(படம் நன்றி :இந்து)
இன்னும் 20 நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.நம்முடைய அடுத்த ஐந்து வருடங்களை தீர்மானிக்கக் கூடிய நாள் அது .அடுத்த ஐந்து வருடமும் செங்கோல் ஆளப்போகிறதா அல்லது இப்போது போல கொடுங்கோல் நீளப் போகிறதா என்பதை தீர்மானிக்கும் ஒரு நாள். எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிப்பது தவறு. ஏனென்றால் ஒரு கட்சி என்றால், அதற்கு இரண்டு முகங்கள் இருக்கலாம் .ஒரு நபர் என்றாலும் அவருக்கு ஒரு மறைவான முகம் இருக்கலாம். ஆதலால் ,அதை விட்டுவிட்டு எந்தெந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக நாம் வாக்களிக்க வேண்டும் என்று முடிவெடுப்பதே சரி .நாம் பட்டியலிடும் பிரச்சனைகளை தீர்த்து தருகிறேன் என்று சொல்லும் கட்சிகளுக்கு நாம் வாக்களிக்கலாம் .
இதுவரை இருந்த கட்சிகள் பல ,நான் அதைத் தீர்த்து தருகிறேன் என்று சொல்லிவிட்டு நம்மை ஏமாற்றி இருக்கிறார்கள்/ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு தடவை ஏமாறலாம் , இரண்டு தடவை ஏமாறலாம்! அறுபது வருடமாக ஏமாந்தால், அது நம்முடைய அறிவுத்திறனை தான் காட்டுகிறது. ஆக, கடந்த 60 வருடங்களில் ஆட்சி செய்த எந்த கட்சிக்கும் நாம் வாக்களிப்பது அர்த்தமற்றது. ஏனென்றால் ,திமுக என்றாலும் அதிமுக என்றாலும் ஒரு நாணயத்தின் இரு பக்கம்தான். அவர்கள் என்ன செய்வார்கள் என்பது அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை வைத்து நாம் தீர்மானித்து விடலாம். ஆக, அந்த இரு கட்சிகளுக்கும் நாம் வாக்களிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் .அதை தவிர மூன்றாவதாக தமிழக வெற்றி கழகத்தின் நடிகர் விஜய் வந்திருக்கிறார். அவர் ,எந்த பிரச்சனைகளுக்காக நிற்பார் என்று இதுவரை அவருக்கே தெளிவாக தெரியவில்லை.களப்பணியாற்றுவதிலும் மிகுந்த சுணக்கம் காட்டுகிறார். ஆக, அவர் நம்முடைய பிரச்சனைகளுக்காக போராடுவார் என்று எதிர்பாக்கவும் முடியாது. பிரச்சனைகளை அவர் தெரிந்து இருக்கிறார் என்றும் நினைக்க முடியாது .
முதலில் நம்முடைய தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகள் என்னென்ன என்பதை பட்டியலிட்டு பார்ப்போம்:
- தமிழ்நாட்டின் இயற்கை வளக் கொள்ளை! தமிழ்நாட்டின் மலைகள்,ஆற்று மணல் போன்ற இயற்கை வளங்கள், ஒரு நாளைக்கு ஒரு லட்சம் டன் வீதம் கேரளாவுக்கும் ,கர்நாடகாவுக்கும் ஏற்றுமதி ஆகிறது. கேரளாவுக்கும் ,கர்நாடகாவுக்கும் சொந்த மலை உள்ளது. அவர்கள் அதை எடுக்காமல்,தமிழ்நாட்டின் வளங்களை, இங்கு ஆட்சி செய்பவர்களை கைக்குள் போட்டு ,எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் டன்வீதம், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 5x 365x 1 = 1825 லக்கம் டன் வருகிறது .இந்தப் போக்கில் போனால் , நம்முடைய எதிர்கால சந்ததிக்கு எந்தவிதமான இயற்கை வளங்களையும் நாம் விட்டு விடாமல், இறந்து விடுவோம் !ஒரு மலை உருவாக 200 கோடி ஆண்டுகள் ஆகிறது என்பது நிபுணர்கள் கருத்து .ஆக, இந்த வளக் கொள்ளையை தடுத்து நிறுத்தும் கட்சி எந்த கட்சியோ ,அதற்கு நாம் வாக்களிக்க வேண்டும்.திமுக, அதிமுக,தவெக மூன்றுமே நிச்சயமாக இதை நிறுத்தாது.
