Tuesday, 18 April 2023

மணவாழ்க்கையா இல்லை பிணவாழ்க்கையா ?

                                                                      (Pic Credit -Google )
 

இயற்கையின் படைப்பில் ஆணென்றும் பெண்ணென்றும் இரண்டு தனித்தனி படைப்புகள் ஏன் இருக்கின்றன ? ஒரே படைப்பாக இருந்து, பிள்ளைகள் பெறும்படியாக இருந்திருக்கலாமே! ஏன் அவ்வாறு இல்லை? என்று நீங்கள் என்றாவது சிந்தித்தது உண்டா?

அவ்வாறு இருக்க சாத்தியமில்லை என்று சொல்ல முடியாது. இயற்கையில், சில தாவர இனங்களிளிலும், விலங்கினங்களிலும் parthenogenesis என்ற ஆண் பங்கு இல்லாத asexual இனப்பெருக்கம் நடக்கிறது.  அதேபோல் மனித இனத்திலும் இருந்திருக்கலாம் அல்லவா? ஏன் இல்லை? 

மனித இனத்திலும், விலங்குகள் இனத்திலும் மாத்திரம் ஏன் ஆண் பெண் என்று இரு பாலினங்கள் உள்ளன?

 விலங்கினங்களில் மிகவும் முன்னேறியதாய் காணப்படுவது மனித இனம். ஆக, மனித இனத்தின் வாழ்க்கை முறையை ஆய்ந்து பார்த்தால் ஏன் இரு பால் தனித்தனியே  தேவைப்படுகிறது என்பது புரியும்.

 எந்த இனமும் குட்டி போட்டு இனப்பெருக்கம் செய்ய இரண்டு தேவைகள் உள்ளன.ஒன்று ஒரு பாதுகாப்பான கூடு.இரண்டு குட்டி போட ஒரு பெண். பாதுகாப்பான கூட்டிற்கு ஒரு ஆண் தேவை. ஆக, ஆண் என்பவன் இடத்திற்கு பாதுகாவலன். முரட்டு பலம் கொண்டவன். பயம் இல்லாதவன். எதிரிகளிடம் இருந்து காப்பதற்கு திறன் பெற்றவன் . பெண், குட்டி போட்டு, அதற்கு பாலூட்டி, பேணி வளர்க்கக்கூடிய திறன் பெற்றவள். அன்பு காட்டுபவள், ஆதரிப்பவள். ஆணுடன் இசைந்து நடப்பவள். இவ்வாறாக ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடாக அமைந்த குணங்களை ஒன்றாக்கி ஒரு பாலாக உருவாக்க முடியாது என்பதால்தான் இயற்கையில் ஆண், பெண் என்று இரு தனித்தனி பால்களாக உள்ளன.

ஆக,ஆணும் பெண்ணும் இணைந்து  ஒரு குடும்பம் உருவாகிறது.ஆணே அதற்கு இயல்பான தலைவர். இதைப் பெண் ஒத்துக் கொண்டு குடும்பம் நடத்தினால் எல்லாம் சுமுகமாக நடக்கும்.இதை பெண் ஒத்துக் கொள்ளாமல், தலைமைப் பொறுப்பை தான் ஏற்க நினைத்தால், குடும்ப வாழ்க்கையில் குழப்பம் ஏற்படலாம்.ஒரு கப்பலுக்கு இரண்டு மாலுமிகள் இருக்க முடியாது. இருந்தால் திசை தப்பி விடும்!அது குடும்பம் என்ற கப்பலுக்கும் ரொம்பவே பொருந்தும்.

            ஒருவேளை மனைவி மாலுமி ஆக விரும்பி, கணவன் அதை ஒத்துக் கொண்டால் என்ன ஆகும்? குடும்பத்தில் அமைதி நிலவும். ஆனால், குடும்பம் சரியான திசையில் பயணிக்காது! ஏனென்றால் பெண்மையின் குணங்கள் பிள்ளைகளிடம்  மேலோங்கி நிற்கும். அது குடும்பத்தை/தலைமுறையை  முன்னெடுத்து செல்ல முடியாது.

