும் .
2)அவர்களை இயேசுவின் சீடராய் மாற்றவேண்டும். .அவர்களிடத்தில் கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும்.(மதம் மாற்றவேண்டாம் )
3)அவர்களுக்கு ஞானஸ்னானம் கொடுக்கவேண்டும் .
4)'நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்'
                இதில் நேரடியாக சொல்லப் படாவிட்டாலும், ஊழியக்காரன் இதற்காக பயனாளிகளிடம் இருந்து எதுவும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பது தெளிவு .ஏனென்றால் ஊழியக்காரன் என்பவன் ஒரு தொண்டன் ஆவான் .பயனாளிகளின் விருந்தோம்பல் மட்டும் அவன் தேவைகளுக்காக பெற்றுக்கொள்ளலாம் .
                 ஆனால் தற்போது ஊழியம் செய்கிறோம் என்று சொல்லி பலவிதமான வழிகளில் ஊழியக்காரர்கள் தங்களுக்கு  நிரந்தர வருமானம்  வரும் வகையில் ஊழியத்தை அமைத்துக் கொள்கிறார்கள். அதாவது 'ஊழிய முறை ' என்பதை 'வணிக முறை ' என்று மாற்றி விட்டார்கள். எடுத்துக்காட்டாக,ஒருவர் 'இயேசுவோடு  இளம் பங்காளர் திட்டம்' என்று ஒன்று ஏற்படுத்தி, ஒரு குறிப்பிட்ட தொகை அவரிடம் நாம் கொடுத்தால்  அவர் நம்மை  இயேசுவுடன் பங்காளராக மாற்றுவாராம் . அப்படி என்றால் இயேசு நமக்கு ஒரு 'பார்ட்னர்' என்று அந்த ஊழியக்காரர் ஒரு சான்றிதழ் கொடுப்பார். அப்படி சான்றிதழ் வாங்கியவர்களுக்காக  தினமும் அந்த ஊழியக்காரர்  ஜெபிப்பார் !இது எப்படி ?
இன்னொருவர் சொல்கிறார் ,"இயேசு என்றால் நீங்கள்  கேட்டதும்  உடனே கொடுக்க தயாராக உள்ள ஒரு தேவன்" ஆதலால் , அதற்காக மட்டும் அவரை தேடிப்  போங்க! அவருடைய போதனைகளைப்பற்றியோ , அவர் வாழ்ந்த முறை பற்றியோ ஒன்றும் சொல்லமாட்டார்கள் . அவரிடமுள்ள'ஆசீர்வாதம் என்ற  பணப்பையை' மாத்திரம் குறிவையுங்கள் ,போதும் !அற்புதம் நடந்தால் , அவர்கள் ,பயனாளியிடம் ,நீங்கள் நன்றியாக  தேவனுடைய ராஜ்யத்திற்கு  காணிக்கை  கொடுங்கள் என்று சொல்லமாட்டார்கள் .மாறாக ,எங்கள் ஊழியத்துக்கு கொடுங்கள் என்பார்கள் . ஆக, இதை ஒரு வியாபாரம் என்று சொல்லாமல் ஊழியம் என்று எப்படி சொல்லுவது?
                        ஊழியம் என்று சொன்னாலே பயனாளியிடமிருந்து  பதிலுக்கு நாம் ஒன்றும் பெறக்கூடாது என்பது அந்த சொல்லிலே  அடக்கம் .ஒன்றைக் கொடுத்து பதிலுக்கு பணம் வாங்குவது வியாபாரம் எனப்படும். 
