Tuesday, 11 October 2016

காவல் துறையை கேவலப்படுத்துவது முறையா ?

தூங்கா விழிகள் இரண்டு !
நாம் நன்றாக தூங்க வேண்டுமென்று  ,தூங்காமல் விழித்திருக்கும் ,இரண்டு பெரும் துறைகள் உள்ளன .அவை ,நமது நாட்டின் பாதுகாப்பு துறையும் ,நம் ஊரின் காவல் துறையும் தான் .இந்த இரண்டிலும் ,உள்ளூர் காவல் துறை தான் நம்முடன் நெருங்கிய உறவை கொண்டது .அப்படி பட்ட காவல் துறையை கேவலப்படுத்தும் காட்சிகள் தமிழ் திரை படங்களில் அதிகமாக இடம்பெறுகிறது நாம் யாவரும் அறிந்ததே .இது முறையா என்பதே இப்போது நம் கேள்வி .
நடப்பதை தானே காட்டுகிறார்கள் !
'காவல் துறையில் உண்மையில் நடப்பதை தான் திரைப் படங்கள் பிரதிபலிக்கின்றன.இதில் என்ன தப்பு ?'என்று சிலர் சொல்லலாம்.எந்த துறையிலும் தப்புக்கள் நடக்கலாம் .காவல் துறை இதற்கு விதிவிலக்கல்ல .சாலைகளில்  விபத்துக்கள் நடப்பது உண்மை .ஆனால் அதை மட்டும் காட்டிக்கொண்டிருந்தால் ,சாலை என்றால் விபத்துதான் என்ற உள்ளுணர்வு எல்லோர் மனதிலும் வேரூன்றிவிடும் .அதன் பின் ,அதை தடுக்கவேண்டும் என்ற எண்ணம் முற்றிலும் ஒழிந்து விடும் .நேர்மறை எண்ணங்களை விதைத்தால் ,நேர்மறை விளைவுகள் எதிர்பார்க்கலாம் .எதிர்மறை எண்ணங்களை விதைத்தால், எதிர்மறை விளைவுகள்என்பது சாதாரணமாகிவிடக்கூடும் .எடுத்துக்காட்டாக ,ரத்தத்தை கண்டால் நமக்கு ஏற்படும் ஒரு பயத்தை ,தொடர்ச்சியாக ரத்தத்தை கொண்ட காட்சிகளை காட்டிக்கொண்டிருந்தால் ,போக்கி விடலாம் .இதனால் தான் ,விபத்தில் மாட்டியவர்களை ,நேராக காட்டாமல் நிழலாய் காட்டுகிறார்கள் .மேலும் ,எல்லோரும் அதிகாரத்திற்கு அடங்கி நடக்க  வேண்டும் என்ற பெரிய விழுமத்தை ,இவ்வாறான மோசமான சித்தரிப்பு குறைத்துவிடும் .
இவ்வாறு காவல் துறையை மிகவும் மோசமாக சித்தரிப்பதால் , காவல் துறை என்றாலே
  • சட்டத்தை மதிக்கமாட்டார்கள் 
  • சமூக விரோதிகளோடு கூட்டு வைத்திருப்பார்கள் 
  • காவல் நிலையத்திலே கற்பழிப்பார்கள் 
  • விலைமாதோரோடு கூட்டு வைத்திருப்பார்கள் 
  • கையூட்டு பெற்றுக்கொண்டு அபராதிகளை விட்டுவிடுவார்கள் 
  • பணம் கொடுக்காமல் உணவகங்களில் சாப்பிடுவார்கள் 
என்ற ஒரு தப்பான எண்ணம் மக்கள் மனதில் வலுவாக வேரூன்ற செய்துவிட்டார்கள் திரைத்துறையினர் .இதில் முக்கிய பங்கு நகைச்சுவை என்ற பெயரில் ,இந்த மாதிரி காட்சிகளில் நடிக்கும்  விவேக் ,சந்தானம் ,கௌண்டமணி போன்றவர்களுக்கே .
என்னுடைய அலுவலகத்தில் ,ஒரு முறை ஒரு இளம் பெண் ,சக ஆண் ஊழியர் மேல் ஒரு பொய் குற்றச்சாட்டை பதிவு செய்தார் .அவள் காலையில் அவளுடைய அறையில் தனியே இருந்தபோது ,அந்த ஆண் ஊழியர் ,உள்ளே நுழைந்து ,கதவை தாளிட்டு ,அவளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டார் என்பது தான்  அது .முதலில் இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர் ,தான் செய்யவில்லை என்று மறுத்தார் .ஆனால் யாரும் அதை நம்பவில்லை .மனம் ஒடிந்து போன அந்த ஊழியர் ,ஒரு நாள் காலையில் சீக்கிரமாகவே வந்து ,அந்த பெண்ணின் அறையில் நுழைந்து ,அவளை கட்டிப்பிடித்து ,ஒரு முத்தம் கொடுத்து விட்டு ,அவளிடம் "கணக்கு முடிந்தது !"இல்லாததை சொன்னாள் அவள் .இருப்பதாக மாற்றிவிட்டான் அவன் !காவல் துறையும் அது போல் மாறிவிட கூடாது என்பதே என் கவலை .
நல்லதையே காட்டுங்கள் !நல்லதே நடக்கும் !
தணிக்கை துறை என்று ஒன்று இருப்பதாக சொல்கிறார்கள் .அது இருந்தால் எப்படி இவ்வாறான காட்சிகள் அனுமதிக்க படுகின்றன என்று புரியவில்லை .நாம் ஒரு சுய தணிக்கை அதிகாரியாக மாறி ,இந்த மாதிரி காட்சிகளுக்கு ,சிறிது விட்டு போகாமல் ,நமது எதிர்ப்பை சமூக ஊடகங்களில் பதிவு செய்வோம் .அப்படியாவது திரைத்துறை திருந்துகிறதா என்று பார்ப்போம் !வரும் தலைமுறைக்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்புள்ளவர்கள் என்பதை மறக்க வேண்டாம் .

