Monday 9 October 2017

'அசுத்தம் 'என்பது சாதிய கலாச்சாரத்தின் ஒரு கூறு !

'கோரா 'என்பது ஆங்கிலத்தில் இயங்கும் ஒரு சர்வதேச கேள்வி பதில் வலைத்தளம் .எந்த கேள்வியும் கேட்கலாம் .பதில் தெரிந்தவர்கள் பதில் கூறலாம் .அதில் ஒரு அமெரிக்கர் கேள்வி கேட்டிருந்தார் .அமெரிக்கர்கள் விடுமுறையை உல்லாசமாக கழிக்க காடுகளில் கூடாரமிட்டு தங்குவார்கள் .அவ்வாறு தங்கும் போது சிறுநீர் கழிக்க எங்கு செல்வது என்பது தான் அவருடைய பெரிய விடை தெரியாத கேள்வி !கேள்வியை பார்த்து நிலை குலைந்து போனேன் நான் !
                      உலகத்திலே 2 வது அழகான மெரினா கடற்கரையிலே கக்கா போகும் இந்தியர்கள் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வார்கள் ?யாருமில்லாத காட்டில் கூட சிறுநீர் கழிக்க அஞ்சும் அவர்கள் எங்கே ,அழகான மெரினா கடற்கரையிலே கூட கக்கா போகும் இந்தியர்கள் எங்கே ?
உலகிலே சிறந்த கலாச்சாரம் கொண்ட தமிழர் கூட எப்படி இவ்வளவு அசுத்தமாக பொது வெளியை வைக்கும் நிலை வந்தது?
இந்த அசுத்தத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் அடிப்படை காரணம் தான்என்ன ?
(சுற்றுலா தலமான பாண்டியில் ஒரு காட்சி !)

                          சங்க காலத்திலோ அல்லது அதன் முன்னாலோ தமிழர்கள் சுத்தமாகவே இருந்திருக்க வேண்டும் .நன்றாக குளித்து ,மணப்பொருட்கள் இட்டு ,மலர் சூடி உலாவிய பெண்களை பற்றிய பதிவுகள் தமிழ் இலக்கியங்களில் உள்ளன .அசுத்தம் என்பது அப்போது இருந்ததாக எந்த வித பதிவுகளும் இல்லை .அப்படி இருந்த தமிழர்கள் ஏன் இப்படி ஒரு அசுத்தமான மக்கள் ஆனார்கள் ?அதன் பின் புலம் தான் என்ன ?
                         இப்போதும் தமிழர்கள் ,சுய சுத்தத்திலோ ,அல்லது இல்லத்தில் சுத்தத்திலோ  எந்த விதத்திலும்  குறை சொல்ல முடியாது .பொது வெளி என்று வரும் போது தான் தமிழர்கள்அசுத்தம் செய்கிறார்கள் .ஏன் அப்படி செய்கிறார்கள் ?
                                  என்னுடைய நண்பர் ஒருவர் கனடா நாட்டிலிருந்து வந்திருந்தார்.அவர் கூறிய ஒரு   தகவல்  சுவையாக இருந்தது .கனடா நாட்டில் பனிப்பொழிவு அதிகம் .சில நேரம் ஒரு அடிக்கு மேல் உயரமான பனிக்கட்டிகள் வீட்டின் முன்புறமுள்ள வீதியை நிரப்புமாம் .கனடா நாட்டு விதிகளின் படி அதை  அந்த   வீட்டு உடமையாளர் தான் அப்புறப்படுத்த வேண்டுமாம் !இவ்வாறாக ஓவ்வொருவரும் அவரவர் வீட்டு முன்னாலிருக்கும் பனிப்பொழிவை அகற்றவேண்டுமாம் !அதாவது ,பொது வெளிகளின் சுத்தத்திற்கு எல்லோரும் பொறுப்பாக்கப்படுகிறார்கள் என்பது தான் இதன் சாரம் .
 இந்திய கலாச்சாரத்தில்  இது எப்படி உள்ளது ?

  • பொது வெளிகளை சுத்தமாக வைப்பது எல்லோருடைய பொறுப்பு  என்று இல்லை .
  • யார் வேண்டுமானாலும் அசுத்தம் பண்ணலாம் .பி .எம் .டபுள் யு  விலிருந்து இறங்கியும் சாலையோரத்தில்சிறு நீர் கழிப்பார்கள்  !
  • அதை சுத்தப்படுத்தும் வேலை /கடமை என்பது  சில தாழ்ந்த   ஜாதிகளுக்கு மட்டுமே உண்டு .
  • ஆக பொது வெளி சுத்தம்  ஒரு  சாதிய வேலை /ஒதுக்கீடு  .
  • கு ப் பை யை போடுவது எல்லோரின்  உரிமை ;அதை அப்புறப்படுத்துவது  மட்டும்  தாழ் சாதியினரின் கடமை என்பது சாதிய வழிமுறையாக உள்ளதை யாராலும் மறுக்கமுடியாது .

