Friday, 30 October 2020

மனுநீதி எங்கே இருக்கிறது ?காட்டுங்கள் ,பார்ப்போம் !

சமீபத்தில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வு,மனு  நீதிக்கு எதிராக திருமாவளவன் அவர்கள் பேசிய பேச்சும் அதன் தொடர்ச்சியாக ஊடகங்களில் அதை குறித்த விவாதங்களும் ஆகும். ஊடக விவாதங்களில் பல பிராமணர்கள்' மனுநீதி எங்கே இருக்கிறது காட்டுங்கள்! பார்ப்போம்!'என்று வெளிப்படையாகவே  சவால் விடுகிறார்கள். அதில் ஒருவர் 'மக்கள் குரானை வாசிப்பதை பார்த்திருக்கிறேன்; வேதாகமத்தை வாசிப்பதை பார்த்திருக்கிறேன் .ஆனால் மனுநீதி யாரும் வாசிப்பதை ல் இதுவரை பார்த்ததே இல்லை' என்று  ட்விட்டரில் கீச்சி இருக்கிறார் .

                                 அவர்கள் பேசுவதை பார்த்தால் பல நேரம் நமக்கே ஒரு குழப்பம் வந்துவிடும். ஆமாம், இந்திய அரசியலமைப்பு சட்டம் இருக்கிறது ;குரான் இருக்கிறது; வேதாகமம் இருக்கிறது.ஆனால் ,இந்த மனு தர்மம்  எங்கிருக்கிறது ?யார் அதை அறிவார்? யார் அதை சொல்லிக் கொடுக்கிறார்? எந்த புத்தகக் கடைகளிலும் அது எளிதாக கிடைப்பதில்லையே ! அவ்வாறு இருக்கும்போது எப்படி அது வேலை செய்கிறது ?அது எப்படி நம்மை பாதிக்கிறது ? திருமா தான் ஏதோ குழப்புகிறாரோ ?என்றெல்லாம் நினைப்போம் . வாருங்கள் ,சிறிது ஆராயலாம். 

                                            எல்லா நாடுகளிலும் சட்டம் என்பது ஒரே ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகிறது .ஆனால் இந்தியாவில் மட்டும் சட்டம் செயல்படும் விதம் முற்றிலும் மாறாக ,ஒரு தனி விதமாக உள்ளது. எப்படி? 

 இந்தியாவில்  மட்டும் சட்டங்கள்  மூன்று வகைப்படும் . 

1) எழுதப்பட்ட,   செயல்படும் சட்டம். 

2) பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்தாலும், எப்படித்தான் முயன்றாலும், செயல்படாத சட்டம். 3)மூன்றாவதாக,  எங்கும் எழுதப்படாமல்,   ஆனால் தன்னாலே நிச்சயமாக செயல்படும் சட்டம்

 என்று மூன்று விதமான சட்டங்கள் இந்தியாவில் உள்ளன .இது உங்களில் பலருக்கு மிகுந்த வியப்பை தரலாம் .பலர் இதை நம்ப கூட மறுக்கலாம்.மேலும் தொடர்ந்து படியுங்கள். எல்லாம்  உங்களுக்கு புரிய ஆரம்பிக்கும் .

                                         இப்போது முதலாவது வகையான சட்டத்தை பார்ப்போம். இந்த வகை சட்டம் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் எல்லோருக்கும் நிறைவேறும் ஒரு சட்டமாகும். இதில் நபருக்கு நபர் வேறுபாடு காட்டவேண்டிய தேவை அதிகம் இருக்காது .எடுத்துக்காட்டாக, போக்குவரத்து சட்டங்களை சொல்லலாம் .இரண்டாவது வகையான சட்டங்கள் சற்று வித்தியாசமானவை .அவைகள் ஒவ்வொரு  சமூகத்தையும் ,சாதியையும் , மதரீதியான பழக்கங்களையும் பாதிக்கக்கூடிய  சட்டங்களாகும் . அதாவது மனு நீதிக்கு எதிரான சட்டங்கள் இவைகள்.அப்படிப்பட்ட சட்டங்கள் ,என்னதான் நாம் முயன்றாலும் செயல்படுத்த முடியாத சட்டங்கள் ஆகும். எடுத்துக்காட்டாக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கொண்டுவரப்பட்ட வன்கொடுமை சட்டத்தை சொல்லலாம். இதில் பாதிக்கப்பட்டவர் என்னதான் முயன்றாலும், அவர் உயர் நீதி மன்ற நீதிபதியாகவே இருந்தாலும்,  அந்த சட்டத்தை செயல்படுத்தவே முடியாது.காரணம்,அந்த  சட்டத்தை செயல்படுத்தும் உயர் சாதி அதிகாரிகள் எல்லோரும் மனுநீதிக்கு  கட்டுப்பட்டவர்கள். அதை நிச்சயம் செயல்படுத்த விடமாட்டார்கள்.அதற்கான மறைந்திருக்கும் உள்நோக்கம்  என்ன என்பதை பின்னர் விளக்குகிறேன்.

                                                    இந்த இரண்டாவது வகையான சட்ட த்தைப்பற்றி விளக்க நீதிபதி கர்ணன் வழக்கை  எடுத்துக்கொள்ளலாம் .இந்த நீதிபதி கர்ணன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த உயர் நீதிமன்ற நீதிபதியாகும் . அவரை அவர் சாதியின் அடிப்படையில், சக நீதிபதிகளால்   புறக்கணிக்கப்பட்டு ,அவமானப்படுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டார் .அந்த சம்பவத்தின் முழு விபரங்களும் கீழ்க்கண்ட இணைப்பில் ஆங்கிலத்தில் காணலாம் .