Tuesday, 4 October 2016

நம்முடைய தேசிய மொழி தான் என்ன ?

'தேசிய மொழி 'என்றால் என்ன ?ஒரு தேசம் முழுவதும் ,பேசப்படும் மொழி.எல்லோருக்கும் பொதுவாக புரியும் மொழி .இந்தியா முழுவதும் காசுமீரிலிருந்து கன்னியாகுமரி வரை எல்லோரும் அறிந்த மொழி என்ன ?
"இந்தி ?"நிச்சயமாக இல்லை !அது ஒரு ஆட்சியாளரின் கனவு .
"தமிழ் ?"இல்லவே இல்லை !தகுதியுள்ளவைகளுக்கு இந்நாட்டில் இடமில்லை !
பின்னர் என்ன தான் அந்த மொழி ?
காசுமீரிலிருந்து கன்னியாகுமரி வரை, இந்தியா முழுவதும் ,எல்லோரும் அறிந்த மொழி ஒரே இந்திய மொழி ---'பொய்'ஒன்றுதான் ! 'வாய்மையே வெல்லும் ' என்று எங்கும் எழுதி வைத்துக்கொண்டு ,எடுத்ததற்கெல்லாம் பொய் சொல்பவர்கள் நாம் தான் !
குடிமகனும் பொய் சொல்வார் !அரசும் பொய் சொல்லும் !
"வாங்க ,வாங்க ,வாங்க !காபி போடட்டுமா ?"(மனதில் ,'வந்துட்டான்யா !என்ன பண்ணுனாலும் ,இந்த பய வந்துர்ரானே !)
உடனே வந்தவர் "சும்மா வந்தேன் !இப்போதான் டீ குடிச்சேன் "(அவருக்கு டீ வேணும் .ஆனா சொல்லமாட்டார் .)
"என்னைய ஞாபகம் இருக்கா ?"
பதில் "உங்களையெல்லாம் மறக்க முடியுமா ?"(மனதில் 'ஆயிரம் பேரை பார்க்கிறேன் .எல்லோரையும் எப்படி ஞாபகம் வைக்க முடியும் ?கேக்கிற கேள்விய பாரு !')
சரி ,அதை விடுங்க .இவர்களாவது தனி மனிதர்கள்  .இப்போ ,அரசை எடுத்துக்கொள்வோம் .பொய் சொல்லுமா அரசு ?
நீதி மன்றத்திலே போய் பொய் அறிக்கை அரசே தாக்கீது செய்யும் நாடு, நம் நாடு .'(உ -ம்)காவேரி நீர் இருப்பு குறித்து உச்ச நீதி மன்றத்திற்க்கே 'தண்ணி 'காட்டுகிறது கர்நாடகா அரசு .
நடுவண் அரசு ஒரு திட்டம் கொண்டுவந்தது .அதன்படி 'கையினால் மனித மலத்தை அள்ளுவதை முற்றிலும் ஒழிக்கவேண்டும் 'என்ற நோக்கம் .இதற்கு ஒரு கணக்கெடுப்பு எடுத்தார்கள் .அப்போது ,தமிழக அரசு 'தமிழ் நாட்டில் அப்படி பழக்கமே  இல்லை 'என்று ஒரு பெரும் பொய்யய் எழுத்திலே கொடுத்து விட்டனர் ! எப்படி ?
