Thursday, 15 October 2020

இன்னிசை வேந்தன் இளையராஜா ஒரு தலித் இல்லை !


                                    இளையராஜா என்னும் மாபெரும் இசைக்கலைஞன், இப்போது தமிழ்நாடு, இந்தியாவைத்  தாண்டி ,உலக அளவில் பெயர்  பெற்ற ஒருவராக மாறியிருக்கிறார் . அவருடைய இசை தமிழகத்தின்  இசைப் பாரம்பரியத்தின் ஒரு பரிணாமமாக பார்க்கப்படுகிறது .
                                                                                       அவர் ஒரு பெரும் இசைக்  கலைஞராக இருந்தாலும்,திரைப்படங்களுக்கு  இசையமைப்பு செய்வதால் ,அவர் ஒரு இசை வியாபாரியாகவும் பார்க்கப்படுகிறார். அந்த வகையில் யார் யாரெல்லாம், அவர் கேட்ட தொகையை கொடுக்கிறார்களோ ,அவர்களுக்கு இசையமைப்பு  கொடுப்பது அவர் கடமை என்ற ஒரு  எதிர்பார்ப்பு  உள்ளது . ஆனால் ,அதையும் மீறி பல இடங்களில், தன்னிச்சையாக ஒரு முடிவெடுத்து ,சில படங்களுக்கு தான் இசை அமைக்க மாட்டேன், என்று மறுக்கிறார் என சொல்லப்படுகிறது .

                                                 குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், பெரியார் திரைப்படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைக்க மறுத்ததாக கூறப்படுகிறது.ஆனால் , சமீபத்தில் வெளியான ஒரு செய்தி, அவர் 'தேசிய தலைவர் 'என்று முத்துராமலிங்க தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப் போவதாகவும் ,அதற்கு இளையராஜா இசையமைப்பு செய்ய சம்மதித்திருப்பதாகவும்  செய்தி  வெளியாகியது .