நீதிபதி கர்ணனின் அவமானக் கதை

 அதை எதிர்த்து அவர் எல்லாவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து பார்த்தார். அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. இறுதியாக தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு கொடுக்கும் வன்கொடுமை சட்டத்தின் சரத்துக்களை உபயோகித்து,  அவரை துன்புறுத்திய  நீதிபதிகள்  மேல் தகுந்த ஆணை,உயர்நீதிமன்ற நீதிபதி என்ற முறையில் அவரே பிறப்பித்தார். ஆனால் கர்ணன் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போதிலும், அவருக்கு அரசியலமைப்பு சட்டப்படி அதிகாரம் இருந்தும், அவரது ஆணைகள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டன. பின்னர் எந்த நீதிபதிகளை அவர் குற்றம் சாட்டினாரோ,  அவர்களே அவர்கள் வழக்கை விசாரித்து, கர்ணனுக்கு,நீதிமன்ற அவமதிப்பு என்று   ஆறு மாதம் சிறைத் தண்டணை வழங்கினார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களே  அவர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியாது என்பது சட்டம் .ஆனால் அதை யெல்லாம் மீறி,அவர்கள் விசாரித்தார்கள் .அவர்களுக்கு அந்த அதிகாரம் இல்லை என்றாலும் ஊடகங்களோ, ஜனாதிபதியோ இந்த அநியாயத்தை தட்டிக் கேட்கவில்லை. இதைக் குறித்து  ஜனாதிபதிக்கு கர்ணன் மனு  கொடுத்தும்,  ஜனாதிபதியே இதில் தலையிட வில்லை. ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியை இன்னொரு நீதிபதி தண்டிக்க முடியாது.  அரசியலமைப்பு சட்டப்படி பாராளுமன்றம் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதை 'IMPEACHMENT ' என்று சொல்வார்கள். ஆனால் அது எல்லாம் செய்யாமல்  நீதிபதி கர்ணன் மீது ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து நிறைவேற்றி விட்டார்கள். வேறு எந்த நாட்டிலும் இப்படி நடக்க சாத்தியமே  இல்லை. மொத்தத்தில்  இது முழு  அராஜகம் தான்.மனுநீதி எங்கே இருக்கிறது ?காட்டுங்கள் ,பார்ப்போம் !என்போருக்கு இந்த சம்பவம் ஒரு சரியான பதிலாக அமைந்துள்ளது .

                                                     சமீபத்தில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள் ஒரு நீதிபதியை அவமதித்ததாக அவர்மேல் நீதிமன்ற   அவமதிப்பு வழக்கு போடப்பட்டு, அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டார் . அவர் உயர் ஜாதி சேர்ந்தவராதலால்  அவருக்கு இறுதியில் ரூ 1 மட்டும்  தண்டத் தொகையாக கட்டி விட்டு விடுதலை செய்து விட்டார்கள் ! இதுதான் அரசியலமைப்பு சட்டத்திற்கும் மேலான மனு தர்மம் !மனுநீதி எங்கே இருக்கிறது ?காட்டுங்கள் ,பார்ப்போம் ! என்பவருக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு .அந்த கதை இதோ !

உயர்சாதி பிரசாந்த் பூஷன் கதை

இதோ மனுநீதி செயலில் இருக்கும் அன்றாட காட்சிகள் !

1.சாதி மறுப்பு திருமணம் செய்தால் கொலை செய்வார்கள் !

                   எல்லா நாடுகளிலும் ஒரு ஆணும் பெண்ணும் விரும்பினால் அது சட்டப்படியான திருமணம் ஆக அமைந்தால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.ஆனால் , இந்தியாவில் மட்டும் அவர்கள் ஒரே சாதியாக இருந்தால் தான் மணம் செய்து  கொள்ள முடியும். இல்லை என்றால் பெற்றோரே பிள்ளைகளை  கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிடுகிறார்கள்.இது மனுநீதியின் தாக்கம் .

2.தீண்டாமை கடைபிடிப்பு  

 மதுரை அருகே ஒரு ஊரில் ,இன்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் செருப்பு அணியாமல் உயர்சாதி தெருக்களில் நடந்து செல்ல வேண்டும். மேலும் இருசக்கர வாகனத்தில் சென்றால் அவர்கள் இறங்கி அதை தள்ளிக் கொண்டு செல்ல வேண்டும்.

மதுரையில் தீண்டாமை

3.இன்னும் பல !(அருணன் கீச்சுகள் )

  • எங்கே இருக்கிறார் மநு? சாெந்த சாதி திருமணத்தில் இருக்கிறார்!
  • எங்கே இருக்கிறார் மநு?அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதைத் தடுப்பதில் இருக்கிறார்!
  • எங்கே இருக்கிறார் மநு? பாெதுத்துறை ஒழிப்பில் இருக்கிறார்! அங்குள்ள இடஒதுக்கீடு ஒழிப்பில் இருக்கிறார்!
  • ங்கே இருக்கிறார் மநு? நாடாளுமன்றம்-சட்டமன்றத்தில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மறுப்பில் இருக்கிறார்!
  • எங்கே இருக்கிறார் மநு? 50% இடஒதுக்கீடு மறுப்பில் இருக்கிறார்!
  • தொடரும் இந்த பட்டியல் .....
  • --------------------------------------------------------------------------------------------------------
மேலும் இதைப்பற்றி அறிய ,கீழ்க்கண்ட இலவச புத்தகத்தை வாசிக்கவும் :





 

Saturday, 24 October 2020

கள்ள ஆசீர்வாத வியாபாரிகள் !

