Friday, 11 December 2020

தரம் தாழ்ந்து வரும் தமிழ்த் திரை நகைச்சுவை !

  


                               நான் சிறுவனாக இருந்த 60 களில் தமிழ் திரையில் ஜொலித்துக் கொண்டிருந்த நாகேஷ் ,சந்திரபாபு ,சோ ,மனோரமா போன்றவர்களின் நகைச்சுவைக் காட்சிகள், இன்றும் மனதை விட்டு அகலாமல்  நிற்கின்றன .தூய்மையான நகைச்சுவை காட்சிகள் .யாரையும் புண் படுத்தாமல் ,சுத்தமான நகைச் சுவைக் காட்சிகள் !.ஆனால் இன்றய நிலைமை யோ  கவலை அளிக்க க்  கூடியதாக இருக்கிறது.எப்படி  ?

இப்போதைய காட்சிகள் ! 
                                         அன்றைய காலக் கட்டத்தில் நகைச்சுவை ஒரு தனி கிளை க் கதையாக அல்லது கதையுடன் பின்னப்பட்டு  ,ஒரு அடிப்படை கருத்தோடு  அமைக்கப் பட்டிருக்கும்.பல முறை சிரிப்பையும் சிந்தனையையும் உருவாக்கும் காட்சிகளாக இருக்கும்.'திருவிளையாடலில் ' தருமியின் பாத்திரம் ,'அன்பே வா ' படத்தில் நாகேஷின் காட்சிகள்,'தேன் மழை' திரைப்படம் ,  எல்லாம் நினைத் தாலே சிரிக்கும் காட்சிகளாக இருந்தன. .
                                     ஆனால் இன்றைய நாளில் நகைச்சுவை காட்சிகள் அமைக்கும் விதம் முற்றிலுமாக மாறி விட்டது.எப்படி ?
  • இரட்டை பொருள் படும் படியான, 'அசிங்கமான ', இளைய சமுதாயத்தை தப்பான பாதையில் கொண்டு செல்லக்கூடிய காட்சிகள் மிகுதியாக  வருகின்றன.தாயாய் மதிக்க வேண்டிய வயதுடைய பெண்களையும் காமக் கண்ணோடு பார்ப்பது போல் காட்சிகள்.இன்னொருவரின் மனைவியையும் இச்சையோடு பார்ப்பது போல் காட்சிகள் !கல்லூரியில்  பெண்கள் காதலுக்கத்தான் வருவது போலவும் ஆண்கள் எல்லாம் அதற்காக அலைவது போலும் காட்சிகள்.
  • அடிப்பதும்  ,கொல்லுவதல்லாம் நகைச் சுவையா ?கொதிக்கும் வெந்நீரை முகத்தில் வீசுவது 'சிரிப்பா ' ? ஒரு குறிப்பிட நடிகரை அடிப்பது தான் ,எல்லா படங்களிலும் நகை சுவையாக  காட்டப்படுகிறது .எதற்கெடுத்தாலும் அரிவாள்களை தூக்கிக் கொண்டு விரட்டுவது போல் காட்சிகள்.பார்க்கும் குழந்தைகள் எல்லோரும் ,அரிவாளை தூக்குவதும் ,ஆளை அடிப்பது ஒன்றும் தவறில்லை ,நகைச் சுவை தான் ,என்று நம்ப வைக்கிறது இப்படியான காட்சிகள்.அப்புறம் தெருவில் யாரயாவது உதைத்தால் ,நம் இளைஞரெல்லாம்  ,விழுந்து விழுந்து சிரித்து விட்டு போய் விடுவார்கள் !ஆண்களை அடிக்கக்  கூடாத இடத்தில அடித்தால் மரணம் தான் .ஆனால் அப்படி அடிப்பது தமிழ் படங்களில் 'ஜோக் ' ! 