                                                                   Image credit Times of India

                                                     இளையராஜாவின்  இந்த முடிவு சமூக ஊடகங்களில் ஒரு பேசு பொருளாக மாறியிருக்கிறது .கடந்தமுறை தேவர்மகன் படத்தில் இளையராஜா அவர்கள் இசையமைத்த'போற்றிப் பாடடி பெண்ணே ..'என்ற பாடல் ,தென் மாவட்டங்களில் சாதிக் கலவரங்களுக்கு  வித்தாக மாறியது என்பது ஒரு கவலைக்குரிய செய்தி. ஆம்,தென்மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் இந்த பாடலை வேண்டுமென்றே தலித்துகள் வாழும் பகுதிகளில் போட்டு அவர்களை துன்புறுத்தியதாக பல செய்திகள் வந்தன .குறிப்பாக அந்தப் பாடலில் வரும் ஒரு வரி 'போற்றி பாடடி பெண்ணே ,தேவர் காலடி மண்ணை ' என்ற பாடல் வரி தான் கலவரங்களுக்கு வித்திட்டது என்று சொல்லப்படுகிறது .ஆக, இளையராஜா, தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கு எதிராக, தான் இசையமைத்திருக்கும்  பாடலையே  பயன்படுத்தி, கலவரத்துக்கு ஒரு வகையில் காரணமாக மாறியது பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை, என்பது பல ஊடகவாசிகளின்  எண்ணம் .இப்படி ஒன்று நடந்த பின்பும், இந்த 'தேசிய தலைவர்' படத்திற்கு இசையமைக்க அவர் எப்படி சம்மதித்தார்  என்ற கேள்விதான் சமூக ஊடகங்களில் ஒரு பரபரப்பான பேசு பொருளாக மாறியிருக்கிறது .
                                       1976 களில்  இளையராஜா தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் வேளை ,  சகல சாதிய சக்திகளும் அவர் தலித் என்பதால் ,அவருக்கு பலத்த எதிர்ப்பை காட்டினர்.இசை உலகம் என்பது பிராமணர்களும்,அவர்களை  சார்ந்தவர்களும் மட்டுமே பிரவேசிக்க முடியும் என்ற  சூழ்நிலை இருந்த காலம் அது .சுப்புடு என்ற ஒரு பிராமண  இசை விமர்சகர் ,இளையராஜாவை எந்த அளவுக்கு மட்டம் தட்ட முடியுமோ அந்த அளவுக்கு முயன்று பார்த்தார் .ஆனால், இளையராஜா அதை எல்லாம் ஒன்றும் கண்டு கொள்ளாமல் ,தன்னுடைய சொந்த முயற்சியினால் இசை உலகில் இந்த அளவிற்கு யாரும் தொடாத ஒரு சிகரத்தை  அடைந்திருக்கிறார் ..
                                             சாதி அமைப்பை கட்டிக்காக்க ,பார்ப்பனியத்திற்கு பலவிதமான சூழ்ச்சி முறைகள் உண்டு. 'சாம,  பேத, தான, தண்ட ' முறைகள் என்று அவர்கள் அதை சொல்வார்கள் .ஒரு தாழ்ந்த சாதிக்காரன்  இதைப்போல ஒரு சாதனை செய்ய எத்தனித்தால்,  முதலில் முடிந்த அளவு அவரை அமுக்க பார்ப்பார்கள் .அதையும் மீறி அவன் வந்து விட்டான் என்றால் ,இறுதியில் அவரை பிராமணர்கள் கூட்டத்தில் ஒருவனாக சேர்த்துக்கொள்வார்கள் .இதை ஆங்கிலத்தில் Co -option என்று சொல் வார்கள் .இளையராஜா ,என்னதான் இசையில் ஞானியாக  இருந்தாலும் ,அவர்களுடைய  வஞ்சக வலையில் சிக்கி ,தான் சார்ந்த சமூகத்திற்கு எதிராகவே ,தன் திறமையை  அவர்கள் பயன்படுத்துவதை உணராமல் ,இதற்கு சம்மதித்திருக்கிறார் இன்று பலர் எண்ணுகிறார்கள். ஆக, இது பார்ப்பனியத்தின் வெற்றிதான், என்கிறார்கள் சில கூர்நோக்கர்கள் . தன்  கையைக்  கொண்டு தன் கண்ணைக் குத்த வைப்பது தான் ,அவர்களுடைய பெரும் சூழ்ச்சி .அந்த வலையில் இளையராஜா  விழுந்து விட்டார் என்பது ,சமூக ஊடகங்களில் ,ஒரு பெரும் கவலையளிக்கும் விடயமாக பார்க்கப்படுகின்றது.
                                                        இளையராஜாவின் நாற்பத்தைந்து வருட இசைப்  பயணத்தில் அவர் எங்கும் அவர் சார்ந்த சமூகத்திற்கு பயன்படும் படியாக எந்த பாடலோ  அல்லது சமூக சேவையோ  செய்ததாக தெரியவில்லை என்று பல தலித்துகள்  நம்புகிறார்கள். அதற்கு மாறாக ,அவரை அமுக்கிக்  கொண்டிருந்த பிராமணர்களுக்கு பல நன்மைகள் செய்து இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள் .குறிப்பாக ஸ்ரீரங்கம் கோயில் கோபுர  பணிக்காக சுமார் 13 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார் .