                            

                                           இன்றைய தினம், தமிழ்நாட்டில் கிறிஸ்தவ ஊழியர்கள் பலர் 'ஊழியம்' செய்து கொண்டிருக்கிறார்கள் .இவர்கள் செய்வது ஊழியம் தானா அல்லது மதத்தின் பெயரால்  வியாபாரமா என்பது  பலருக்கு ஐயமாக உள்ளது .அதைக் குறித்து இப்போது நாம் ஆராயலாம் . 

                                                      இது குறித்து அலசும் முன், முதலில் ஊழியம் என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் .தமிழ் அகராதிப்  படி 'ஊழியம்' என்றால் 'தொண்டு' என்று பொருள் . வேதாகப்படி , மத்தேயு 28:19 &20 வசனங்கள் ஊழியத்தைக்  குறித்த அடிப்படை வசனங்கள் ஆகும் .அவை  இரண்டும் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம் . இந்த இரு வசனங்களையும், இயேசு கிறிஸ்துவின் 'பெரும் கட்டளை' (Great Commission ) என்று சொல்வார்கள்.

இதோ ,அந்த வசனங்கள் !


                                                                     ஆக, இதன் படி 'ஊழியம்' என்றால் என்ன ?1)ஊழியம் செய்பவர் யாருக்கு ஊழியம் செய்ய வேண்டுமோ அவரிடத்தில் போக வேண்டும் .
2)அவர்களை இயேசுவின் சீடராய் மாற்றவேண்டும். .அவர்களிடத்தில் கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும்.(மதம் மாற்றவேண்டாம் )
3)அவர்களுக்கு ஞானஸ்னானம் கொடுக்கவேண்டும் .
4)'நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்'
                இதில் நேரடியாக சொல்லப் படாவிட்டாலும், ஊழியக்காரன் இதற்காக பயனாளிகளிடம் இருந்து எதுவும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பது தெளிவு .ஏனென்றால் ஊழியக்காரன் என்பவன் ஒரு தொண்டன் ஆவான் .பயனாளிகளின் விருந்தோம்பல் மட்டும் அவன் தேவைகளுக்காக பெற்றுக்கொள்ளலாம் .
                 ஆனால் தற்போது ஊழியம் செய்கிறோம் என்று சொல்லி பலவிதமான வழிகளில் ஊழியக்காரர்கள் தங்களுக்கு  நிரந்தர வருமானம்  வரும் வகையில் ஊழியத்தை அமைத்துக் கொள்கிறார்கள். அதாவது 'ஊழிய முறை ' என்பதை 'வணிக முறை ' என்று மாற்றி விட்டார்கள். எடுத்துக்காட்டாக,ஒருவர் 'இயேசுவோடு  இளம் பங்காளர் திட்டம்' என்று ஒன்று ஏற்படுத்தி, ஒரு குறிப்பிட்ட தொகை அவரிடம் நாம் கொடுத்தால்  அவர் நம்மை  இயேசுவுடன் பங்காளராக மாற்றுவாராம் . அப்படி என்றால் இயேசு நமக்கு ஒரு 'பார்ட்னர்' என்று அந்த ஊழியக்காரர் ஒரு சான்றிதழ் கொடுப்பார். அப்படி சான்றிதழ் வாங்கியவர்களுக்காக  தினமும் அந்த ஊழியக்காரர்  ஜெபிப்பார் !இது எப்படி ?
இன்னொருவர் சொல்கிறார் ,"இயேசு என்றால் நீங்கள்  கேட்டதும்  உடனே கொடுக்க தயாராக உள்ள ஒரு தேவன்" ஆதலால் , அதற்காக மட்டும் அவரை தேடிப்  போங்க! அவருடைய போதனைகளைப்பற்றியோ , அவர் வாழ்ந்த முறை பற்றியோ ஒன்றும் சொல்லமாட்டார்கள் . அவரிடமுள்ள'ஆசீர்வாதம் என்ற  பணப்பையை' மாத்திரம் குறிவையுங்கள் ,போதும் !அற்புதம் நடந்தால் , அவர்கள் ,பயனாளியிடம் ,நீங்கள் நன்றியாக  தேவனுடைய ராஜ்யத்திற்கு  காணிக்கை  கொடுங்கள் என்று சொல்லமாட்டார்கள் .மாறாக ,எங்கள் ஊழியத்துக்கு கொடுங்கள் என்பார்கள் . ஆக, இதை ஒரு வியாபாரம் என்று சொல்லாமல் ஊழியம் என்று எப்படி சொல்லுவது?
                        ஊழியம் என்று சொன்னாலே பயனாளியிடமிருந்து  பதிலுக்கு நாம் ஒன்றும் பெறக்கூடாது என்பது அந்த சொல்லிலே  அடக்கம் .ஒன்றைக் கொடுத்து பதிலுக்கு பணம் வாங்குவது வியாபாரம் எனப்படும். 
                                     இதுபோல் பல ஊழியக்காரர்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். ஒருவரும் உங்கள் காரியங்களுக்காக நீங்களே ஜெபியுங்கள் என்று சொல்வதில்லை. ஜெபம் என்பது நமக்கும்  ஆண்டவருக்குமுள்ள ஒரு அந்தரங்க உரையாடல். அதை நாம் ஆள் வைத்து செய்யக்கூடாது . எடுத்துக்காட்டாக, நாம்  சாப்பிடுவது என்றால் வேற ஆள் வைத்து அவர்களை சாப்பிடச் சொல்வதில்லை. அதுபோல நாமே செய்யவேண்டிய ஒன்றுதான் ஜெபம். அதை நாங்கள் உங்களுக்காக செய்கிறோம். அதற்காக எங்கள் ஜெப வீரர்கள் ஏடிஎம் மிஷின் மாதிரி 24 மணி நேரம் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்!