 அப்படியான ஒரு குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண், ஆளும் இயல்புடன் இருக்கும் ஒரு ஆணை மணமுடித்தால் என்ன ஆகும்? அவர்கள் மண வாழ்க்கை எப்படி இருக்கும்? இரண்டு பேரும் தலைமைக்கு போட்டி போட நினைத்தால், குடும்பம் எப்படி இருக்கும்? இவர்களின் குழந்தைகள் எந்த விதமான பாதிப்புக்கு உள்ளாவார்கள்? எந்தவிதமான  விழுமங்களை கடைப்பிடிப்பார்கள்? 

இதோ அப்படி ஒரு ஜோடியின் ஒரு உண்மைக் கதை!

கார்த்திக் ஷெரின் ஜோடி!

 கார்த்திக் எம்பிஏ முடித்தவன்.தலைமுறை தலைமுறையாக  ஆண்கள் மட்டும் ஆளும் ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவன். அவன் குடும்பத்தில் அப்பாவின் சொல் தான் கடைசி சொல். ஒரு விஷயத்தைப் பற்றி அப்பா என்ன நினைக்கிறார்,என்பதே அதன் முடிவை நிர்ணயிக்கும் . வீட்டிலுள்ள எல்லோருடைய தலைவிதியையும் இறுதியில் நிர்ணயிப்பது அப்பாதான். அவர்கள் குடும்பத்தில் அப்பா என்பது ஒரு சர்வ அதிகாரமிக்க பதவி.

ஷெரின் ஒரு குமரி மாவட்ட குமரி. குணத்தில் கிட்டத்தட்ட மலையாளி போல . ஷெரினின் குடும்பத்தில் அவளுடைய தாயார் வைத்ததுதான் சட்டம்.கார்த்திக் குடும்பத்தில் அப்பா எப்படியோ ,அதே இடத்தில் இங்கு அம்மா !தகப்பனார் என்பவர் சும்மா ஒரு 'டம்மி பீஸ் '. ஷெரினுக்கு மூன்று சகோதரர்கள் உண்டு. அவர்கள் எல்லோரும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அன்பான வேலைக்காரர்கள்! ஷெரினுடைய வாழ்க்கையில், அவளுடைய அம்மா பிள்ளைகளுக்குத் தெரிந்து,அப்பாவிற்கு ஒருபோதும் கட்டு பட்டதில்லை. அப்பா ஏதாவது செய்ய சொன்னாலும், அதையும் அம்மா வேண்டாம் என்று சொன்னால் யாரும் மீறி விடலாம்! ஆக,அங்கு ஒரு விதத்தில் அல்லி ஆட்சி! ஷெரினும் ஒரு குட்டி அல்லியாகவே வளர்ந்தாள்.

 கார்த்திக் ஒரு ஆள்பவன். ஷெரின் ஒரு அல்லி. இருவர் இணைந்த மண வாழ்வு எப்படி இருக்கும்?

                                             தேனிலவு முடியும் வரை எப்படியோ எல்லாம் ஒத்துப் போய் விட்டது. தேனிலவு நேரத்திலும், ஷெரின் தான் அதிக முடிவுகளை எடுத்துக் கொண்டிருந்தாள். கார்த்திக் இருவரும் தனியாக நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று திட்டமிட்டால்,ஷெரினோ போகுமிடமெல்லாம், அங்கிருக்கும் சித்தி வீட்டிற்கும்,அத்தை வீட்டிற்கும் போவதிலே அதிக குறியாக இருந்தாள்.ஆனால், கார்த்திக் அவளுடைய ஆக்ரமிப்பை எல்லாம் அப்போது  அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. அவனுள் இருந்த ஆண் அவ்வளவாக  இன்னும் வெளியே வரவில்லை.

                                        தேனிலவு முடிந்து நிஜவாழ்க்கையில் அமரும் போதுதான் இருவருக்கும் உள்ள ஆளும் ஆவிகள் மோத ஆரம்பித்தன. இரண்டு முன்பின் தெரியாத  ஆண்கள் திருமணம் முடித்தால், குடும்ப ஆளுமை  எப்படி இருக்கும்? அதுபோலத்தான், கார்த்திக்கும் ஷெரினும் ஒத்து போவதில் எப்போதும்  ஒரு உரசல் இருந்து கொண்டிருந்தது. எப்படியான உரசல் ?