இது இப்படியிருக்க ,இந்தியை 'எப்படியாவது ஆட்சி மொழியாக்கிவிட ,நடுவண் அரசு பலமுறை எண்களையும் கணக்குகளையும்  மாற்றி சொல்லும் நிலை காண்கிறோம்  .சென்னையில் கூட இந்தி  பேசுவது மாதிரி வட இந்திய ஊடகங்கள் பொய் காட்சி போடும்  !
ஆசிரியர் 'ஏன்டா ,நேற்று வகுப்புக்கு வரல ?'என்று கேட்டால் 'எங்க  பாட்டி செத்துட்டாங்க !'என்று மாணவன் அழகாய் பொய் சொல்வான் !பெற்றோரோ ,ஒரு படி மேலே போய் 'ஆமா ,இப்பதான் அடக்கம் பண்ணிட்டு வரோம் !'என்பார்கள் !
தமிழ் திரைப்படங்களிலோ ,பொய் சொன்னாலோ ,ஏமாற்றினாலோ ,தப்பே இல்லை .அது வெறும் சிரிப்புதான் ,போங்க !
எல்லா நாடுகளிலும் இப்படித்தானா ?மற்ற  நாடுகளை எடுத்துக்கொள்வோம் .பல வெளிநாட்டினர்,குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் , குற்றம் சாட்டப்பட்டவர்கள் ,நீதிமன்றங்களில் தாம் செய்த குற்றத்தை ஒத்துகொள்வது என்பது அங்கு வெகு சாதாரணம் .ஏன் ,நம் நாட்டில் மட்டும் ,கத்தியோடு பிடிபட்டால் கூட ஒத்துக்கொள்வதில்லை ?
'எந்த நாட்டிலும் இல்லாத அளவு பொய் பேசும் நாடு இந்தியா' ,என்று வெளி நாட்டினர் நினைப்பது நம்மில் பலருக்கு தெரியாது .காரணம் ,நாம் பொய் பேசுவது நமக்கே பல முறை தெரியாதது தான் !இந்த பொய் பழக்கத்திற்கு  அடிப்படை காரணம் தான் என்ன ?
நம்மில் பலர் ,இம்மாதிரியான கேள்விகளையே வேண்டாமென்று நினைப்பது உண்டு .ஆனால் ,இது தேவை .இது  ஒரு சுய பரிசோதனைதான் .நம்மை நாமே குறைசொல்வதல்ல நோக்கம் .ஆனால் உண்மையை மறைப்பதால் ,நாம் மாறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமலே  போய்விடக்கூடும் என்ற கவலையே  இதை சொல்ல தூண்டுகிறது . .
இதில்உங்கள் கருத்து என்ன ?உங்கள் நிலை என்ன  ?பதிவிடலாமே !கலந்துரையாடலாமே !

படம் நன்றி :adirainirubar.blogspot.com 

Monday, 3 October 2016

நண்பா ,ஏன் இந்த வலைப் பூ ?இதோ ,என் பதில் ...