என்றெல்லாம்  விளம்பரம் செய்கிறார்கள்.நாம் அவர்களை தொடர்பு கொண்டு பேசினால், உடனே அவர்கள் நமக்காக கண்ணீர் விட்டு  ஜெபம் செய்கிறார்கள்! அப்படி எப்படி உடனே கண்ணீர்விட்டு,முன்பின் தெரியாத ஒருவருக்காக  பாரப்பட்டு  ஒருவர் ஜெபிக்க முடியும்? அப்படி பாரப்படுபவர்கள்,அவர்கள்  வரும்  வழியில் துன்பத்தில் இருப்பவர்களை , பசி பட்டினியில் இருப்பவர்களைக்  கண்டு,உதவி செய்பவர்களாக  இல்லையே! இன்னுமொரு  ஊழியக்காரர் இருக்கிறார். அவரும் உடனே கண்ணீரோடு ஜெபிப்பார். ஆனால் இந்த கடினமான கொரோனா  காலத்தில் கூட  இவர்கள் யாரும் பத்து பைசா  பட்டினியில் கிடப்பவர்களுக்கு கொடுத்ததாக தெரியவில்லை. ஊழியப் பாடல்கள் பாடி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த ஒருவர்  ஒரு ரூபாய் கூட ஏழைகளுக்கு கொடுப்பது இல்லை. ஆக ஊழியம் என்ற பெயரில் பாடல் பாடி அதில்  பணம் பண்ணுகிறார்கள் .இவர்களுக்கும் திரைப்பட பாடல்கள் பாடும் பாடகர்களுக்கும் என்ன வேறுபாடு? அவர்களும் பணம் வாங்குகிறார்கள்! இவர்களும் பணம் வாங்குகிறார்கள்! அப்போது ஏன் இது ஊழியம் என்று சொல்லவேண்டும்?என்ற  கேள்வி எழுகிறது.                               
                  வியாபாரம் செய்பவர்கள் எதைச் செய்தாலும், எதை பேசினாலும் அதில் அவர்களுக்கு என்ன லாபம் வரும் என்பதையே நினைத்துக் கொண்டு பேசுவார்கள். அதே போல தான் இந்த ஆசீர்வாத வியாபாரிகளும் .இதைப் புரிந்துகொள்ள நான் சொல்லும் இந்த ஒரு எடுத்துக்காட்டே  போதும். இந்த கொரானா  காலத்தில் கஷ்டப்படும் ஏழைகளுக்காக நான் என்னுடைய ஓய்வூதிய பணத்திலிருந்து 25 சதவீதத்தை எடுத்து கொடுக்க தீர்மானித்தேன். அதற்காக தமிழ்நாட்டின் பிரபலமான ஒரு 50 ஊழியக்காரர்களை அணுகினேன் . அவர்களிடம் உங்கள் சபையில் அங்கத்தினராக இல்லாத ஆனால் பசியால் கஷ்டப்படும் ஏழைகள் ஒரு பத்து பேரை எனக்கு அறிமுகப்படுத்துங்கள். ஒவ்வொருவருக்கும் நான் ரூபாய் 1000 அனுப்புகிறேன். ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கொஞ்சமாக இதை செய்கிறேன்' என்று அணுகினேன்.நம்புங்கள், அந்த 50 பேரில்  49 பேர் பதில் கூட அளிக்கவில்லை. ஒரே ஒருவர், ஒரு இரண்டு வங்கிக் கணக்கு விபரங்களை எனக்கு அனுப்பினார். அந்த இருவருக்கும் தலா ஆயிரம் அனுப்பினேன். ஆனால் அந்த பணத்தை பெற்றுக்கொண்டதாக அந்த ஏழைகளிடமிருந்து எனக்கு ஒரு தகவலும்  வரவில்லை. ஆக ஊழியக்காரர்கள் அவர்கள்  சபையில் அல்லது ஊழியத்தில் இருக்கும் அங்கத்தினர்களை தவிர வேறு யாருக்கும் எந்தவிதமான நன்மையும் செய்ய தயாராக இல்லை என்பது தெளிவு.
                           இவர்கள் இயேசுவின் போதனையான ,' நீங்கள் மனம் திரும்புங்கள். மற்றவர்களை நேசியுங்கள். மற்றவர் குற்றங்களை மன்னித்து விடுங்கள். என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், இவ்வாறெல்லாம் சொன்னால்  அவர்களுடைய வாடிக்கையாளர்கள் (Customers ) அவர்களை விட்டு விலகி விடுவார்கள்!வருமானம் இல்லாமல் போய்விடும் ! அதனால் அவர்களுக்குப் பிடித்ததை சொல்லி, அவர்களை அவர்களுடன் சபைக்குள்ளே  வைத்துக் கொள்வார்கள் .'உங்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும்! உங்கள் நோய்கள் எல்லாம் குணமாகும்! உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகும்! உங்களுக்கு கார் கிடைக்கும்! வெளிநாட்டில் வேலை கிடைக்கும்! என்றெல்லாம் சொல்லி சொல்லி அவர்களை ஒரு எதிர்பார்ப்பு மழையில் நனைய வைப்பார்கள்! பதிலுக்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் தசமபாகத்தை தவறாமல்  அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும்!இதைத் தவிர ஆசீர்வாதம் கிடைத்தால் அதற்கு ஒரு தனி காணிக்கை தரவேண்டும் !சில சமயம் வணிக நிறுவனங்கள் சிறப்பு தள்ளுபடி திட்டம்  கொடுப்பார்கள். அதேபோல இந்த ஊழியக்காரர்களும் 'எழுப்புதல் திருவிழா' என்று நடத்துவார்கள்.தனியாக ஜெபிப்பார்கள். நடுஇரவு ஜெபிப்பார்கள்.