                                     முதலில் அன்றாட வாழ்க்கை எடுத்துக்கொள்வோம். ஒருவர் சொல்ல, ஒருவர் கேட்க, என்பதுதான் பொதுவான நியதி. காலையில் கார்த்திக் வேலைக்குக் கிளம்பும்போது,' ஷெரின்,நான் கிளம்புறேன் 'என்பான் .ஷெரின் தரப்பில் இருந்து, ' சரிங்க, போயிட்டு வாங்க' என்ற பதிலை அவன் மனம்  எதிர்பார்க்கும். ஆனால், ஷெரினோ பக்கத்தில் நின்றாலும் பதில் ஒன்றும் சொல்ல மாட்டாள்! அவளுக்கு கார்த்திக் பேசுவது காதில் விழவே விழாது! அவளாக கார்த்திக்கிடம் ஏதாவது கேள்வி கேட்டால், அதற்கான கார்த்திக்கின் பதிலை  மாத்திரம் கேட்டுக் கொள்வாள்! இப்போது இந்த சூழ்நிலையில், அவளே வந்து,'என்ன,ஆபீஸ் போறீங்களா?' என்று கேட்டு, அதற்கு கார்த்திக் பதில் சொன்னால், அது மட்டும் கேட்கும்! சிலநேரம் இதற்காக கார்த்திக் இரண்டு மூன்று தடவை ஒரே விஷயத்தை சொல்வான். ஆனால் அது எதுவும் ஷெரின் காதில் விழாது.எப்படிங்க!

                                                               பின்னர் கார்த்திக் தண்ணீர் கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஷெரின் ஒரு டம்ளரை தூக்கிக் கொண்டு வருவாள்.  கார்த்திக் தண்ணீர் கொண்டு வருகிறாள் என்று,குடிக்க தயாராவான். ஷெரின் பக்கத்தில் வந்து, டம்ளரை கார்த்திக் கையில் கொடுத்துவிட்டு,' தண்ணீர் குடத்தில் இருக்கு' என்று சொல்லிவிட்டுப் போய்விடுவாள்!தண்ணீர் எதிர்பார்த்த கார்த்திக், சிறிதுநேரம் குழம்பிப் போய் விடுவான்! இது ஆணைக்கு, பதில் ஆணை! ஆங்கிலத்தில் இதை counter instruction என்பார்கள்.இப்படி ஒவ்வொன்றிலும் ஒரு குழப்பம் ! எப்போதும் இரண்டு ஆண் ஆவிகள் மோதுவது போல் ஒரு உணர்வு.

                                                         கார்த்திக் தன் அம்மாவை நினைத்து பார்த்தான். அப்பா, தண்ணீர் என்று சொல்வதற்கு முன்னாலே, அம்மாவுக்கு ஒரு உணர்வு தட்டும். ஒரு டம்ளரில் கொண்டு வந்து கையில் கொடுத்து விட்டு போவார்கள்.இதைத்தான் வள்ளுவர் குறிப்பறிதல் என்று சொன்னார். இந்த அளவு இல்லாவிட்டாலும் வாய் திறந்து கேட்டதையாவது சரியாக செய்ய வேண்டும் அல்லவா? ஆனால், ஷெரினோ டீ கேட்டால் கூட, அதை முன்னால் வைத்துவிட்டு, ஒன்றும் சொல்லாமல் போய்விடுவாள்! செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருக்கும் கார்த்திக் ஒரு பத்து நிமிடம் காத்திருந்து பார்த்துவிட்டு ,' டீ என்ன ஆச்சு?' என்று கேட்டால்,' முன்னால பாருங்க 'என்று பதில் வரும். அதற்குள் டீ ஆறிப் போயிருக்கும்! டீயை கையில் கொடுப்பதற்கும் முன்னால் வைத்து விட்டு போவதற்கும் ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. டீக்கடையில் கூட அவன் கொண்டு வந்து நம் கையில் கொடுத்து விட்டு போவான் . அதில் நம் மேல் அவன் கொண்ட ஒரு அக்கறை  தெரியும்.

                                           சில நேரம் கார்த்திக்,'ஷெரின், இதை கொஞ்சம் பிடி' என்று ஒரு டம்ளரை நீட்ட, ஷெரின் அதைப் பிடிக்கவே மாட்டாள்! அவள் பாட்டுக்கு போய்க்கொண்டே இருப்பாள். சிறிது நேரம் கழித்து கார்த்திக், கையை நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு முட்டாள் போல் உணர்வார். பிறகு அவரே அதைக் கொண்டுபோய் எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைப்பார்!