  • இன்னொரு மோசமான போக்கு என்னவென்றால் ,ஏமாற்றி ஒருவரை எதிலாவது மாட்டி விடுவது நகைச்சுவையாக கருதப்படுவது  தான் .ஒரு படத்தில் மின்சார மோட்டார் ஒன்றை சரிசெய்து கொண்டிருக்கும் ஒரு நடிகரை ,இன்னொரு நடிகர் மின்சாரத்தை பாய விடுகிறார் .உடனே அவர் அலறுகிறார் .என்ன ஒரு 'ஜோக் ' ! இதை எப்படி சிரிப்பாக கொள்வது ? அப்பாவிகளை பிரச்னையில் மாட்டி விடுவது நல்ல நகைச்சுவையா ?
  • ஆட்களை அசிங்கமாக வருணித்து பேசுவது அடுத்த நகைச்  சுவை !'போண்டா தலையா ,உன் கரடி மூஞ்சிக்கு ,தவக்களை ,போன்ற சொற்கள் எல்லாம் 'ஜோக் ' தானா ?சிந்திக்க வேண்டும் . 
  • அடுத்தது ,பெரியவர்களை அவமதிப்பது ,ஆசிரியர்களை ஏமாற்றுவது போன்ற காட்சிகள் 'நகைச்  சுவையாக, வரம்பில்லாம்மல் காட்டப்படுகிறது .இவைகள் பார்ப்பவரின் மனதை நிச்சயமாக பாதிக்கும் என்பதில் ஐயமில்லை .
                                         இந்த காட்சிகள் எல்லாம் சமுதாயத்தை ,குறிப்பாக இளவயதினரை மிகவும் பாதித்து ,அவர்களுடைய நல்ல பண்புகளை ,தவறான பாதையில் கொண்டு செல்லக்  கூடியது என்பதை உணர்ந்து கொள்வது எல்லோருக்கும் நல்லது .புதிதாக வந்திருக்கும் நடிகர் சங்கத்தினர் இதை கருத்தில் கொண்டு ,சமுதாய நலனுக்காக ,இந்த மாதிரி காட்சிகளை தவிர்த்து ,நல்ல சுத்தமான  நகைச்சுவைக்  காட்சிகள் வரும் படியாக ,சம்பந்தப் பட்டவர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். நம் குழந்தைகளிடம் இதைக் குறித்து பேசி புரிய வைப்பதும் நல்லது . இத நான் ஒரு சமுதாயக் கவலையோடு தான் பதிவு செய்கிறேன் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை .
-------------------------------------------------------------------------------------
(வலைத்தமிழ்.காம்  இணைய இதழில் 5/11/2015 அன்று வெளியானது )