உபவாச ம்  செய்து ஜெபிப்பார்கள். ஆனால் ,பக்கத்து  வீட்டில் பட்டினியாய் கிடக்கும் ஒருவருக்கு ஒரு வேளை உணவு வாங்கிக் கொடுக்க மாட்டார்கள்! கிறிஸ்தவ னுக்கு அடையாளம்'அன்பு'. எல்லோரிடத்திலும் அன்பு காட்டுவது. அதை சொல்லித் தரவும் மாட்டார்கள். சபைக்கு உள்ளே செயல்படுத்தவும்  மாட்டார்கள். சபைக்கு உள்ளே சாதி பார்ப்பார்கள். தன் கிறிஸ்தவ பெயர் கூட அவர்கள் சாதி பெயரை சேர்த்துக் கொள்வார்கள்.தினமும் தொலைக்காட்சியில் பேசும் ஒரு பிரபல கிறிஸ்தவ சுவிசேஷகர் ஒருவர் ,இதையெல்லாம் எதிர்த்து,  பேசவேமாட்டார்.பேசினால் அவருடைய வாடிக்கையாளர்கள்  எல்லாம் போய்விடுவார்கள் என்ற பயம் .இவர் தேவனுக்கு ஊழியம் செய்கிறாரா இல்லை மனிதர்களுக்காக செய்கிறாரா ?என்பது கேள்வி .
                                            நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தமிழ்நாட்டில் உண்மையான ஊழியக்காரர்கள் இருந்ததே  இல்லையா ?என்று உங்களில் சிலர் கேட்கலாம். உண்மையான ஊழியக்காரர்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கவில்லை என்றால் எப்படி கிறிஸ்தவர்கள் இந்த அளவுக்கு தமிழ் நாட்டில் எண்ணிக்கையில் வளர்ந்திருக்க முடியும்?முதலில்  வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு  வந்த கிறிஸ்தவ 'மிஷனரிகள்' எல்லோரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தியா வந்து, தங்கள் உடல், பொருள், ஆவி எல்லாவற்றையும்  கிறிஸ்துவுக்காக கொடுத்து , இந்தியாவில் வாழ்ந்து, இந்தியாவில் மடிந்தார்கள். எடுத்துக்காட்டாக பலரை சொல்லலாம். இப்போது இந்தியாவின் ஒரு  பிரபலமான மருத்துவமனையாக  வேலூர் கிறிஸ்தவ  மருத்துவமனை திகழ்கிறது .இதன் ஸ்தாபகர் ஐடா ஸ்கடர் என்ற வெளிநாட்டு பெண்மணி ,தமிழ்நாட்டு மக்களுக்காக மருத்துவம் பயின்று ,ஒரு சிறிய அளவில் மருத்துவமனை தொடங்கி இன்று நாடு போற்றும் ஒரு மருத்துவமனையாக மாற்றியிருக்கிறார் . அவர்கள் தன் சொந்த பொருளை பயன்படுத்தி தான் இந்த வசதிகள் எல்லாவற்றையும் உருவாக்கினார்கள். மருத்துவத்துக்கு கூட  காசு வாங்கவில்லை அவர் .ஆனால் இன்றோ ஜெபத்திற்கு கூட காசு கேட்கிறார்கள். ஒரு பிரபலமான கோவையை சார்ந்த கிறிஸ்தவ குடும்பத்தினர், தங்களுடைய ஊழியத்திற்காக  சென்னையில் சொந்தமாக ரூ 50 கோடி முதலீட்டில் ஒரு கட்டிடம் வாங்கியிருக்கிறார்கள்! இந்த கட்டிடத்திற்குள்ளே  போக வேண்டுமென்றால் முதலில் நீங்கள் உறுப்பினராக மாறவேண்டும்.பின்னர்  பணம் கொடுத்தால்தான் ஜெபம் பண்ணுவார்கள். வெளிநாட்டு பெண்மணி ஐடா ஸ்கடர் அவர்களுக்கும்,இவர்களுக்கும்  என்ன வேறுபாடு? அவர் தன்னையே கொடுத்து கிறிஸ்துவை அறிவித்தார் !இவர் கிறிஸ்துவையே விலைக்கு  விற்று தனக்காக பணம் சேர்க்கிறார் !ஆக ,இப்போது  ஜெபிக்க வேண்டும் என்றாலே  காசு கொடுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
                                       எனக்கு தெரிந்த வரையில் தமிழ்நாட்டில் உண்மையிலேயே ஊழியம் செய்யும் ஒருவர் இருக்கிறார் .அவர் பெயர் அகஸ்டின் ஜெபக்குமார் .அவர் தூத்துக்குடியிலிருந்து கிளம்பிப் போய் பீகார் சென்று, பசி பட்டினியுடன் தவித்து, மெல்ல வளர்ந்து ,அங்குள்ள மக்களுக்கு சுவிசேஷம் அறிவித்து , தற்போது சுமார் 300 பள்ளிகள் அங்கு ஸ்தாபித்து ,அங்குள்ள மக்களை கிறிஸ்துவுக்கு நேராய் வழிநடத்தி, ஒரு உயர்ந்த ஊழியத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் .அவர் ஊழியத்தினால் பணம் சம்பாதிக்கவில்லை. அவருடைய சொந்த உபயோகத்திற்காக, ஊழியத்தின் கட்டிடத்தில் குடியிருக்கிறார். அதற்கு கூட அவர் வாடகை கொடுத்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய சுய உழைப்பில் தான் அவர் வாழ்கிறார் பவுல் அடிகளார் போல. ஆனால் இவரை குறித்து தமிழ்நாட்டு கிறிஸ்தவர்களுக்கு அதிகம் தெரியாது .அவருக்கு தெரிந்தவர்கள் எல்லாம் போலி ஊழியக்காரர்கள் தாம் .
                                        இவர்கள் எல்லாம் ஒன்றை  மட்டும் புரிந்து  கொள்ள வேண்டும் .மனிதர்களை ஏமாற்றி விடலாம்; ஆனால் தேவனை ஏமாற்ற முடியாது! விசுவாசமாக ஊழியும் செய்யவில்லையென்றால், அவருக்கு ஒருநாள் பதில் சொல்லவேண்டும் .இந்த உண்மையை உணர்ந்து அவர்கள் மனம்  திரும்பினால் நாட்டிற்கு நல்லது.