                                                அன்புதான் திருமண வாழ்வின் அடித்தளம். மனைவி கணவனை நேசித்தால், அவன் குணம் என்ன, அவன் தேவைகள் என்ன, அவன் எந்த நேரத்தில் என்ன செய்வான், என்பதெல்லாம் புரிந்து கொள்வாள். அதற்கு தகுந்தால் போல நடந்து கொள்வாள்.  இயேசு ஒரு முறை அவர் சீடர்களிடம் சொன்னார்,'நீங்கள் என்னை நேசித்தால், என்னுடைய கட்டளைகளை நிறைவேற்றுவீர்கள் '. ஆக, ஒருவர் சொல்வதை செய்வது தான்  அவர் மேல் நாம் காட்டும் அன்பின் அடையாளம்.

                                                                 ஆனால்,ஷெரினை பொறுத்தவரையில்,அன்பு என்றால்,பெயர் கூட மா என்று சேர்த்து சொல்வது தான்.' என்ன கார்த்தி மா'என்று சொல்லிவிட்டு, சொல்வது எதுவும் செய்யாமல் விட்டு விடுவாள்! அவர்கள் குடும்பத்தை பொறுத்த வரையில் அது தான் அன்பு காட்டுவதாம்!அ தில் கூட 'மா'தான் ,' பா' இல்லை!

                                                                   காலப்போக்கில், ஷெரின் எல்லா விடயங்களிலும் தனியாகத்தான் முடிவெடுக்க விரும்புகிறாள் என்பது தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது.ஒரு சாலையை கடப்பதில் கூட, கையைப் பிடித்து அழைத்து வந்தால், அவள் மறுத்துவிடுவாள். கார்த்திக் முதலில் கடந்து எதிர் பக்கம் போய் நின்று விடுவான். பின்னர் ஷெரின் தனியாக வருவாள்! இது பல இடங்களில் குழப்பத்தை உண்டாக்கியது. கார்த்திக் முன்னாலே போய் காத்திருக்க வேண்டும்! ஷெரின் பயந்தவள். ஆதலால் எல்லாப் போக்குவரத்தும் கடந்த பின் தான் சாலையை கடந்து வருவாள் . அதுவரை கார்த்திக் அவளுக்காக அங்கு பொறுமையாக காத்திருந்து  நிற்கவேண்டும். இந்த தனியாக முடிவு எடுக்கும் பாங்கு,ஷெரினிடம் மிகவும் பலமாக இருந்தது.  ஆதலால் கார்த்திக்கின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் அவள் முடிவை எந்த விதத்திலும் பாதிக்காமல் இருந்தது. எடுத்துக்காட்டாக, கார்த்திக் காலையில், டீ தான் குடிப்பான் என்று எடுத்துக் கொண்டால், அவள், அவள் விருப்பத்திற்கு காப்பி போடுவாள். பின்னர் கார்த்திக், நான் டீ தான் குடிப்பேன், என்று சொன்னவுடன் போய்விடுவாள். மறுநாளும் கார்த்திக் அதே போல சொல்ல வேண்டும். இல்லையென்றால் மறுநாளும் காப்பி தான் கிடைக்கும். இப்படியாக, வருடத்தில் 365 நாளும், தினமும் கார்த்திக் சொல்ல வேண்டும்! இதைப் பற்றி கேட்டால், ஷெரினுக்கு கோபம் தான் வரும். ரொம்ப கேட்டால் கண் கலங்கும் . கார்த்திக், இப்படி ஒருவரால் எப்படி செய்ய முடியும், என்று அடிக்கடி யோசிப்பதுண்டு . அவனுடைய அலுவலகத்தில் அவனுக்கு உதவி செய்ய ஆண்டனி என்ற ஒருத்தர் இருந்தார் . ஒருவாரம் பழக்கத்தில், கார்த்திக் காலையில் எத்தனை மணிக்கு டீ கேட்பார், எவ்வளவு சீனி போட வேண்டும்,எந்த நிறத்தில் டீ  இருக்க வேண்டும், எந்தக் கோப்பையில் கொடுக்க வேண்டும், எல்லாம் அறிந்து வைத்துக்  கொண்டார். தினமும் அவரிடம் கேட்க வேண்டாம். சரியாக காலை 11 மணிக்கு ஒரு 'மீடியம் டீ ', கார்த்திக்கு பிடித்த நிறத்தில்,பிடித்த கோப்பையில் வைத்து, சார் டீ ரெடி என்று சொல்லி விட்டு போவார்! பேசாமல் அந்த ஆண்டனியை கல்யாணம் செய்து இருக்கலாமோ என்று அடிக்கடி கார்த்திக்குக்கு தோன்றும்!