Monday, 7 December 2020

தமிழை சிதைக்கும் காரணிகள் !

 எந்த ஒரு தமிழ் வார இதழ் வாசித்தாலும் எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி  பார்த்தாலும் , ஒன்று மட்டும் பொது வாக காண ப்படுகிறது ..அது என்ன வென்றால் ,அதில் சுமார் 30% சொற்கள் ஆங்கிலமாக கலந்து இருப்பது தான்  .இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால் விரைவில் தமிழ் மொழி ஒரு சிதைப்பட் ட 'தங்க்லீஷ் 'ஆக மாறிவிடும் அபாயம் உள்ளது . இதை தமிழர்கள் ஆகிய நாம் எப்படி தடுக்கலாம் ?

தமிழர்களின் அளவில்லா ஆங்கில  மோகம் 
                           தமிழ் நாட்டை பொருத்தவரையில் , ஆங்கிலேயர் ஆண்ட காலத்திலிருந்து ஆங்கில மோகமும் நம்மை ஆண்டுகொண்டு இ ருப்பதை  யாராலும் மறுக்கமுடியாது . இந்த ஆங்கில ஆதிக்கம், நம் சிந்தனையையும் ஆண்டு கொண்டு தமிழை ,தமிழில் பேசுவதை புறந்தள்ளிக் கொண்டிருப்பதை நம் கண் கூடாக காண்கிறோம் .நம் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் பெருமையுடன் சேர்த்து ,அவர்களை அதில் பேச ஊக்குவித்து ,எல்லோரிடம் சொல்லி மகிழும் ஒரே இனம் நம் தமிழ் இனந்தான் !  இதற்கெல்லாம் காரணம் தான் என்ன ? நம்மை அறியாமலேயே நாம் தமிழை அழித்துக் கொண்டிருக்கிறோமா ? ஏன் இந்த சுய வெறுப்பு ?
என்னுடைய சிங்கை அனுபவம் 
                           சிங்கப்பூர் சென்றி ருந்த போது ,'வாட்ச் ' வாங்குவதற்காக ,ஒரு கடையில் சென்று  நான் 'வாட்ச் ' வேண்டும் என்றேன் .அங்கிருந்த தமிழ்ப்  பெண் 'அண்ணாச்சி ,மணிக் கடிகாரமா ?' என்று அழகான தமிழில் கேட்க, நான் பதிலுக்கு ,திரும்பவும்  'ஆமா ,வாட்ச் தான் 'என்று சொல்ல , அந்தப்பெண் திரும்பவும் அதே கேள்வியை கேட்க, நான் திரும்பவும் ,அதே பதிலை சொல்ல ,ஒரே வேடிக்கை தான்,போங்கள்  ! சிறிது நேரம் கழித்து தான் எனக்கு அவர்கள் தூய தமிழ் பேசுவதே புரிந்தது ! ஏன் நான் அதைக் கூட புரிந்துக் கொள்ளவில்லை ? என் மேல் தப்பா ?அல்லது நம்முடைய தமிழ் சமுதாயம் மேல் தப்பா ?
                         இதைப் போல் இன்னொரு சம்பவம் .இந்த முறை இது நடந்தது கன்னியாகுமரியில் .சூரிய அஸ்தமனத்தை ரசித்துக் கொண்டிருந்த என்னை ஒருவர் தமிழில் ஏதோ கேட்டார் .நான் அதற்கு ஆங்கிலத்தில் பதில் கூறினேன் .இரு முறை என் ஆங்கில பதிலை கேட்டுவிட்டு ,அவர்  என்னிடம் "நீங்க ,தமிழன் தானே ? பின்னே ஏன் தமிழ்ல பதில் சொல்ல மாட்டேன்கிறேங்க ?" என்று ஓங்கி  கன்னத்தில் அறை விட்டது போல் கேட்டார் .எனக்கு ஒரே அவமானமான உணர்வு ! சே !இனிமேல் இருந்து தமிழ்ல தான் பேசணும் என்று முடிவெடுத்தது தான் ,அதன் பிறகு ஒரு நாள் கூட தப்பி தவறி கூட ஆங்கிலத்தில் பேசவில்லை என்று சொல்வேன் என்று எதிர் பார்க்காதீர்கள் ! இன்னும் முயன்று கொண்டுதானிருக்கிறேன் ,முடியவில்லை .ஏன் ?