Tuesday, 20 October 2020

விருந்தினரா இல்லை கள்ளப் பருந்தினரா ?

                                


பிழிந்தது போதும் தமிழனை சக்கையாய் !

அழிந்தது போதும் அயலவன் கையால் !

வந்தாரை வாழவைப்பேன் !ஆனால் ,

வீட்டாரை விரட்டி அடிப்பேன் !

நான் தான் தமிழன் !

என் வீட்டில் நுழைந்தவர்

விருந்தினர் வேடத்தில் வந்த

கள்ளப் பருந்தினர் என்று

வேடம் கலைந்ததும் தான்

நன்றாய் விளங்கிக்கொண்டேன் !

உடன் விலகிக்கொண்டேன் !

படுக்கையில் என் பக்கத்தில் தூங்கியவன்

பகைவனா !ஐயகோ !

அவ்வளவு அப்பாவியா நான் !

கண்ணாடி பார்த்தேன் !

கண்ணீர் விட்டேன் !

நம்பிய என் முகம்

தெரிந்தது பூஜ்யமாக !

முதுகில் என்ன மூட்டை கனம் ?

முக்கி முக்கி தூக்கிக் கொண்டு அலைகிறேனே !

அது என்ன மூட்டை ஐயா !

வடுகரும் வடவரும்

மலை முகில் ஆட்களும்

ஐம்பது ஆண்டுகளாக என் முதுகில் ஆனந்தப் பயணம் !

நானோ அடிமைப்பெண் எம்ஜிஆர் போல

கூனி குறுகி,

ஆனாலும் ,’தமிழன்டா !’என்று கத்தும்

அப்பாவி தமிழன் !

அன்று ஆப்கானிஸ்தானிலிருந்து நாவலந்தீவு வரை

முடி முதல் அடி வரை

முற்றாய் வியாபித்திருந்த நான்

இன்று அடிமையாய் !

ஒரு சிறு நிலத்தில்

கற்பனை திராவிடர்கள் கீழ் கைகட்டி சேவகனாய் !

கணியன் பூங்குன்றனார் கண்ணில் பட்டால்

கையெடுத்து வணங்கி ,காலில் வீழ்ந்து ,

கேட்பேன் நான் ஒன்று !

‘அழித்துவிடய்யா எழுதியதை !

போதும் நாம் பட்டது !’

வந்தாரை வாழ வைத்தோம் !

வாழ வைத்தவர்களோ

நன்றிக்கடன் தீர்க்க  நம்மை

அழவைத்தார்கள் !

வாழ வந்தவர்கள் 

ஆள வந்துவிட்டார்கள் !

தமிழ் பேசி ஏமாற்றி !

போதும் !போதும் !

என் வீடு எனக்கே !

எம் நாடு எமக்கே !

எல்லோரும் சொல்வதை

நாமும் சொல்வோம் !

நலமாய் வாழ்வோம் !

நிலத்தை காப்போம் !

நல்ல ஒரு, நாட்டு நாயைப் போல !

Thursday, 15 October 2020

இன்னிசை வேந்தன் இளையராஜா ஒரு தலித் இல்லை !


                                    இளையராஜா என்னும் மாபெரும் இசைக்கலைஞன், இப்போது தமிழ்நாடு, இந்தியாவைத்  தாண்டி ,உலக அளவில் பெயர்  பெற்ற ஒருவராக மாறியிருக்கிறார் . அவருடைய இசை தமிழகத்தின்  இசைப் பாரம்பரியத்தின் ஒரு பரிணாமமாக பார்க்கப்படுகிறது .
                                                                                       அவர் ஒரு பெரும் இசைக்  கலைஞராக இருந்தாலும்,திரைப்படங்களுக்கு  இசையமைப்பு செய்வதால் ,அவர் ஒரு இசை வியாபாரியாகவும் பார்க்கப்படுகிறார். அந்த வகையில் யார் யாரெல்லாம், அவர் கேட்ட தொகையை கொடுக்கிறார்களோ ,அவர்களுக்கு இசையமைப்பு  கொடுப்பது அவர் கடமை என்ற ஒரு  எதிர்பார்ப்பு  உள்ளது . ஆனால் ,அதையும் மீறி பல இடங்களில், தன்னிச்சையாக ஒரு முடிவெடுத்து ,சில படங்களுக்கு தான் இசை அமைக்க மாட்டேன், என்று மறுக்கிறார் என சொல்லப்படுகிறது .

                                                 குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், பெரியார் திரைப்படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைக்க மறுத்ததாக கூறப்படுகிறது.ஆனால் , சமீபத்தில் வெளியான ஒரு செய்தி, அவர் 'தேசிய தலைவர் 'என்று முத்துராமலிங்க தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப் போவதாகவும் ,அதற்கு இளையராஜா இசையமைப்பு செய்ய சம்மதித்திருப்பதாகவும்  செய்தி  வெளியாகியது .