                                                                 ஒரு ஆணை, பெண் சிறுசிறு செயல்களால், மகிழ்ச்சி படுத்த முடியும், அதேபோல பெருமளவில் சங்கட படுத்தவும் முடியும். எடுத்துக்காட்டாக, என்னவர்  மாதிரி வருமா? என்று மனைவி பொது வெளியில் சொல்லிவிட்டால் போதும். ஆணுக்கு தான் ஆண் என்ற ஒரு உச்ச உணர்வு வந்துவிடும்! ஒரு ஆணை ஆணாக உணரச் செய்வது பெண்தான். மற்ற ஆண்கள் அல்ல!ஷெரின் கார்த்திக்கை, ஒரு ஆணாக ஒருபோதும் உணர செய்ததே  இல்லை. மாறாக கார்த்திக்கை பலமுறை மட்டம் தட்டியிருக்கிறாள் . அவன் உணர்வுகளை காயபடுத்தி இருக்கிறாள். பல முறை அவனை  uncomfortable ஒரு மாதிரியாக உணரச் செய்திருக்கிறாள். என்ன செய்தால் கார்த்திக்குக்கு பிடிக்காதோ, அதை விரும்பி செய்வாள் ஷெரின். வெளியே சொல்லக் கூடாத சில தகவல்களை யாரிடம் சொல்ல கூடாது என்று கார்த்திக் நினைத்தானோ, அவர்களிடமே உடனே உளறிக்கொட்டி விடுவாள். கார்த்திக்குக்கு பக்கென்று இருக்கும். கார்த்திக் அதைப்பற்றி ஷெரினிடம்  சொன்னால், அதைப்பற்றி ஒன்றும் கவலைப்பட மாட்டாள்!ஒரு sorry கூட சொல்லமாட்டாள்.இதில் கடுப்பேற்றும் விடயம் என்னவென்றால் , பிடிக்காத காரியத்தை செய்து விட்டு , அதை பெருமையாக  சொல்வாள். அதாவது, நீ என்ன சொல்லுவது நான் என்ன கேட்பது என்பது மாதிரி இருக்கும்.சரி, என்ன செய்வது இவள் ஓட்டை வாய் ,இப்படித்தான் எல்லாம் உளறி விடுவாள் என்று சமாதானப்பட முடியாது ,ஏனென்றால் அவள் பிறந்த வீட்டின்  விடயங்கள்  ஒன்றையும் 1யாரிடம் கசிய விடமாட்டாள்!இது எப்படி இருக்கு !

                                                                      மொத்தத்தில், ஆண் பெண் இருவரும் ஒவ்வொரு தண்டவாளம் என்றால், இங்கு ஷெரின் என்ற தண்டவாளம் தனிப் பாதையில் வேறு திசை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. எல்லாவற்றிலும் ஷெரினுக்கு தனி திட்டம்! எடுத்துக்காட்டாக இருவரும் சேர்ந்து ஒரு ஊருக்கு பயணம் செல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கார்த்திக் சொல்லும் சாமான்களை ஷெரின் பெட்டியில் வைக்க மாட்டாள். மாறாக அந்த ஊரில் இருக்கும் அவளுடைய உறவினர்களுக்கு /நண்பர்களுக்கு என்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை மறக்காமல் எடுத்து வைப்பாள்!! இதனால் கார்த்திக்கின் திட்டங்கள் எல்லாம் எப்படியாவது குழம்பி விடும். அல்லது குழப்பப்பட்டு விடும்! இந்த முறை எப்படி குழம்பிவிடுமோ என்று கார்த்திக்குக்கு எப்போதும் மனதில் ஒரு படபடப்பு இருந்து  கொண்டே இருக்கும்.