                                எடுத்துகாட்டாக ,இரண்டு நிகழ்வுகளை கூறுகிறேன் .முதல் நிகழ்ச்சி ,ஒரு இந்திய பள்ளியில் நடந்த பொருட்காட்சி .எல்லா மாணவர்களும் உற்சாகமாய் பங்கெடுத்து ,கடை அமைத்து ,உண்டு ,விளையாடி களித்தார்கள் .இதில் எந்த விதமான சாதிய வேறுபாடுகளும் இல்லை .கடைசியில் விழாவின் வழக்கமான குப்பைகள் ,தாள்கள் ,பழத்தோல்கள் மைதானம் முழுவதும் நிறைத்தன .இது வரை ஆட்டம் போட்ட மாணவர்கள் யாரும் இவைகளை அப்புறப்படுத்த வரவில்லை .வர மாட்டார்கள் !ஏன் ?         குப்பை எடுப்பது ,அது மட்டும்   என் வேலையில்லை ,அது  துப்புரவு தொழிலாளரின்  வேலை !
குப்பையாக்கியது யார் ?நாமில்லையா ?பின்னர் ஏன் இந்த மனநிலை ?
                                         இரண்டாவது நிகழ்ச்சி ,சிங்கப்பூரில்ஒரு சர்வதேச  குடும்ப  முகாம் .முகாமில் காலை ,எல்லோரும் ஒன்றாய் ஓட்டம் ,பின்னர் ஒன்றாய் உணவு !சாப்பிட்ட தட்டுகள் எல்லாம் ஒரே இடத்தில் .அனைவரும் இணைந்து சுத்தப்படுத்த வேண்டும் .நான் ஒரு 10 தட்டாவது கழுவியிருப்பேன் .யாரும் மற்றவர் சாப்பிட்ட தட்டை கழுவமாட்டேன் என்று சொல்லவில்லை !அவ்வளவு ஒரு ஐக்கிய உணர்வு .இவ்வளவிற்கும் அதில் கறுப்பர்கள் ,அமெரிக்கர் ,ஆசிய மக்கள் எல்லோரும் இருந்தனர் .
                                   ஏன் இந்தியர்களால் இப்படி ஐக்கியமாக முடியவில்லை ?ஏனென்றால்சாதியம்  என்பது  ஐக்கியத்திற்கு முதல் எதிரி .அசுத்தம் சாதியத்தின் ஒரு பெரும் கூறு .
இந்த கலாச்சாரக் கூற்றை மாற்றாமல் 'சுத்தமான இந்தியா திட்டம் 'ஒரு நாளும் வெற்றியடைய முடியாது என்பதை நாம் உணரவேண்டும் .இது அமிதாப் சொல்லியோ ,பிரதமர் கையில் விளக்குமாறு கொண்டு நின்று படமெடுத்து   சாதிக்க முடியாது .அல்லது   'நம்மவர் ' கமல்  ஒரு பாட்டு பாடி சாதிக்க முடியாது .
                                                புதியதாக ஒரு கட்டிடம்  நம் நாட்டில்வருகிறதென்றால் ,யாரும் சொல்லாமல் ,எந்த வித சட்டமும் இல்லாமல் ,ஒரு சிறிய கோயில் எப்படியோ முளைத்து விடுகிறது !இதற்கு 'ப்ப்ரதான்  மந்திர் அபியான் 'என்று ஒரு திட்டமும் இல்லை !ஆனால்  திட்டமிருந்தாலும்   சுகாதார  தேவையான   கழிப்பறை மட்டும் கட்டப்பட மாட்டாது !ஏன் ?
சமீபத்தில் ஒரு 200 படுக்கை வசதியுள்ள பெரிய மருத்துவமனை சென்றிருந்தேன் .2 உணவகங்கள் ,ஒரு கோயில்,50 இருக்கைகள்  ,....எல்லாம் உண்டு .ஆனால் ,இவ்வளவு பெரிய மருத்துவமனைக்கு ஒரே ஒரு கழிப்பிடம் !ஆணுக்கு ஒன்று !பெண்ணுக்கு ஒன்று !அவசரமென்றால் சுவரில் அடி !
        இதெல்லாம்  மாற வேண்டுமானால்  ஒரு கலாச்சார புரட்சி வேண்டும் .அது மனப்புரட்சி ஆகவேண்டும். அதில் சுத்தம் செய்வது பற்றி பேசக்கூடாது .மாறாக அசுத்தம் செய்யாமல் இருப்பதை பற்றி பேசவேண்டும் .
                             வெளி நாடுகளில் முதலில் அசுத்தம் செய்து விட்டு பின்னர் சுத்தம் செய்வதில்லை .அசுத்தமே செய்யாமல் இருப்பார்கள் .ஊரெல்லாம் துப்பிவிட்டு பின்னர் துடைப்பதல்ல 'தூய்மை இந்தியா இயக்கம் '.துப்பாமல் இருப்பதே நம் நோக்கமாய் இருக்கவேண்டும் .அசுத்தம் செய்யாமல் இருப்பதே 'தூய்மை இந்தியா இயக்கம் '!
                          கங்கையை தினமும்  சுத்தப்படுத்துவதல்ல முக்கியம் ,         எப்போதும்  அசுத்தப்படுத்தாமல் இருப்பதே அதை விட முக்கியம் !தினமும்  5 டன் குப்பையை அகற்றி ,10 டன் குப்பையை போடுவதில் என்ன பயன் ?                                      
               ஆக ,'தூய்மை இந்தியா இயக்கம் 'வெற்றியடைய அமிதாப் தேவையில்லை .விளம்பரம் தேவையில்லை .இந்தியில் ஒரு பெயர் தேவையில்லை .இந்த சாதிய மன நிலை ஒழியவேண்டும் !மனப்புரட்சி வேண்டும் !அது ஓவ்வொரு வீட்டிலுமிருந்து தொடங்க வேண்டும்.ஓவ்வொரு பெற்றோரும் சுற்றுப் புற தூய்மை பற்றி குழந்தைகளுக்கு செயலில் காட்டவேண்டும் .எப்படி யாரும் சொல்லாமல்   சில  செயல்களை கலாச்சாரமாக செய்கிறோமோ ,அது போல் தூய்மையை  நம் கலாச்சாரமாக்க வேண்டும் .அது  ஒன்றே இதற்கு நிரந்தர  தீர்வாக அமையும்  !

No comments:

Post a Comment