மண்ணுக்குள் பூத்தப் பூக்கள் 
மண்ணோடு மக்கிப்  போம் !
என்னுக்குள் பூத்த பூக்கள் 
இதயத்தில் இறந்து போனால் ..
ஏமாந்து போகாதா ,
மலர் தேடும் தேனீக்கூட்டம் ?

Sunday, 2 October 2016

இடமில்லையேல், இனமும் இல்லை !


"வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் !"என்று நாம் பலமுறை நம் பண்பாட்டை பற்றி சொல்லி பெருமை கொள்கிறோம் .இது சரியா ?
                               இந்திய பெருங்கடலில் 'சென்டினல் தீவு ' என்ற ஒரு தீவு உள்ளது .இந்த தீவில் வாழும் மனிதர்கள் ,அவர் தம் கலாச்சாரம் பற்றி வெளி உலகுக்கு ஒன்றுமே தெரியாது .காரணம் ,அந்த தீவினர் வெளி உலகினர் யாரையும் அங்கு அனுமதிப்பதில்லை .வான் வெளியில் நாம் வானூர்தியில் தீவின் மேல்  பறந்து சென்றால் கூட ,உடனே அவர்கள் விஷ அம்புகளை மேல் நோக்கி எய்வார்களாம் !ஏன் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள் ?
                                        ஏனென்றால், தம்முடைய இடத்தை  இழந்தால் ,அது அவர்கள் இனத்தின்  அழிவின் ஆரம்பம் என்பதை அவர்கள்நன்றாக உணர்ந்திருப்பதால் தான்.அது அப்படியிருக்க, கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த குடியாம் நம் தமிழினத்திற்கு இந்த அடிப்படை உண்மை தெரியாதது உண்மையில் பெரும் ஆச்சர்யம் தான் !இயேசு பிரான் 'தட்டுங்கள் !திறக்கப்படும் !' என்றார் .நாம் தமிழரோ,அதற்கு மேல் ஒரு படி போய் ,தட்டாமலே கதவை திறந்து வைத்தோம் ..நல்லவரும் வந்தார்கள்.கூடே நயவஞ்சகரும் உள்ளே வந்தார்கள் .அடையாளம் தெரியாததால் அனைவரையும் அடுக்களை வரை,நாம்   அன்புடன் அனுமதித்தோம் .