நம்மை இயக்கும் நம் உள் மனது !
                                 நாம் அன்றாடம் செய்யும் செயல்கள் எல்லாம் நாம் சிந்தித்து செய்பவை அல்ல .சுமார்  75% அனிச்சை(reflex) செயலாக நடை பெறுவது தான் .இந்த அனிச்சை செயல்கள் உள்மனதின் ஆழத்தில் திட்டமிடப் பட்டு(programmed) பதிவாயிருக்கிறது .நாம் நினை த்தால் கூட இதை மாற்றுவது கடினம் .உம் .யாராவது என் காலை மிதித்தால் நான் 'அம்மா ' என்று கத்தாமல் 'தாத்தா ' என்று கத்துவேன் என்று  முடிவெடுத்து பாருங்கள் !என்ன முயன்றாலும்  'அம்மா' என்று தான் கத்த வரும் ! ஏன் என்றால் அது உள்மனதின் பதிவு.அதை உள்மனது நுழைந்து தான் மாற்ற முடியும் .உள்மனதில் இதைப்  பதிப்பது யார் ?
உள்மனதை ஊடுருவும் ஊடகங்கள் !
                          நான் சிறுவனாக இருந்த போது என்னுடைய நடை ,உடை,பாவனை எல்லாவற்றையும் பாதித்தது என்னுடைய குடும்பம்,ஆசிரியர்,சமூகம் ,அப்புறம் ஒரு அளவுக்கு திரை ப்படங்கள் போன்றவை தான் .என்னுடைய தமிழை தீர்மானித்ததும் இவை தான் .தொலைக் காட்சியோ ,வலைத்  தளங்களோ இல்லாத காலம் அது .என்னுடைய தமிழ் ஆங்கிலம் அதிகம் கலக்காத அழகு தமிழாக இருந்தது .ஆனால் இப்போது என் 1ம் வகுப்பு படிக்கும் பேத்தியிடம் தமிழில் பேசுவதை விட ஆங்கிலத்தில் பேசுவது எளிது ,என்கிற அவல நிலை க்கு தள்ளப் பட்டிருக்கிறோம் .காரணம் ,நம்மை சூழ்ந்திருக்கும் எல்லாம் நம்மை பாதிக்கின்றன .ஆங்கிலக் கல்வி ,ஆங்கிலம் பேசினால்தான் உயர்வு என்று நினைக்கும் ஆசிரியர் ,நண்பர்கள் ,சமூகம் ,ஊடகங்களில் 30% ஆங்கில ஊடுருவல் ,நடிகர்களின் ஆங்கில உரையாடல்கள் இவை யாவும் நம் உள் மனதை ஆள்வதால்,நாம் முடிவெடுத்தாலும் கூட தூய தமிழில் பேசுவது ஒரு பெரிய சவாலாகத் தான் இருக்கிறது .இவைகளில் தொலை காட்சி நிகழ்ச்சிகள், தாம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது . பல நிகழ்ச்சிகள் பெயரே ஆங்கிலம் கலந்த பெயராகத் தான் இருக்கிறது.தற்போதைய ஊ டகங்கள் ,தொலைக்காட்சி ,வலை  மற்றும் அலை பேசி மூன்றும் உடலோடும் உள்ளத்தோடும் பிரியாத ஒன்றாகிவிட்டன .அதனால் அவைகளின் தாக்கத்தை என்ன முயன்றாலும் கட்டுக்குள் கொண்டு வரமுடியாது என்பது தெளிவான உண்மை.
'பண்ணி ' தமிழ் படுத்தும் பாடு !
                              தமிழர்கள் எல்லோரும்  இப்போது ஒரு விதமான  'பண்ணி' தமிழுக்கு மாறி விட்டார்கள்.அது என்ன, 'பண்ணி ' தமிழ் ?அது இது தான் !
                    கொஞ்சம் .'ட்ரை ' பண்ணிப் பார்த்து ,முடியலைன்னா 'கட் ' பண்ணிருங்க . 'மிக்ஸ் ' பண்ணும் போது 'கேர் புல்லா ' இருங்க ,அந்த 'லெவல் ' போயிடும்.இந்த தமிழ் நீடித்தால் தமிழ் ' ஐ சி யு வார்டில் '  அட்மிட் ' பண்ணும் நாள் தூரத்தில் இல்லை ! 