- எல்லா உயிர்க்கும் சுத்தமான விலையில்லா குடிநீர்! தமிழ்நாட்டின் எல்லா நீர்நிலைகளும், ஆறுகளும் ,ஆலை கழிவுகளால் மாசடைந்து, குடிநீர் தகுதியை இழந்து விட்டன .பல நீர்நிலைகளில் உயிரினங்கள் வாழ முடியாமல் செத்து மிதக்கின்றன .மாதம் ஒன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு நல்ல குடிநீர் வாங்குவதற்கு மாத்திரம் குறைந்தது 1200 ரூபாய் ஆகிறது. காக்காவும், குருவியும், ஆடுகளும், மாடுகளும், காசு கொடுத்து எப்படி தண்ணீர் குடிக்கும் ?என்ற ஒரு பெரிய கேள்வி இப்போது எழுகிறது . குருவிகள் நீரின்றி செத்து மடிகின்றன. இயற்கையில் சுத்தமான குடிநீர் எல்லோருக்கும்/எல்லா உயிர்க்கும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்று எந்த கட்சி சொல்கிறதோ அதற்கு வாக்களிப்போம் .அதிமுக, திமுக,தவெக அந்த பட்டியலில் இல்லை.
- லாப பணத்தில் மக்களுக்கு பங்கு கொடுப்பது சரி !கடன் வாங்கி இலவசம் அளிப்பது தவறு! தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை 10.70 லட்சம் கோடி! வட்டி மாத்திரம் ஒரு லட்சம் கோடி கட்ட வேண்டும்! இந்த சூழ்நிலையில் மேலும் கடனை வாங்கி ,அதை பொருளாதார மேம்பாட்டுக்காக பயன்படுத்தாமல், இலவசங்கள் மக்களுக்கு கொடுப்பதற்கு பயன்படுத்துவது தவறான கொள்கை .அதனால், தமிழ்நாட்டின் கடன் சுமை கூடும் .வட்டி சுமை கூடும் .ஒவ்வொரு குடிமகனுக்கும் கடன் சுமை கூடும் .இலவசங்கள் கொடுக்காத கட்சி தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நல்ல கட்சியாக இருக்கும். அதற்கு நாம் வாக்களிக்க வேண்டும்..
- எல்லோருக்கும் ,உலக தர ,கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் அரசு தரும் ! தற்போது அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் தனியார் பள்ளிகள் /மருத்துவமனைகளுக்கு நிகராக இல்லை என்பதால் எல்லோரும் தனியார் நிறுவனங்களுக்கு சென்று லட்சக்கணக்காக பணம் செலவழிக்கும் நிலை ஏற்படுகிறது .தனியார் இதனால் லாபம் அடைந்து பணக்காரர் ஆகிறார்கள் .இதற்காக வாழ்வின் சேமிப்பு எல்லாம் கரைத்து பொதுமக்கள் ஏழைகள் ஆகிறார்கள். ஆகவே ,இதை மாற்றி ,எந்த கட்சி ,அரசு அரசு பள்ளிக்கூடங்கள் தனியாருக்கு நிகராக மாற்றுகிறதோ ,அதுபோல அரசு மருத்துவமனைகளை தனியார் அளவுக்கு உயர்த்துகிறதோ அந்த கட்சிக்கு வாக்களிக்கலாம்.
- முழு மதுவிலக்கு /போதை ஒழிப்பு! தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்தினால் கிட்டத்தட்ட இரண்டு கோடி பேர்கள் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் .சுமார் 6 லட்சம் விதவைகள் இதனால் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் . இதுபோல போதைப் பழக்கத்தினால் ,பலவிதமான குற்றங்கள், குறிப்பாக பாலியல் குற்றங்கள் பெருமளவில் நடக்கிறது .இதையெல்லாம் மாற்ற வேண்டுமானால் இவைகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். எந்த கட்சி முழு மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு இவைகளை ஆதரிக்கிறதோ, அதற்கு நாம் வாக்களிக்கலாம்.
No comments:
Post a Comment