ஆனால் அந்த பணி முடிந்து அந்த கோபுரத்தின் திறப்பு விழாவிற்கு  இளையராஜாவை அவர்கள் ஒரு பொருட்டாக நினைத்து அழைக்க கூட இல்லை, என்பது செய்தி .தான் சார்ந்த சமூகத்திற்கு, தான் ஒரு உயர்ந்த நிலைக்கு வந்த பிறகு ஏதாவது செய்ய வேண்டும், என்ற எண்ணம் இளையராஜாவுக்கு இருந்ததில்லை என்பதுதான் தலித் மக்களின் மனக்குறை .இளையராஜா  அவர் சார்ந்த சமூகத்திற்கு  எந்த வகையிலும் பயன்படக் கூடாது என்பதை உறுதி செய்ய செய்யத்தான் பிராமணர்கள் அவரை தங்களின் ஒருவராக மாற்றிக் கொண்டார்கள், என்பதும் ஒரு சாரார் கருத்து.
                                                                இளையராஜா மட்டுமல்ல, தலித் சமூகத்திலிருந்து உயர்நிலை அடைந்தவர்கள் எல்லோருமே ,தான் வந்த சமூகத்தை புறக்கணித்துவிட்டு ,மேல்தட்டு  வர்க்கத்தினருடன்  கைகோர்த்து நடமாடுகிறார்கள் ,என்பதும் ஒரு பெரும்  உண்மையாகும். இதனால் இட ஒதுக்கீடு போன்ற சில திட்டங்களால் பயன்பெற்று உயர்நிலையை எட்டிய தலித் மக்கள் தங்களுடைய சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கும் மற்றவர்களுக்கு கைகொடுத்து தூக்கி விடுவதில்லை. மாறாக இவர்கள் மேல்தட்டு மக்களுடன் இணைந்து பல இடங்களில் அவர்களுடன் சம்பந்தம் வைத்துக் கொண்டு  இந்த சமூகத்தை விட்டு  விலகி நிற்கிறார்கள் என்பது நிதர்சனம்.மற்ற சமூகத்தில் இதுபோல் நடப்பதில்லை. எடுத்துக்காட்டாக,கிட்டத்தட்ட தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்ட நாடார் சமூகதிலிருந்து  இப்போது வியாபாரத்தில் பலர் உயர்ந்து நிற்கிறார்கள் . அவ்வாறு உயர்ந்தவர்கள் அவர்கள் சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கும் கிராமப்புற  மக்களுக்கு  பலவிதமான உதவிகள் செய்து,அவர்களுக்கு தங்கள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளித்து ,அவர்கள் சமூக முன்னேற்றத்திற்கு  ஒரு பெரும் உதவி செய்கிறார்கள் .
                                                                 இளையராஜா ஒரு தலித்தாக   இருந்தாலும் இதுவரை தலித்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு ஒரு முறை கூட கண்டனம் தெரிவித்தது இல்லை. இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிற உ .பி . கற்பழிப்பு  கொலைக்கு  இளையராஜா இதுவரை வாயை திறக்கவேவில்லை.ஆனால் , சமீபத்தில் இறந்த பிராமண பாடகர் எஸ்பிபி ,இவரை எவ்வளவு அவமதித்து இருந்தாலும் ,இவருடைய பாடல்களை இவர் சம்மதமில்லாமல் வெளிநாடுகளில் பாடி  கோடிக்கணக்கான பணம்  சம்பாதித்திருந்தாலும் ,அவர் நோய்வாய்ப்பட்ட உடன் இளையராஜா முதல் ஆளாக அவருக்காக பிரார்த்தனை செய்ய அவருடைய ரசிகர்களை கேட்டுக்கொண்டார். பின்னர், எஸ்பிபி இறந்தவுடன், அவர் ஆத்மா சாந்தியடைய உடனே திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று தீபமேற்றி வழிபட்டார் . இவைகளை அவர் ஒரு மனிதாபிமானத்தோடு தான் செய்தார் என்று சொல்ல முடியாது.மாறாக ,அவர் மேல் சாதி வர்க்கத்தோடு  முற்றிலும் ஐக்கியம் ஆகிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும் .அதுபோல, பா .ரஞ்சித் எத்தனையோ படங்கள் சமூக அக்கறையோடு எடுத்திருக்கிறார். அதில் ஒன்று கூட இளையராஜா இசையமைத்த தில்லை. ரஜினிகாந்த் எந்த அளவுக்கு தலித்துக்காக  ஒரு குரல் படங்கள் வழியாக கொடுத்தாரோ அதில் ஒரு கால் பங்கு கூட இளையராஜா செய்ததில்லை.நடிகர்  சூர்யா தமிழ்  சமூகத்திற்காக'அகரம் பவுண்டேஷன்' ஒரு அறக்கட்டளையை நிறுவி ஏழைக் குழந்தைகளுக்காக இலவசமாக பள்ளிக்கல்வி தருகிறார். இதுபோல எதையும், தமிழர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணம் சம்பாதித்த இளையராஜா இதுவரை  செய்யவில்லை.
ஆக ,இளையராஜா இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக வாழ வில்லை என்பதை பலருடைய கருத்தாக இருக்கிறது.



1 comment:

  1. உண்மைதான். சரியான ஆய்வு.

    ReplyDelete