அம்மா !அம்மா! நீ எங்கே?
அம்மா !அம்மா! நீ எங்கே?
அழுது அழுது ஓய்ந்து விட்டேன்!
உன்னைக் காணவில்லை!
காலையிலே கண் விழித்தேன்!
உன்னைக் காணவில்லை!
பாலுக்காக அழுதேன்!
அழுகுரல் கேட்டதும் ரவிக்கையே நனைந்து விடுமாம் !
பால் எல்லாம் துணியில் ஒழுகுமாம்!
சொல்வார்கள் பாட்டிகள் !
ஆனால் இப்போது என் அழுகையை கேட்டு,
பால் கொடுத்தது கூட நீ இல்லை !
அதற்கு நீ நியமித்த பணிப்பெண் !
'சீக்கிரம் பால்குடி சனியனே!
சீரியல் பார்க்க வேண்டும் எனக்கு!'
பணிப்பெண்ணின் அதிகார குரல்!
எங்கே போய்விட்டாய் அம்மா?
என்னை விட உனக்கு அப்படி என்ன அம்மா முக்கியம்?
காலையிலே உதட்டு சாயம் பூசிக்கொண்டு
பேருந்துக்கு முந்தியடித்து ஓடினாயே! எதற்கம்மா?
என்னை விட என்னம்மா அப்படி முக்கியம்?
எதற்கம்மா ஓடுகிறாய்?
எல்லாம் உனக்காகத்தான்!
என்றெல்லாம் நீ சொன்னால் நான் நம்ப மாட்டேன்!
நீ நன்றாக படிப்பதற்கு தான் நான் பணம் சம்பாதிக்கிறேன்!
என்பதெல்லாம் வேண்டாம்,கேட்டு சலித்த கதை!
எனக்கு அதெல்லாம் வேண்டாம் அம்மா !
அதற்குத்தானே அப்பா இருக்கிறார்!
எனக்கு நீ தான் வேண்டுமம்மா !
உன் அணைப்பு வேண்டுமம்மா!
நிலவை காட்டி ஊட்ட வேண்டும் அம்மா !
நீ முழு நேர தாயாக எனக்கே எனக்காய் வேண்டும்!
பணத்திற்காக ,என்னை தவிக்க விட்டு விட்டு
பகலில் நீ எங்கும் போக வேண்டாம் அம்மா!
எனக்காக படைக்கப்பட்டவள் நீ அம்மா!
பேணுபவள் என்பதால்தான் உன் பெயர் பெண்!
உன்னிடம் தான் அம்மா பால் புட்டி உள்ளது !
உனக்குத் தெரியுமாம்மா மனித இனம் பாலூட்டி இனமென்று!
பின்னர் எனக்கு பாலூட்டாமல் எங்கே சென்றாய் அம்மா!
அப்பாவும் பாலூட்டி இனம் தான் என்றாலும்
அவரால் பாலூட்ட முடியாது அம்மா!
அப்பாவின் அணைப்பில் பால் கிடைக்கவில்லை!
ஆனால் அவர் நெஞ்சின் ஈரம் எனக்குத் தெரிந்தது!
பகுதி நேர தாயாக ,பகல் நேரம் பக்கத்தில் இல்லாமல்
நான் தூங்கிய பின் கொஞ்சும் தாயாக, எனக்கு வேண்டாம் அம்மா நீ !
எனக்கு தாயாக நீ பெருமை கொள்ளாமல்
ஓட்டம் ஓடி சாதிக்கிறாய்!
பாட்டு பாடி கைதட்டல் வாங்குகிறாய் !
நன்றாக நடித்து நான்கு கோடி வாங்குகிறாய் !
காவல்துறை கால் சட்டை போட்டுக் கொண்டு
நேரம் பாராமல் நின்று கொண்டு உழைக்கிறாய்!
நேற்று நான் பார்த்தேன் உன்னை டிவியில்!
இங்கு என் வேதனை தெரியாமல் ,பசி புரியாமல்
சிவப்பு பேண்ட் போட்டுக்கொண்டு,சிரித்துக்கொண்டே
சிங்கப் பெண் விருது பெற்றது நீ தானே அம்மா ?
ஆண்டவர் பெண்களை இதற்காகவா படைத்தார் ?
வேலை செய்ய தான் ஆண்களை படைத்திருக்கிறாரே !
ஆண்களால் குட்டி போட்டு பாலூட்ட முடியாது என்றுதானே
ஆண்டவர் பெண்களைப் படைத்திருக்கிறார் அறிவாயா அம்மா ?
படைத்தது, குட்டி போட்டு, பாலூட்டி, குடும்பத்தைப் பேணுவதற்கு!
அதை விட்டுவிட்டு எங்கு போய் சாதனை புரிகிறாய் ?
யாருக்காக சாதனை புரிகிறாய் ?
என்னை அழவிட்டுவிட்டு ,யாருக்காக உழைக்கிறாய் ?
சொல்லம்மா சொல்!
உன்மேல், உன் அன்பின் மேல், உன் அணைப்பின் மேல்
எனக்குத் தான் அம்மா முதல் உரிமை !
வா அம்மா வா !
வீராங்கனையாக அல்ல !நடிகையாக அல்ல! தலைவியாக அல்ல !
நல்ல ஒரு தாயாக மனம் திரும்பி வா!
இது ஆண்டவன் கட்டளை அம்மா !
வா அம்மா வா! தாயாக திரும்பி வா!
நான் தூங்கும் முன் வா!
ஆண்டவன் அளிப்பார் உன் அன்புக்கு விருது !
தாய்மைக்கு உயரிய விருது !
நானும் அளிப்பேன் கட்டி பிடித்து
கட்டி முத்தம் ஒன்று !
விலை மதிப்பற்ற
அது ஒன்று போதும் அம்மா உனக்கு!
வா திரும்பி வா அம்மா !
அழுகையுடன் காத்திருக்கிறேன் !
No comments:
Post a Comment