Monday, 13 October 2025

பட்டியல் இனத்தின் உயர்பதவி அதிகாரிகள் அந்த இனத்திற்கு ஏன் உதவி செய்வதில்லை?

 தமிழகத்தின் கீழ் சாதியாக கருதப்பட்ட சாதிகளில் தற்போது மிகவும் முன்னேறிய சாதி எதுவென்றால் அது சந்தேகமில்லாமல் நாடார் சாதிதான் என்று சொல்லலாம். ஒருகாலத்தில் கிட்டத்தட்ட தீண்டத்தகாத சாதியாக கருதப்பட்டவர்கள் அவர்கள்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே தீண்டத்தகாதவர்கள் நுழையும் போராட்டம் நடக்கும் போது, அதில் நாடார்  ஒருவரும் சேர்க்கப்பட்டார் .தென்திருவிதாங்கூர் எல்லைகளில் ஒரு சொல்  நிலவி வந்தது. அது என்னவென்றால்'புலையனை  தொட்டால் தான் தீட்டு! சாணானை  பார்த்தாலே தீட்டு!'என்பதாகும் . அதாவது நாடார்களை பார்த்தாலே தீட்டு என்ற அளவில் அப்போது அவர்களை  வைத்திருந்தார்கள்.அப்படியிருந்த  அந்த சமுதாயம் ,இப்போது கல்வி, செல்வம், அறிவு,தொழில் , விஞ்ஞானம் என்று எல்லாவற்றிலும் உயர்ந்து நிற்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியாவின் தலையாய 10 பணக்காரர்களில் ஒருவர் சிவ நாடார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

 இவர்கள் இந்த அளவு முன்னேறுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்களின் சாதிப் பெருமையும் ,ஒற்றுமையும் தான் . உதாரணமாக, ஒரு நாடார் சென்னையில் வந்து ஒரு சிறிய அளவில் பல சரக்கு கடை வைக்கிறார். அது வளர வளர ,அவர் தன்னுடைய சொந்த ஊரிலிருந்து,தெரிந்த  ஏழை நாடார் சமூகத்தினரை அழைத்து வந்து வேலை கொடுக்கிறார்.அதாவது ,நாடார்  ஒருவர் உயர்ந்த நிலைக்கு வந்தால், அவர் நிலையை /பதவியை பயன்படுத்தி  கீழே இருக்கும் நாடார்களை ,ஒரு  கை கொடுத்து தூக்கி விடுகிறார். ஆக, இந்த நாடார் சமூகம் முழுவதும் ஒன்றாக வளர்ந்து ஒரு நல்ல நிலைக்கு வருகிறது.

இப்படியான ஒரு தூக்கி விடும் குணம்  உயர் பதவியில் இருக்கும் பட்டியலின அதிகாரிகளுக்கோ அல்லது உயர்ந்து வளர்ந்த பட்டியலின சாதனையாளர்களுக்கோ ஏன்  வரமாட்ட வரமாட்டேங்கிறது என்பதே இன்றைய ஆய்வின் நோக்கமாகும் .