                                     இதுபோல் பல ஊழியக்காரர்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். ஒருவரும் உங்கள் காரியங்களுக்காக நீங்களே ஜெபியுங்கள் என்று சொல்வதில்லை. ஜெபம் என்பது நமக்கும்  ஆண்டவருக்குமுள்ள ஒரு அந்தரங்க உரையாடல். அதை நாம் ஆள் வைத்து செய்யக்கூடாது . எடுத்துக்காட்டாக, நாம்  சாப்பிடுவது என்றால் வேற ஆள் வைத்து அவர்களை சாப்பிடச் சொல்வதில்லை. அதுபோல நாமே செய்யவேண்டிய ஒன்றுதான் ஜெபம். அதை நாங்கள் உங்களுக்காக செய்கிறோம். அதற்காக எங்கள் ஜெப வீரர்கள் ஏடிஎம் மிஷின் மாதிரி 24 மணி நேரம் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்!என்றெல்லாம்  விளம்பரம் செய்கிறார்கள்.நாம் அவர்களை தொடர்பு கொண்டு பேசினால், உடனே அவர்கள் நமக்காக கண்ணீர் விட்டு  ஜெபம் செய்கிறார்கள்! அப்படி எப்படி உடனே கண்ணீர்விட்டு,முன்பின் தெரியாத ஒருவருக்காக  பாரப்பட்டு  ஒருவர் ஜெபிக்க முடியும்? அப்படி பாரப்படுபவர்கள்,அவர்கள்  வரும்  வழியில் துன்பத்தில் இருப்பவர்களை , பசி பட்டினியில் இருப்பவர்களைக்  கண்டு,உதவி செய்பவர்களாக  இல்லையே! இன்னுமொரு  ஊழியக்காரர் இருக்கிறார். அவரும் உடனே கண்ணீரோடு ஜெபிப்பார். ஆனால் இந்த கடினமான கொரோனா  காலத்தில் கூட  இவர்கள் யாரும் பத்து பைசா  பட்டினியில் கிடப்பவர்களுக்கு கொடுத்ததாக தெரியவில்லை. ஊழியப் பாடல்கள் பாடி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த ஒருவர்  ஒரு ரூபாய் கூட ஏழைகளுக்கு கொடுப்பது இல்லை. ஆக ஊழியம் என்ற பெயரில் பாடல் பாடி அதில்  பணம் பண்ணுகிறார்கள் .இவர்களுக்கும் திரைப்பட பாடல்கள் பாடும் பாடகர்களுக்கும் என்ன வேறுபாடு? அவர்களும் பணம் வாங்குகிறார்கள்! இவர்களும் பணம் வாங்குகிறார்கள்! அப்போது ஏன் இது ஊழியம் என்று சொல்லவேண்டும்?என்ற  கேள்வி எழுகிறது.                               
                  வியாபாரம் செய்பவர்கள் எதைச் செய்தாலும், எதை பேசினாலும் அதில் அவர்களுக்கு என்ன லாபம் வரும் என்பதையே நினைத்துக் கொண்டு பேசுவார்கள். அதே போல தான் இந்த ஆசீர்வாத வியாபாரிகளும் .இதைப் புரிந்துகொள்ள நான் சொல்லும் இந்த ஒரு எடுத்துக்காட்டே  போதும். இந்த கொரானா  காலத்தில் கஷ்டப்படும் ஏழைகளுக்காக நான் என்னுடைய ஓய்வூதிய பணத்திலிருந்து 25 சதவீதத்தை எடுத்து கொடுக்க தீர்மானித்தேன். அதற்காக தமிழ்நாட்டின் பிரபலமான ஒரு 50 ஊழியக்காரர்களை அணுகினேன் . அவர்களிடம் உங்கள் சபையில் அங்கத்தினராக இல்லாத ஆனால் பசியால் கஷ்டப்படும் ஏழைகள் ஒரு பத்து பேரை எனக்கு அறிமுகப்படுத்துங்கள். ஒவ்வொருவருக்கும் நான் ரூபாய் 1000 அனுப்புகிறேன். ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கொஞ்சமாக இதை செய்கிறேன்' என்று அணுகினேன்.நம்புங்கள், அந்த 50 பேரில்  49 பேர் பதில் கூட அளிக்கவில்லை. ஒரே ஒருவர், ஒரு இரண்டு வங்கிக் கணக்கு விபரங்களை எனக்கு அனுப்பினார். அந்த இருவருக்கும் தலா ஆயிரம் அனுப்பினேன். ஆனால் அந்த பணத்தை பெற்றுக்கொண்டதாக அந்த ஏழைகளிடமிருந்து எனக்கு ஒரு தகவலும்  வரவில்லை. ஆக ஊழியக்காரர்கள் அவர்கள்  சபையில் அல்லது ஊழியத்தில் இருக்கும் அங்கத்தினர்களை தவிர வேறு யாருக்கும் எந்தவிதமான நன்மையும் செய்ய தயாராக இல்லை என்பது தெளிவு.