                                                                   Image credit Times of India

                                                     இளையராஜாவின்  இந்த முடிவு சமூக ஊடகங்களில் ஒரு பேசு பொருளாக மாறியிருக்கிறது .கடந்தமுறை தேவர்மகன் படத்தில் இளையராஜா அவர்கள் இசையமைத்த'போற்றிப் பாடடி பெண்ணே ..'என்ற பாடல் ,தென் மாவட்டங்களில் சாதிக் கலவரங்களுக்கு  வித்தாக மாறியது என்பது ஒரு கவலைக்குரிய செய்தி. ஆம்,தென்மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் இந்த பாடலை வேண்டுமென்றே தலித்துகள் வாழும் பகுதிகளில் போட்டு அவர்களை துன்புறுத்தியதாக பல செய்திகள் வந்தன .குறிப்பாக அந்தப் பாடலில் வரும் ஒரு வரி 'போற்றி பாடடி பெண்ணே ,தேவர் காலடி மண்ணை ' என்ற பாடல் வரி தான் கலவரங்களுக்கு வித்திட்டது என்று சொல்லப்படுகிறது .ஆக, இளையராஜா, தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கு எதிராக, தான் இசையமைத்திருக்கும்  பாடலையே  பயன்படுத்தி, கலவரத்துக்கு ஒரு வகையில் காரணமாக மாறியது பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை, என்பது பல ஊடகவாசிகளின்  எண்ணம் .இப்படி ஒன்று நடந்த பின்பும், இந்த 'தேசிய தலைவர்' படத்திற்கு இசையமைக்க அவர் எப்படி சம்மதித்தார்  என்ற கேள்விதான் சமூக ஊடகங்களில் ஒரு பரபரப்பான பேசு பொருளாக மாறியிருக்கிறது .
                                       1976 களில்  இளையராஜா தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் வேளை ,  சகல சாதிய சக்திகளும் அவர் தலித் என்பதால் ,அவருக்கு பலத்த எதிர்ப்பை காட்டினர்.இசை உலகம் என்பது பிராமணர்களும்,அவர்களை  சார்ந்தவர்களும் மட்டுமே பிரவேசிக்க முடியும் என்ற  சூழ்நிலை இருந்த காலம் அது .சுப்புடு என்ற ஒரு பிராமண  இசை விமர்சகர் ,இளையராஜாவை எந்த அளவுக்கு மட்டம் தட்ட முடியுமோ அந்த அளவுக்கு முயன்று பார்த்தார் .ஆனால், இளையராஜா அதை எல்லாம் ஒன்றும் கண்டு கொள்ளாமல் ,தன்னுடைய சொந்த முயற்சியினால் இசை உலகில் இந்த அளவிற்கு யாரும் தொடாத ஒரு சிகரத்தை  அடைந்திருக்கிறார் ..
                                             சாதி அமைப்பை கட்டிக்காக்க ,பார்ப்பனியத்திற்கு பலவிதமான சூழ்ச்சி முறைகள் உண்டு. 'சாம,  பேத, தான, தண்ட ' முறைகள் என்று அவர்கள் அதை சொல்வார்கள் .ஒரு தாழ்ந்த சாதிக்காரன்  இதைப்போல ஒரு சாதனை செய்ய எத்தனித்தால்,  முதலில் முடிந்த அளவு அவரை அமுக்க பார்ப்பார்கள் .அதையும் மீறி அவன் வந்து விட்டான் என்றால் ,இறுதியில் அவரை பிராமணர்கள் கூட்டத்தில் ஒருவனாக சேர்த்துக்கொள்வார்கள் .இதை ஆங்கிலத்தில் Co -option என்று சொல் வார்கள் .இளையராஜா ,என்னதான் இசையில் ஞானியாக  இருந்தாலும் ,அவர்களுடைய  வஞ்சக வலையில் சிக்கி ,தான் சார்ந்த சமூகத்திற்கு எதிராகவே ,தன் திறமையை  அவர்கள் பயன்படுத்துவதை உணராமல் ,இதற்கு சம்மதித்திருக்கிறார் இன்று பலர் எண்ணுகிறார்கள். ஆக, இது பார்ப்பனியத்தின் வெற்றிதான், என்கிறார்கள் சில கூர்நோக்கர்கள் . தன்  கையைக்  கொண்டு தன் கண்ணைக் குத்த வைப்பது தான் ,அவர்களுடைய பெரும் சூழ்ச்சி .அந்த வலையில் இளையராஜா  விழுந்து விட்டார் என்பது ,சமூக ஊடகங்களில் ,ஒரு பெரும் கவலையளிக்கும் விடயமாக பார்க்கப்படுகின்றது.
                                                        இளையராஜாவின் நாற்பத்தைந்து வருட இசைப்  பயணத்தில் அவர் எங்கும் அவர் சார்ந்த சமூகத்திற்கு பயன்படும் படியாக எந்த பாடலோ  அல்லது சமூக சேவையோ  செய்ததாக தெரியவில்லை என்று பல தலித்துகள்  நம்புகிறார்கள். அதற்கு மாறாக ,அவரை அமுக்கிக்  கொண்டிருந்த பிராமணர்களுக்கு பல நன்மைகள் செய்து இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள் .குறிப்பாக ஸ்ரீரங்கம் கோயில் கோபுர  பணிக்காக சுமார் 13 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார் .ஆனால் அந்த பணி முடிந்து அந்த கோபுரத்தின் திறப்பு விழாவிற்கு  இளையராஜாவை அவர்கள் ஒரு பொருட்டாக நினைத்து அழைக்க கூட இல்லை, என்பது செய்தி .தான் சார்ந்த சமூகத்திற்கு, தான் ஒரு உயர்ந்த நிலைக்கு வந்த பிறகு ஏதாவது செய்ய வேண்டும், என்ற எண்ணம் இளையராஜாவுக்கு இருந்ததில்லை என்பதுதான் தலித் மக்களின் மனக்குறை .இளையராஜா  அவர் சார்ந்த சமூகத்திற்கு  எந்த வகையிலும் பயன்படக் கூடாது என்பதை உறுதி செய்ய செய்யத்தான் பிராமணர்கள் அவரை தங்களின் ஒருவராக மாற்றிக் கொண்டார்கள், என்பதும் ஒரு சாரார் கருத்து.