இன்று உலக அளவில் உயர்ந்து நிற்கும் இசைஞானி இளையராஜா பரையர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும் .தன்னுடைய திறமையினால் பல எதிர்ப்புகளை அவர் வென்று ,இன்று இசை உலகில் ஒரு  இமாலய உயரத்திற்கு வந்திருக்கிறார்.அவர் சாதனைகள்  உலகெங்கும் பேசப்படுகிறது . தமிழக அரசு கூட அவரை கௌரவித்து ஒரு விழா எடுத்துள்ளது. அந்த அளவு உயர்ந்து நிற்கும் அவர், தான் பிறந்து வந்த அந்த சமூகத்திற்கு, அதில் இருக்கும் ஏழை மக்களுக்கு ,அதில் உதவிக்காக ஏங்கி நிற்கும் இளைஞர்களுக்கு,என்ன செய்திருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.அவர் நினைத்திருந்தால், அவர் சமூகத்திற்காக, அதன் முன்னேற்றத்திற்காக, சூர்யா செய்தது போல ,ஒரு தனி அறக்கட்டளை நிறுவி இருக்கலாம். அதில் பலருக்கு படிப்பு உதவி செய்திருக்கலாம். பலரை அவருடைய இசை கூடங்களில் பணி அமர்த்தியிருக்கலாம் .ஆனால் அப்படி எதுவுமே அவர் செய்யவில்லை.அவர் நினைத்திருந்தால், அவருடைய செல்வாக்கை பயன்படுத்தி, தமிழக முதல்வரிடம் பல பரையர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கலாம். உயர் பதவிகள் வாங்கி இருக்கலாம். ஆனால், அவர் அப்படி ஒன்றும் செய்ததில்லை.அப்படி என்றால் இளையராஜாவினால் பயன்பெற்றவர்கள் ஒருவர் கூட இல்லையா என்று நீங்கள் கேட்கலாம் .இருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால்,அவரால் பயனடைந்தவர்கள் எல்லோருமே உயர்சாதியினரும், மற்ற மாநிலத்தவரும்  தான். ஒருவர் கூட அதில் அவர் சமூகத்தை சேர்ந்தவர் கிடையாது. அவர் குடும்பத்தினர் மட்டும் அவரால் பயனடைந்து இருக்கலாம். அவர்களும் யாருக்கும் எந்த உதவியும் செய்யவில்லை. இளையராஜா வீட்டில் வேலை செய்யும் ஆட்கள் கூட மற்ற சமூகத்தினாகத்தான் இருக்க முடியும் .ஏன் இப்படி இவர் சமூக சிந்தனை சிறிது கூட இல்லாமல் இருக்கிறார்?

இதே போல பல பரையர்கள் அரசு உயர் பதவிகளில் உள்ளனர்.ஐஏஎஸ், ஐபிஎஸ்,ஐஜி, முதன்மை செயலாளர் , செயலாளர் போன்ற பல உயர் பதவிகளில் இவர்கள் இருந்திருக்கிறார்கள்/இருக்கிறார்கள். அவர்களிடம் ஏதாவது உதவி கேட்டு அவர்கள் சமூகத்தை சேர்ந்த ஏழைகளோ அல்லது மாணவர்களோ சென்றால், அவர்கள் உதவி செய்வதே இல்லை என்பதே அந்த மக்கள் அவர்கள் மேல் வைக்கும் குற்றச்சாட்டு.இவர்கள் ,அவர்களை தொடர்பு கொள்வதை கூட அவர்கள் விரும்புவதுமில்லை.  மற்ற சாதிகளில் ஒருவர் பதவி உயர்வு பெற்றிருக்கிறார் என்றால் அந்த சமூகத்தினர் எல்லோரும் மகிழ்ச்சி அடைவார்கள் .ஏனென்றால்,அதனால் அவர்களுக்கும்  பயன் கிடைக்கும். ஆனால் ,சமூகத்தில் ஏற்கனவே எல்லா வகையிலும் புறக்கணிக்கப்பட்டு நிற்கிற பரையர்களுக்கு ,ஒரு விதமான உதவியும் கிடைக்காத இந்த அப்பாவி பரையர் சாதி மக்களுக்கு ,அவர்களில் யாராவது உயர் பதவி அடைந்தால், இந்த சமூகத்தை அவர்கள் மொத்தமாக விட்டு விட்டு,  மேல் சாதியினருடன்  ஐக்கியம் ஆகிவிடுகிறார்கள்  என்பதே அந்த சமூக ஏழைகளின் குற்றச்சாட்டு.அதில் பலர் ,உயர்ந்த நிலை வந்தவுடன், தன் சமூக பெண்களை கூட  திருமணம் செய்யாமல், வேறு சமூகத்தை சார்ந்தவர்களை திருமணம் செய்வது ஒரு பெரிய கொடுமை .தன் சமூக பெண்களை இவர்களே திருமணம் செய்யவில்லை என்றால் வேறு யார் வந்து திருமணம் செய்வார்கள்? என்பதே கேள்வி .இளையராஜாவும் அது போல், பிராமணர்களுடனும் ,தெலுங்கர்களுடனும் , மலையாளிகளுடனும்  ஐக்கியமாகிவிட்டார் .