                           இவர்கள் இயேசுவின் போதனையான ,' நீங்கள் மனம் திரும்புங்கள். மற்றவர்களை நேசியுங்கள். மற்றவர் குற்றங்களை மன்னித்து விடுங்கள். என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், இவ்வாறெல்லாம் சொன்னால்  அவர்களுடைய வாடிக்கையாளர்கள் (Customers ) அவர்களை விட்டு விலகி விடுவார்கள்!வருமானம் இல்லாமல் போய்விடும் ! அதனால் அவர்களுக்குப் பிடித்ததை சொல்லி, அவர்களை அவர்களுடன் சபைக்குள்ளே  வைத்துக் கொள்வார்கள் .'உங்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும்! உங்கள் நோய்கள் எல்லாம் குணமாகும்! உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகும்! உங்களுக்கு கார் கிடைக்கும்! வெளிநாட்டில் வேலை கிடைக்கும்! என்றெல்லாம் சொல்லி சொல்லி அவர்களை ஒரு எதிர்பார்ப்பு மழையில் நனைய வைப்பார்கள்! பதிலுக்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் தசமபாகத்தை தவறாமல்  அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும்!இதைத் தவிர ஆசீர்வாதம் கிடைத்தால் அதற்கு ஒரு தனி காணிக்கை தரவேண்டும் !சில சமயம் வணிக நிறுவனங்கள் சிறப்பு தள்ளுபடி திட்டம்  கொடுப்பார்கள். அதேபோல இந்த ஊழியக்காரர்களும் 'எழுப்புதல் திருவிழா' என்று நடத்துவார்கள்.தனியாக ஜெபிப்பார்கள். நடுஇரவு ஜெபிப்பார்கள்.உபவாச ம்  செய்து ஜெபிப்பார்கள். ஆனால் ,பக்கத்து  வீட்டில் பட்டினியாய் கிடக்கும் ஒருவருக்கு ஒரு வேளை உணவு வாங்கிக் கொடுக்க மாட்டார்கள்! கிறிஸ்தவ னுக்கு அடையாளம்'அன்பு'. எல்லோரிடத்திலும் அன்பு காட்டுவது. அதை சொல்லித் தரவும் மாட்டார்கள். சபைக்கு உள்ளே செயல்படுத்தவும்  மாட்டார்கள். சபைக்கு உள்ளே சாதி பார்ப்பார்கள். தன் கிறிஸ்தவ பெயர் கூட அவர்கள் சாதி பெயரை சேர்த்துக் கொள்வார்கள்.தினமும் தொலைக்காட்சியில் பேசும் ஒரு பிரபல கிறிஸ்தவ சுவிசேஷகர் ஒருவர் ,இதையெல்லாம் எதிர்த்து,  பேசவேமாட்டார்.பேசினால் அவருடைய வாடிக்கையாளர்கள்  எல்லாம் போய்விடுவார்கள் என்ற பயம் .இவர் தேவனுக்கு ஊழியம் செய்கிறாரா இல்லை மனிதர்களுக்காக செய்கிறாரா ?என்பது கேள்வி .