                                                       வந்தவர்களோ,அதற்காக  நன்றியோடு நடந்து கொள்ளவில்லை .தமிழர் மொழியை திருடினர் ,சிதைத்தனர் .அவர்கள் பண்பாட்டை நம் மேல் திணித்தனர் .இறுதியில் நம்மையே ஆண்டு கொண்டு ,நம்மை இரண்டாம் தர குடிமகன்களாக மாற்றி விட்டனர் !
                                                   இன்று தமிழருக்கு தமிழ் நாட்டில் உரிய இடமில்லை .தமிழ் பேசினால் வேலையில்லை .தமிழரின் நிறமான கருப்பை,கிண்டலுக்கு உள்ளாக்கி  அவர்களையே வெறுக்க வைத்தனர் .மேலும் தமிழர் மண்ணெல்லாம் ஆக்கிரமித்து அவர்களின் வடமொழி பெயரில் குடியிருப்புக்கள் கட்டி கொண்டிருக்கிறார்கள் .தமிழ் நகரம் கோவையில் 'ஸ்ரீ தக்ஷ க்சிப்தா 'என்ற சொல்ல கூட கடினமான ,அசிங்கமான வட மொழி பெயரில் குடியிருப்பு வளாகம் உள்ளது  .அது போல ,நம்மால் தில்லியில் அழகு தமிழில் 'குறிஞ்சி குடியிருப்பு 'என்று பெயரிட்டு   கட்ட தான் முடியுமா ?இது போதாதென்று தமிழ் ஊடகங்கள் எல்லாவற்றிலும் தமிழரை முற்றிலும் ஒழித்து விட்டனர் .தொலை காட்சிகளில் கருப்பு முகமே இல்லாமல் செய்து விட்டனர் .தமிழ் விளம்பரங்களில் கூட வட இந்தியர் வந்து அசிங்கமாக தமிழ் பேசுகிறார்கள் .தமிழனுக்கு மிஞ்சி இருக்கும் தமிழ் நாட்டிலே ,இந்தியில் வியாபாரம் செய்கின்றனர் .சென்னை திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் இந்தியில் பேசும் ஊழியர்கள்,'தண்ணீர் ' என்றால் முழிக்கிறார்கள் !தரணி ஆண்ட தமிழன் ,இன்று தமிழகத்தை கூட ஆள முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறான் !
                       வடக்கு வாசல் திறந்திருப்பதால் ,தெற்கு நோக்கி தள்ளப்படும் தமிழன் ,குமரிக்கு கீழே கடல் தான் உள்ளது என்பதை மறந்து விட்டான் .கலைஞர் ஒரு முறை கூறினார் "தமிழனுக்கு போரிட தெரியும்;ஆனால் ,யாரிடம் போரிட வேண்டும் என்பது தான் தெரியாது !"உண்மை தான் .தமிழன் இன்னொரு தமிழனை அடித்தது தான் அதிகம் !"தேனீக்கள் கூட அதன் குடியிருப்புகளில் வேறு தேனீக்கள் வந்தால் கொட்டி கொன்றுவிடும் .நாய்களோ அதன் பகுதிகளில் அந்நிய நாய்களை அனுமதிப்பதில்லை .குலைத்து துரத்திவிடும் .உண்மைதான் ,நாமும் மற்ற பகுதிகளுக்கு வாழ செல்கிறோம் .ஆனால் சென்ற இடங்களில் எங்கும் நாம் அவர்களை அடிமைப்படுத்தி ஆளவில்லை .நாம் நல்லவர்கள் .ஆனால் நல்லவர்களை அடையாளம் கண்டுபிடிக்க தெரியாத அப்பாவிகள் !
இதைக்குறித்து சிந்திப்போம் !
கள்ளர்களுக்கு கதவை திறந்து வைத்தது போதும் !இடம் காப்போம் !நம் தமிழ் இனம் காப்போம் !திறந்த கதவை ஓங்கி அடைப்போம் !
இருப்பதைக் காப்போம் !இழந்ததை மீட்போம் !

Saturday, 1 October 2016

மின்சாரம் தாக்கி ,பேருந்து மோதி ,......

நம் நாட்டில் மட்டும் ,நாம் செய்யும் தவறுகளை மற்றவர்கள் மேலோ அல்லது மற்றவைகள் மேலோ பழி சுமத்தும் பழக்கம் பல காலமாக வலுவாக வேரூன்றி இருக்கிறது .
'ஏன்டா ,தலை வீங்கி இருக்கு ?'
இதற்கு பதில் 'ஒண்ணுமில்லம்மா ,வரும் போது நிலை இடிச்சிட்டு !'
ஏதோ ,நிலையே இவரை தேடி வந்து இடிச்சிட்டது போல !இவருடைய கவனக் குறைவால் ,இவர் தலையை நிலையில் கொண்டு போய் இடிச்சதை ,ஒத்துக்கொள்ளாமல் ,நிலை மேல் பழி சுமத்துவது நம் பண்பாட்டின் ஒரு கூறு .ஆங்கிலேயர்கள்  தமக்கு தலை வலி வந்தால் கூட 'I guess,I am developing head ache'என்பார்கள் .அதாவது 'நான் தலை வலியை உண்டாக்குகிறேன் 'என்ற பொருளில் சொல்வார்கள் .ஆனால் ,நம் நாட்டிலோ 'மின்சாரம்(அதுவாய் வந்து ) தாக்கும் ,பேருந்து மோதும் ,......எல்லாம் அதுவே நடக்கும் !நடக்கும் சம்பவங்களில் நம்முடைய பங்கு ஒன்றுமே கிடையாது போல  !
இந்த பொறுப்பை தட்டி கழிக்கும் போக்கு ,'எல்லாம் விதியின் செயல் ' என்ற ஒரு மூட நம்பிக்கைக்கு வழி வகுத்திருக்கிறது .
இந்த தவறான போக்கை  முற்றிலுமாய் கைவிட்டு ,நம் பொறுப்புகளை ,தவறுகளை ஒத்துக்கொள்ள பழகுவோம் !அதெல்லாம் விதி என்னும் நிலை தானே மாறும் !