அவருடைய அடையாளத்தை முற்றிலும் மறந்து விட்டார் என்பதே  அவர் மேல் உள்ள குற்றச்சாட்டு.இதில்  அவர் எந்த அளவுக்கு செல்கிறார் என்றால், இவருடைய சமூகத்திற்கு எதிராக படம் எடுக்கும்  சமூகத்தினருக்கு கூட, இவர் பட இசை அமைத்துக் கொடுக்கிறார் என்னும் குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது.இவர் சமூகத்திற்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு எதிராக எந்த நேரத்திலும் குரல் எழுப்புவது இல்லை. ஆக, இவரால் இந்த சமூகத்துக்கு  ஒரு எள்ளளவும் உதவி இல்லவே இல்லை .

இப்படியாக உயர்நிலைக்கு செல்லும் பரையர்கள் இந்த சாதியை விட்டு வெளியே போவதற்கும், வேறு சாதியினருடன் தங்களை அடையாளப்படுத்துவதற்கும், என்ன உளவியல் காரணம் உள்ளது ?என்று நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இதைகுறித்து பேசுவதற்காக, எனக்குத் தெரிந்த உயர்பதவியில் இருக்கும் ஒரு பட்டியலினத்தை சார்ந்த அரசு அதிகாரியை நாடினேன். அவர் பேச தயாரானார் .ஆனால் ,ஒரே ஒரு நிபந்தனை போட்டார். அவருடைய பெயரை வெளியே சொல்ல கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை. அது நியாயமான நிபந்தனை தான். சுமார் ஒரு மணி நேரம் அவருடன் இதைக் குறித்து பேசினேன் .அவர் சொன்ன காரணங்கள் கேட்க மிகவும் சுவையாக இருந்தது.அதைத்தான் உங்களுக்காக கீழே தருகிறேன்.

  1. பொதுவாக, அதிகாரமிக்க முக்கிய பதவிகளில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களை போடவே மாட்டார்கள். அப்படி போட வேண்டிய சூழ்நிலை வந்தால் ,வேறு வழியே இல்லை என்றால் ,தமிழ் நாட்டில்  தெலுங்கு பட்டியலின நபரை போடுவார்கள்.
  2. இந்த இட ஒதுக்கீடு கொள்கையை முறையாக அமுல்படுத்துவதற்காக,மத்திய  அரசு ஒரு கையேடு ஒன்று  வெளியிட்டுள்ளது .அதன் பெயர்: BROCHURE .அந்தப் புத்தகத்தின் படி சரியாக போட்டால், பட்டியல் இன மக்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு, சுழற்சி முறையில் சரியாக கிடைத்து விடும்.எடுத்துக்காட்டாக, 2023 வருடத்தில் 100 பட்டியலின நபர்களை தெரிந்தெடுக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம் .ஆனால்,அவர்கள்  60 பேர் தான் தேறியிருக்கிறார்கள் என்றால், மீதி உள்ள 40 இடங்களும் 2024 வருடத்தின் இட ஒதுக்கீட்டில்  கூட்டி  அதிகமாக சேர்க்கப்படும். ஆக 2024 ல்,100+40= 140 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இவ்வாறாக, மூன்று வருடங்களுக்கு தொடர்ச்சியாக செய்ய வேண்டும் .அதற்குள் தகுதியான ஆட்கள் கிடைக்கவில்லை என்றால், அந்த அதிகபட்ச இட ஒதுக்கீட்டை ரத்து செய்யலாம் என்று உள்ளது. அந்த சுழற்சி பதிவேடு ROSTER கண்காணிக்கும் அதிகாரி ,முடிந்த அளவு ஒரு பட்டியலின அதிகாரியாக போட வேண்டும் என்று ஒரு விதி உள்ளது . அப்படி ஒரு பட்டியலின அதிகாரியை ,வேறு வழியில்லாமல் எடுக்க வேண்டும் என்றால், அவர் மேலிடத்திடம் ஒத்துழைப்பு கொடுப்பவராக இருக்க வேண்டும். அதாவது அந்தப் பதிவேட்டில் தப்பாக பதிவு செய்ய வேண்டும்.பட்டியலின மக்களுக்கு கிடைக்க வேண்டியதை, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில்,. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்கு கொடுக்கும் அதிகாரியாக இருக்க வேண்டும். அதாவது அந்தப் பதிவேட்டில் செய்யும் ஊழல் எல்லாவற்றிற்கும் கையெழுத்து போடும் அதிகாரியாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதி.