                                            நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தமிழ்நாட்டில் உண்மையான ஊழியக்காரர்கள் இருந்ததே  இல்லையா ?என்று உங்களில் சிலர் கேட்கலாம். உண்மையான ஊழியக்காரர்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கவில்லை என்றால் எப்படி கிறிஸ்தவர்கள் இந்த அளவுக்கு தமிழ் நாட்டில் எண்ணிக்கையில் வளர்ந்திருக்க முடியும்?முதலில்  வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு  வந்த கிறிஸ்தவ 'மிஷனரிகள்' எல்லோரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தியா வந்து, தங்கள் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும்  கிறிஸ்துவுக்காக கொடுத்து , இந்தியாவில் வாழ்ந்து, இந்தியாவில் மடிந்தார்கள். எடுத்துக்காட்டாக பலரை சொல்லலாம். இப்போது இந்தியாவின் ஒரு  பிரபலமான மருத்துவமனையாக  வேலூர் கிறிஸ்தவ  மருத்துவமனை திகழ்கிறது .இதன் ஸ்தாபகர் ஐடா ஸ்கடர் என்ற வெளிநாட்டு பெண்மணி ,தமிழ்நாட்டு மக்களுக்காக மருத்துவம் பயின்று ,ஒரு சிறிய அளவில் மருத்துவமனை தொடங்கி இன்று நாடு போற்றும் ஒரு மருத்துவமனையாக மாற்றியிருக்கிறார் . அவர்கள் தன் சொந்த பொருளை பயன்படுத்தி தான் இந்த வசதிகள் எல்லாவற்றையும் உருவாக்கினார்கள். மருத்துவத்துக்கு கூட  காசு வாங்கவில்லை அவர் .ஆனால் இன்றோ ஜெபத்திற்கு கூட காசு கேட்கிறார்கள். ஒரு பிரபலமான கோவையை சார்ந்த கிறிஸ்தவ குடும்பத்தினர், தங்களுடைய ஊழியத்திற்காக  சென்னையில் சொந்தமாக ரூ 50 கோடி முதலீட்டில் ஒரு கட்டிடம் வாங்கியிருக்கிறார்கள்! இந்த கட்டிடத்திற்குள்ளே  போக வேண்டுமென்றால் முதலில் நீங்கள் உறுப்பினராக மாறவேண்டும்.பின்னர்  பணம் கொடுத்தால்தான் ஜெபம் பண்ணுவார்கள். வெளிநாட்டு பெண்மணி ஐடா ஸ்கடர் அவர்களுக்கும்,இவர்களுக்கும்  என்ன வேறுபாடு? அவர் தன்னையே கொடுத்து கிறிஸ்துவை அறிவித்தார் !இவர் கிறிஸ்துவையே விலைக்கு  விற்று தனக்காக பணம் சேர்க்கிறார் !ஆக ,இப்போது  ஜெபிக்க வேண்டும் என்றாலே  காசு கொடுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
                                       எனக்கு தெரிந்த வரையில் தமிழ்நாட்டில் உண்மையிலேயே ஊழியம் செய்யும் ஒருவர் இருக்கிறார் .அவர் பெயர் அகஸ்டின் ஜெபக்குமார் .அவர் தூத்துக்குடியிலிருந்து கிளம்பிப் போய் பீகார் சென்று, பசி பட்டினியுடன் தவித்து, மெல்ல வளர்ந்து ,அங்குள்ள மக்களுக்கு சுவிசேஷம் அறிவித்து , தற்போது சுமார் 300 பள்ளிகள் அங்கு ஸ்தாபித்து ,அங்குள்ள மக்களை கிறிஸ்துவுக்கு நேராய் வழிநடத்தி, ஒரு உயர்ந்த ஊழியத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் .அவர் ஊழியத்தினால் பணம் சம்பாதிக்கவில்லை. அவருடைய சொந்த உபயோகத்திற்காக, ஊழியத்தின் கட்டிடத்தில் குடியிருக்கிறார். அதற்கு கூட அவர் வாடகை கொடுத்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய சுய உழைப்பில் தான் அவர் வாழ்கிறார் பவுல் அடிகளார் போல. ஆனால் இவரை குறித்து தமிழ்நாட்டு கிறிஸ்தவர்களுக்கு அதிகம் தெரியாது .அவருக்கு தெரிந்தவர்கள் எல்லாம் போலி ஊழியக்காரர்கள் தாம் .
                                        இவர்கள் எல்லாம் ஒன்றை  மட்டும் புரிந்து  கொள்ள வேண்டும் .மனிதர்களை ஏமாற்றி விடலாம்; ஆனால் தேவனை ஏமாற்ற முடியாது! விசுவாசமாக ஊழியும் செய்யவில்லையென்றால், அவருக்கு ஒருநாள் பதில் சொல்லவேண்டும் .இந்த உண்மையை உணர்ந்து அவர்கள் மனம்  திரும்பினால் நாட்டிற்கு நல்லது.

No comments:

Post a Comment