               இந்த அவல நிலையை மாற்றுவதற்கு நாம் என்ன செய்யலாம் ? தமிழை எப்படி காக்கலாம் ? இதுவரை இல்லாத இந்த ஒரு புதிய அச்சுறுத்தலை எப்படி எதிர் கொள்ளலாம் ?
தமிழைக்  காக்க என்ன செய்யலாம் ?
  • முதலில் தமிழுக்கு பெரிய  அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்து ,,அந்த செய்தியை சமூக ஊடகங்கள் மூலமாக வேகமாக  பரப்ப வேண்டும் .அழிவின் விளிம்பை நோக்கி தமிழ் செல்வதை குறித்து எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் .எதற்ககெல்லாமோ விழிப்புணர்வு பேரணி நடத்தும் நாம் இதற்கும் நடத்தலாமே ! 
  • நாம் ஒவ்வோருவரும் அன்றாடம் பேசும் தமிழில் ஆங்கில சொற்களை தவிர்த்து பேச வேண்டும் .இது கடினமாக இருந்தாலும் நம் தாய்க்காக செய்வதாய் நினைத்து கடமையாக செய்ய வேண்டும்.
  • நம் குழந்தைகள் நம்மைப்  பார்த்து கற்றுக்கொள்ளும் .இது அவர்கள் ஆங்கில அறிவை பாதிக்கும் என்று நினைக்க வேண்டாம்.
  • நம்முடைய சமூக ஊடகங்கள் பதிவுகள் தூய தமிழில் இருக்க வேண்டியது அவசியம் .அப்படி இல்லாத பதிவுகளை அன்புடன் கண்டிக்கலாம் .இதை நான் இப்போதே செய்து கொண்டிருக்கிறேன்.
  • தொலை காட்சி நிகழ்ச்சிகள்/வார இதழ்கள் போன்றவற்றில்  ஆங்கிலம் கலந்தால் நாம் எதிர்ப்பை கருத்தாகக் கூறலாம் .
  • தூய தமிழ் நிகழ்ச்சிகள் /இதழ்கள் ஆகியவைகளை ஊக்குவிக்க பரிசுகள் வழங்கலாம் .
  • எல்லாவற்றிற்கும் மேலாக தமிழிழ்  பேசுவதை நாம்  பெருமையாக  கொள்ள  வேண்டும் .
                              ஆங்கில  புலமையை  வளர்த்து கொள்வதில்  தப்பில்லை .அது  பிழைப்பிற்க்காக ! .ஆனால்  தமிழில்   பேசுவது நம்  தாய்க்கு  செய்யும் மரியாதை! .இரண்டு மலையாளிகள்  சந்தித்தால் அவர்கள்  மலையாளத்தில்  பேசுவார்கள் .இரண்டு தெலுங்கர்கள்  சந்தித்தால் தெலுங்கில்  பேசிக் கொள்வார்கள் .ஆனால் இர ண்டு  தமிழர்கள்  சந்தித்தால் மட்டும் அதிகமாக  ஆங்கிலத்தில்  தான் பேசிக்கொள்வார்கள் .
கவிஞர் ஆழிமலரின் குறுங்கவிதை  ஒன்று என்  நினைவுக்கு வருகிறது .
இதோ அந்த கவிதை .
   ஆங்கிலம் 
தமிழ் அறிந்த ஒரு தமிழனும் 
தமிழ் அறிந்த  இன்னொரு தமிழனும் 
பேசும் இணைப்பு மொழி !
மறக்க வேண்டாம் !
                            இந்த அவல நிலை மாறி" கல் தோன்றி மண் தோன்றா  காலத்தே, முன் தோன்றி மூத்த குடியின் பெருமையான தமிழைக்  காக்க தலையும் தருவேன்" என்று சொல்லும் தமிழர்கள்  இருக்கும் இந்த தமிழ்நாட்டில்  நான் சொன்ன தெல்லாம் மிக எளிது தான் .
                                             இணைந்து தமிழை உயர்த்துவோம் !
.                                                                 வாழ்க தமிழ் !. 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
                          
(வலைத்தமிழ் இணையத்தில் 2/11/2015 ல் வெளியிடப்பட்டது .மறு வெளியீடு )