  3. ஒரு பட்டியலினத்தவர் ஒரு அதிகாரம் மிக்க பதவியில் அமர்த்தபட்டால், அதற்கு முன், இன்னுமொரு  எழுதப்படாத விதி உள்ளது .அது என்னவென்றால், இவர் எந்த காரணம் கொண்டும் தன் இனத்திற்கு சாதகமாக எதுவும் தவறி கூட செய்யக்கூடாது என்பதுதான்.அவரை அந்த வேலையில் அமர்த்துவதற்கு முன்பே அதை உறுதி செய்து கொள்வார்கள். அமர்த்தியபின் இதைக் குறித்து அவரை சுற்றி இருக்கும் மற்ற சாதி அதிகாரிகள் எல்லோரும் ,இவர் மேல் கண்ணும் கருத்துமாக கண்காணிப்பார்கள் .இவர் ஏதாவது அவர் சார்ந்த சமூகத்திற்கு நன்மை செய்கிறாரா, அப்படி செய்தால்  உடனே அவரை அந்த இடத்தை விட்டு மாற்றி விட வேண்டும் என்று ஆவலாக இருப்பார்கள்.அப்படி நடந்தால் ,உடனே மேலதிகாரிகளுக்கு கோள் சொல்லி, இந்த சாதகமான  அதிகாரியை அந்த  இடத்தை விட்டு மாற்றி விடுவார்கள்.ஆகவே  தான் , பட்டியலின அதிகாரிகள் தன் இனத்திற்கு எந்த வித உதவியும் செய்ய மிகுந்த தயக்கம் காட்டுவார்கள்.அவர்களைத் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ள மாட்டார்கள்.இதை அவர்கள் தங்களை/தங்கள் பதவியை  பாதுகாத்துக் கொள்ளவே  செய்கிறார்கள்.
  4. அப்படி என்றால் அதிகாரம் உள்ள பதவியில் அமர்த்தப்பட்ட பட்டியல்    இன அதிகாரிகள் ,தங்கள் இனத்திற்கு எந்தவித நன்மையும் செய்யவே வாய்ப்பில்லையா என்று கேட்டால், வாய்ப்பு உள்ளது என்றுதான் சொல்லலாம். எப்படி எப்படி செய்யலாம் என்பதை என்னிடம் பேசிய அந்த அதிகாரி விளக்கினார்.முதலில் தன்னுடைய மேலதிகாரியிடம் மிகவும் பணிந்து, அடிமை போல் வேலை செய்ய வேண்டும். அப்படி செய்தால்  அவர்கள் ஆங்காங்கே ஒரு சில எலும்பு துண்டுகளை வீச வாய்ப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக, ஊழியர்கள் நியமிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் .இந்த பட்டியல் இன அதிகாரி தனக்கு வேண்டிய ஒரு தன் இனத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த ஒருவரை பரிந்துரை செய்து கேட்கலாம் .அப்போது மேலதிகாரி சரி என்று சொல்லலாம் .அதாவது ,அவருக்குத் தெரிந்து ,அவராக தூக்கிப் போடும் ஒரு எலும்பு துண்டு போல அதை வைத்துக் கொள்ளலாம்.அதிகமாக பட்டியலின அதிகாரிகள் மிகவும் தன்மானமிக்கவர்கள் .ஆதலால், இந்த வழியில் செல்வதற்கு கூச்சப்படுவார்கள் .அதையும் மீறி ஒன்றிரண்டு பேர் அவ்வாறாக செய்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது.