                                                      எல்லாவற்றிலும் ஷெரின் தலையிடுவதால், இது எந்த திசையில் நகருகிறது என்று கார்த்திக்கு பலமுறை தெரியாமலேயே போய்விடும். அவனுடைய முடிவுகள் ஒன்றையும் அவனால் செயல்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக, பக்கத்து வீட்டுக்காரர் 20000 ரூபாய்  கார்த்திக்கிடம் கடன் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். கார்த்திக் இன்னும் சம்பளம் வரவில்லை என்று சொல்லி கடன் கொடுப்பதை மறுத்து விடுகிறார்.ஆனால் கார்த்திக்கு தெரியாமல் ஷெரின் பக்கத்து வீட்டுக்காரரிடம் சம்பளம் வந்ததை பேச்சுவாக்கில் சொல்லி விடுகிறாள்! இப்போது என்ன செய்வது🤔

                                                இப்படி எல்லாம் இருந்தாலும்,சில குடும்பங்களில் மனைவியின் அன்பு இந்தப் பிரச்சினைகள் எல்லாம் ஒன்று இல்லாமல் ஆக்கிவிடும்.ஆனால் ,இங்கோ  ஷெரினுக்கு கணவன் மேல் எந்தவிதமான அன்பும் கிடையாது. எந்த விதமான பரிவும் கிடையாது.  அதனால் கணவனுக்காக செய்யும் ஒவ்வொரு செயலும், ஷெரினுக்கு ஒரு பெரும் பாரமாக தெரியும். ஊரார்களுக்கு மிகவும் அன்புடன், கனிவுடன்  எந்த உதவியும் செய்வாள்  ஷெரின்! கார்த்திக்கை பொருத்தவரையில்  உணவு உண்ணும் முன் முதலில் ஒரு டம்ளர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அப்படித்தான் சிறுபிள்ளையிலிருந்து அவன் பழகி இருக்கிறான். ஆனால் ஷெரின் அந்த தண்ணீரை கொடுக்கவே மாட்டாள். கார்த்திக் தினமும் தண்ணீர் கேட்க வேண்டும். தண்ணீர் குடிக்காமல் இரும வேண்டும். அதன் பின்னரும் மெதுவாகத்தான் தண்ணீரை கொடுப்பாள்  ஷெரின். 40 வருடங்கள் போராடியும் இன்னும் அது மாறவில்லை. சரி இவளிடம் போராடி தண்ணீர் பெறுவதை விட, நாமே எடுத்து வைத்துவிட்டு பிரச்சனையை தீர்த்து விடலாம் என்று கார்த்திக் முடிவெடுத்தான். தண்ணீரை தேடி போனால், ஷெரின் அது எங்கு வைத்திருக்கிறாள் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை! அவ்வளவு ஒழுங்கற்ற முறையில் வீட்டை வைத்திருந்தாள் ஷெரின்!! ஆக அவளும் தர மாட்டாள், நம்மையும் எடுக்க விடமாட்டாள்! என்ன செய்வது🤔 

                                                                        இது எல்லாவற்றிற்கும் மேலாக அவளிடம் ஒரு கெட்ட குணம்  இருந்தது . அது என்னவென்றால் குடும்பத்தை எப்படி நடத்துவது என்பதில் கணவன்  கார்த்திக்கு ஒரு பங்குமே கொடுக்க மாட்டாள் . ஏதாவது கார்த்திக் குழந்தைகளிடம் ஒன்று சொன்னால் அதை எப்படியாவது இல்லாமல் ஆக்கி விடுவாள். இதனால் கார்த்திக்கின்  வழிகாட்டுதல்  குழந்தைகள் வளர்ப்பில் சிறிது  கூட இல்லாமல் போயிற்று . குழந்தை வளர்ப்பில் அப்பாவின் பங்கு ,ஆண் குழந்தையானாலும், பெண் குழந்தை ஆனாலும் மிகவும் இன்றியமையாதது என்பதை அவள் உணரவில்லை. ஷெரின் தன்னுடைய சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அந்த குடும்பத்தை ,அதன் உள் உறவுகளை நாசம் செய்து விட்டாள் என்றே சொல்லலாம் .ஒரு  குடும்பம் என்றால் ஒருவர் தேவையை மற்றவர் கவனிப்பதுதான் முக்கியம் .அன்பு ஒன்றே அதை பின்னின்று  இயக்கும் இயந்திரம் .ஒருவரால் ஒரு காரியம் முடியவில்லை ,அல்லது மறந்து விடுகிறது என்றால் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் அதை நினைவு வைத்து அவர்களுக்கு அதை செய்து விடுவது தான் அன்பு. ஷெரின் அப்படி நினைக்கவில்லை .ஒருவருக்கு எதுவும் வேண்டுமென்றால் அவர்களே  செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களை எதிர்பார்க்கக் கூடாது. தனித்து இயங்க வேண்டும் என்று ஒரு தவறான கோட்பாட்டை சொல்லிக் கொடுத்து ,அதில் பலமாக வளர வைத்து விட்டாள் .அதனால் ஒருவரை ஒருவர் சார்ந்து  ஜோடியாக வாழும் நிலைமை தேவையே இல்லை என்ற எண்ணத்தை வளர்த்து விட்டாள் .

