சமீபத்தில் ஆங்கிலத்தில் 'ராயனின் கதறல்'என்ற ஒரு ஆங்கில சுயசரிதை புதினத்தை வாசித்தேன்.மிகவும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது. கதைக்களம் தமிழ் நாடு .காலம் ,1920 ஆங்கிலேயர் காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது . கதையின் நாயகன் ,ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து உதித்த கிளர்ச்சியாளன் .உரிமைக்காக போராடுபவன் .அடக்குமுறையை கண்டு அஞ்சாதவன் .மனதில் உறுதிகொண்டவன் .ஆனால் ,வயதில் மூத்த கிழவன் !குட்டி சாம்பான் அவன் பெயர் ! ஜமீன்தாரின் அதிகாரம் ஓங்கியிருந்த காலமது .குட்டி சாம்பான் செய்த ஒரு செயல் ,ஜமீந்தாரை கோபமூட்டுகிறது.அப்படி என்ன செயல் செய்தான்?அரண்மனை நகைகளை திருடிவிட்டானா?ஜமீன்தாரின் பெண்ணை கெடுத்துவிட்டானா?இல்லை,ஜமீன்தாரை அவமானமாய் பேசிவிட்டானா? என்னவென்று தெரியாது .அதை ஒன்றும் சொல்லாமல் வயதான குட்டி சாம்பானை ஒரு மரத்தில் கட்டிவைத்து கதற கதற அடிக்கிறார்கள் ஜமீன்தாரின் ஆட்கள் !
அடி தாங்க முடியாமல் மயங்கி விழுந்த குட்டி சாம்பானை,பட்ட பலமான அடி முற்றிலும் மாற்றிவிடுகிறது .அவனுக்கு மட்டும் தான் தெரியும் ஏன் ஜமீந்தார் அவ்வளவு கோபப்பட்டார் என்று.ஏன் ?
குட்டி சாம்பான் குடிசை ,ஜமீன்தார் அரண்மனை தெருவுக்கு அடுத்த தெருவில் இருந்தது. அந்தப் பகுதியில் குட்டி சாம்பான் சிறியதாய் ஒரு வீடு கட்ட, ஒரு செங்கல் சூளை அமைத்திருந்தான் .அந்தச் சூளையிலிருந்து எழும்பிய புகை,அனுமதி இல்லாமல்,ஜமீன்தார் அரண்மனைக்குள் சென்றுவிட்டது! அதற்காகத்தான் இந்த தண்டனை!
அடியில் துவண்டாலும் ,மனதில் கொஞ்சம் கூட சாம்பான் துவள வில்லை.மாறாக விழுந்த அடிகள் அவன் மனதில் ஒரு புது முடிவு எடுக்க தெம்பு கொடுத்தது.'தவறே செய்யாத தனக்கு தண்டனை ஏன் வந்தது? தன்னுடைய தாழ்ந்த சாதி தானே இதற்கு காரணம் ? சாதியை மாற்றமுடியாது, ஆனால் சமுதாய நிலையை மாற்ற முடியும். ஆம், நான் ஒரு விவசாயக் கூலி, அதனால் தானே அடிக்கிறார்கள்.ஆனால் என் மகன் விவசாயக் கூலியாக இருக்கவிட மாட்டேன். அவனை நல்ல படிக்க வைத்து, சர்க்கார் உத்தியோகத்தில் அமர வைப்பேன் . என்னை அடித்தவர்கள் எல்லாம் என் மகன் முன் கை கட்டி நிற்பார்கள். இந்த,தீண்டத்தகாத என் தலைமுறை,எனக்கு பிறகு ஒரு எஜமான தலைமுறையாக மாறும். இது சத்தியம்',என்று மனதுக்குள் ஒரு முடிவெடுத்தார்.
அதன் பின்னர் குட்டி சாம்பான் எப்படி ஒரு புதிய எஜமான தலைமுறையை உருவாக்குகிறார் என்பதுதான் கதை. வழியில் எவ்வளவோ எதிர்ப்புகள்.எவ்வளவோ தடைக்கற்கள். எல்லாவற்றையும் தாண்டி தாண்டி குட்டி சாம்பானின் மகன் ஆதி நன்றாக படித்து, அந்த காலத்திலேயே, சென்னையில் பிரசித்தமான பிரசிடென்சி கல்லூரியில் போய் இன்டர்மீடியட் படிப்பில் சேருகிறான்! அவனுடைய மாவட்டத்திலேயே அவன் ஒருவன் தான் பிரசிடென்சி கல்லூரியில் சேரும் அளவு தகுதி பெற்று இருக்கிறான். இதற்கு உதவி ஒரு பிராமண தலைமை ஆசிரியர் செய்கிறார். கல்லூரி படிப்பின் பின் பிரிட்டிஷ் அரசின், அதிகாரம் வாய்ந்த பத்திர பதிவுத்துறையில் நுழைகிறான் குட்டி சாம்பானின் மகன் ஆதி ! அவன் இப்போது சர்க்கார் ஊழியன். யாரும் அவனை சீண்ட முடியாது.தீண்டத்தகாதவனாக நடத்த முடியாது.அப்படி செய்தால்,அது பிரிட்டிஷ் அரசை அவமதித்ததாக கருதப்படும்!ஆதி பதவி உயர்வு பெற்று மாவட்ட பதிவாளராக ஆகி ஓய்வு பெறுகிறார்.
ஆதியின் நான்கு மகன்களும் சுதந்திர இந்தியாவில் நல்ல உயர்ந்த பதவிகளை பெறுகிறார்கள். அதில் இரண்டாவது மகன் சூரஜ் ஒரு பெரிய வங்கியில் நேரடி அதிகாரியாக நுழைந்து, எப்படி சவால்களை சந்திக்கிறான் என்பது கதையின் மீதி பகுதி.சூரஜ் முன்னேற கூடாது என்று உள்ளிருக்கும் ஒரு கூட்டம் சதி செய்கிறது. சூரஜ் அவர்களை, அவர்களின் ஆயுதம் கொண்டே வெல் கிறான். அவர்களிடமி ருந்து சூழ்ச்சி செய்வது எப்படி என்று அறிந்து கொள்கிறான். அவர்களின் ஆயுதம் கொண்டு அவர்களையே வீழ்த்துவது சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது.
இது திரைப்படமாக எடுப்பதற்கு மிகவும் ஏற்ற படம். அசுரன், கர்ணன் போன்ற படங்களை விட விறுவிறுப்பான கதை. தனுஷ், பா. ரஞ்சித், வெற்றிமாறன் போன்றவர்களின் பார்வைக்கு இந்தத் திரைக்கதையை கொண்டு சென்றால், இதை வைத்து நிச்சயமாக திரைப்படம் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.