  5. அதிகாரம் மிக்க பதவியில் அமர்த்தப்பட்ட சில பட்டியலின் அதிகாரிகள், அவர்களுடைய உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் சில நன்மைகளை, தங்கள் இனத்தவருக்கு செய்ய வாய்ப்புள்ளது.அதை மிகவும் நாசூக்காகவும் , புத்திசாலித்தனமாகவும், மறைமுகமாகவும் செய்ய வேண்டியிருக்கும். அப்படி செய்யும் ஒன்று இரண்டு அதிகாரிகளையும் எனக்கு தெரியும் என்று என்னிடம் பேசியவர் கூறினார் .எடுத்துக்காட்டாக, 100 பேரை ஒரு இடத்திற்கு அனுப்ப வேண்டி இருக்கிறது என்றால், அதில் மெதுவாக ஒரு பட்டியலின நபரையும் சேர்த்துக் கொள்ள வைக்கலாம்.அவசரமாக நமது வங்கியின் லண்டன் கிளைக்கு ஒரு அதிகாரி தேவைப்படுகிறார், யார் யார் தகுதி உள்ளவர்கள் என்று கொடுங்கள் என்று மேல் அதிகாரி கேட்பார். உடனே இந்த பட்டியல் இன  அதிகாரி ,2 'பயோடேட்டா ' தாளை கொடுப்பார் .அதில் ஒரு முன்னேறிய சாதி நபரின் குறிப்பு இருக்கும் .ஆனால், அதில் ஏதாவது ஒரு பிரச்சனை மறைந்து இருக்கும்.இன்னொன்று , பட்டியலின  குறிப்பு. அது சிறந்ததாக இருக்கும்.குறிப்புகளை  கொடுத்துவிட்டு, மெதுவாக, சார், இவர் நல்ல திறமையானவர் தான். ஆனால், எஸ் .சி. என்பார். அவசரத்தைக் கருதி மேலதிகாரி பரவாயில்லை என்று அதை ஆமோதிக்கும்  சூழ்நிலையை உருவாக்குவார் !இப்படி ஒன்று இரண்டு நடந்திருக்கிறது என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.
  6.  மொத்தத்தில் ,அதிகாரமிக்க பதவிகளில் இருக்கும் பட்டியலினத்தவர்  , மற்றவர்களுக்கு அடிமையாகத்  தான் இருக்க வேண்டும். தனியாக அவர்களுடைய அதிகாரத்தை பயன்படுத்த முடியாது .அவர்களை எப்போதும் கண்காணிக்க படுவார்கள். ஆகவே ,அவர்கள் உதவி செய்ய வில்லை என்றால், அவர்களை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது.அவர்கள் நிலைமை அப்படி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .இல்லையென்றால் ,பாராளுமன்றத்தில் 230   உறுப்பினர்கள் SC /ST  சார்ந்தவர்கள்.அவர்கள்  ஒன்று சேர்ந்து ,என்னவெல்லாம் செய்யலாம். ஆனால், அவர்கள் சேரவே மாட்டார்கள். சேரவே முடியாது என்பது  உண்மை . இது மாறுவதற்கு வாய்ப்பேயில்லை என்பதே பொது கருத்து.