 மொத்தத்தில் நல்ல ஒரு மண வாழ்க்கைக்கு தேவையானது என்னென்ன என்று பார்த்தால்:

  •  கணவன், மனைவி இருவருக்கும் இடையில் ஒரு நல்ல இணக்கம் .அதாவது இதை எளிதாக சொல்ல வேண்டுமென்றால் இருவரும் ஒரே ஆவியில் ஐக்கியமாக செயல்பட வேண்டும் .
  • இரண்டாவதாக இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். அன்பு தான் மண வாழ்க்கையை ஆள வேண்டும். ஆணவம் ஒருநாளும் ஆள விடக்கூடாது.
  • கணவன் மனைவியை விட வேறு யாருக்கும் அதிகம் முன்னுரிமை கொடுக்கக் கூடாது .அது போல மனைவி கணவனுக்கு தான் முதல் முக்கியத்துவம் கொடுத்து ,அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஒரு குடும்பத்தின் தலைவராக அவர் எடுக்கும் முடிவுகளை மனதார ஆதரிக்க வேண்டும் செயல்படுத்த வேண்டும்.
  •  முக்கிய முடிவுகளை இருவரும் கலந்து பேச வேண்டும் .ஆனால் இறுதி முடிவு குடும்பத்தின் தலைவரான கணவருக்கே உண்டு.
  • கணவன் மனைவி அவரவருக்கு அவர்கள் விருப்பங்கள் வேறுபாடாக இருக்கலாம் .தப்பில்லை .ஆனால் அது ஒரு நாளும் மோத கூடாது. கணவனுக்கு பிடிப்பது மனைவி எப்போதும் எதிர்க்கக் கூடாது .அதை அவளுக்கு பிடிக்காவிட்டாலும் கணவனுக்காக  அன்பின் அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.
  • மணமான பின் கணவனோ மனைவியோ தங்கள் பிறந்த வீட்டிற்கு எப்போதும் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து அதையே பற்றி பேசிக்கொண்டு அவர்களுடன் உள்ள உறவை முன்பு போல் பலமாக வைத்துக் கொண்டு இருப்பது மண வாழ்க்கைக்கு நல்லதல்ல. ஷெரின் காலையில் எழும்பியதிலிருந்து அண்ணன்,அக்கா , தங்கை என்று எல்லோருக்கும் தொலைபேசி அழைப்பு கொடுப்பாள் . எல்லோரிடமும் எல்லா கதையும் ஆர்வமுடன் கேட்பாள் . ஆனால், வீட்டில் இருக்கும் யாரிடமும் எதையும் கேட்பதில்லை.அவள் நினைவெல்லாம் அவர்கள் தான்.இன்னும் பழைய கதைகளையே நினைத்து பேசிக் கொண்டிருப்பாள் . கனவில் ஏதாவது பயந்தால் கூட ,'அக்கா !தம்பி!என்னை காப்பாற்று !' என்று தான் அலறுவார் !  இப்படியான பழக்கம் நல்ல மண வாழ்க்கைக்கு எப்போதும் தடையாகத் தான் அமையும் என்பதை மறக்கக்கூடாது . மணமான பின் தன்னுடைய சொந்த குடும்பத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை இருவரும் ஒருநாளும் மறக்கக்கூடாது.
  • மண  வாழ்க்கையில்  ஒரு நாளும் ஒருவர் மேல் ஒருவருக்கு வெறுப்போ ,மன  கசப்போ வந்து விடவே கூடாது .அது  வாழ்க்கையையே மெல்ல  அழித்துவிடும்.

 மொத்தத்தில் நம் வாழ்க்கை , மணவாழ்க்கையா இல்லை பிணவாழ்க்கையா என்பதை தீர்மானிப்பது நாம் தான் என்பதை ஒரு நாளும் மறக்கக்கூடாது.


.



No comments:

Post a Comment