                                                                இளையராஜா மட்டுமல்ல, தலித் சமூகத்திலிருந்து உயர்நிலை அடைந்தவர்கள் எல்லோருமே ,தான் வந்த சமூகத்தை புறக்கணித்துவிட்டு ,மேல்தட்டு  வர்க்கத்தினருடன்  கைகோர்த்து நடமாடுகிறார்கள் ,என்பதும் ஒரு பெரும்  உண்மையாகும். இதனால் இட ஒதுக்கீடு போன்ற சில திட்டங்களால் பயன்பெற்று உயர்நிலையை எட்டிய தலித் மக்கள் தங்களுடைய சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கும் மற்றவர்களுக்கு கைகொடுத்து தூக்கி விடுவதில்லை. மாறாக இவர்கள் மேல்தட்டு மக்களுடன் இணைந்து பல இடங்களில் அவர்களுடன் சம்பந்தம் வைத்துக் கொண்டு  இந்த சமூகத்தை விட்டு  விலகி நிற்கிறார்கள் என்பது நிதர்சனம்.மற்ற சமூகத்தில் இதுபோல் நடப்பதில்லை. எடுத்துக்காட்டாக,கிட்டத்தட்ட தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்ட நாடார் சமூகதிலிருந்து  இப்போது வியாபாரத்தில் பலர் உயர்ந்து நிற்கிறார்கள் . அவ்வாறு உயர்ந்தவர்கள் அவர்கள் சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருக்கும் கிராமப்புற  மக்களுக்கு  பலவிதமான உதவிகள் செய்து,அவர்களுக்கு தங்கள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளித்து ,அவர்கள் சமூக முன்னேற்றத்திற்கு  ஒரு பெரும் உதவி செய்கிறார்கள் .
                                                                 இளையராஜா ஒரு தலித்தாக   இருந்தாலும் இதுவரை தலித்துக்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு ஒரு முறை கூட கண்டனம் தெரிவித்தது இல்லை. இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிற உ .பி . கற்பழிப்பு  கொலைக்கு  இளையராஜா இதுவரை வாயை திறக்கவேவில்லை.ஆனால் , சமீபத்தில் இறந்த பிராமண பாடகர் எஸ்பிபி ,இவரை எவ்வளவு அவமதித்து இருந்தாலும் ,இவருடைய பாடல்களை இவர் சம்மதமில்லாமல் வெளிநாடுகளில் பாடி  கோடிக்கணக்கான பணம்  சம்பாதித்திருந்தாலும் ,அவர் நோய்வாய்ப்பட்ட உடன் இளையராஜா முதல் ஆளாக அவருக்காக பிரார்த்தனை செய்ய அவருடைய ரசிகர்களை கேட்டுக்கொண்டார். பின்னர், எஸ்பிபி இறந்தவுடன், அவர் ஆத்மா சாந்தியடைய உடனே திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று தீபமேற்றி வழிபட்டார் . இவைகளை அவர் ஒரு மனிதாபிமானத்தோடு தான் செய்தார் என்று சொல்ல முடியாது.மாறாக ,அவர் மேல் சாதி வர்க்கத்தோடு  முற்றிலும் ஐக்கியம் ஆகிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும் .அதுபோல, பா .ரஞ்சித் எத்தனையோ படங்கள் சமூக அக்கறையோடு எடுத்திருக்கிறார். அதில் ஒன்று கூட இளையராஜா இசையமைத்த தில்லை. ரஜினிகாந்த் எந்த அளவுக்கு தலித்துக்காக  ஒரு குரல் படங்கள் வழியாக கொடுத்தாரோ அதில் ஒரு கால் பங்கு கூட இளையராஜா செய்ததில்லை.நடிகர்  சூர்யா தமிழ்  சமூகத்திற்காக'அகரம் பவுண்டேஷன்' ஒரு அறக்கட்டளையை நிறுவி ஏழைக் குழந்தைகளுக்காக இலவசமாக பள்ளிக்கல்வி தருகிறார். இதுபோல எதையும், தமிழர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணம் சம்பாதித்த இளையராஜா இதுவரை  செய்யவில்லை.
ஆக ,இளையராஜா இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக வாழ வில்லை என்பதை பலருடைய கருத்தாக இருக்கிறது.



Sunday, 4 October 2020

இந்தி மொழி கொள்கை ,தமிழ் இன அழிப்பு கொள்கையா ?


'மொழி' என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்வோம். மொழி என்றால் ஒருவருக்கொருவர் பேசுவதற்காக பயன்படும் ஒரு கருவி என்பது ஒரு எளிய பொருள். ஆனால் அதைத் தாண்டி, மொழி என்பது பல பரிமாணங்களை கொண்டதாகும். 

மொழி என்பது தனி ஒருவருடைய அடையாளம். மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். மொழி என்பது ஒரு தேசியத்தின் அடையாளம். மொழி என்பது ஒரு இனத்தின் கொள்கைகளின் அடையாளம். மொழி என்பது ஒரு இனத்தின் கோட்பாடுகளின் அடையாளம் .மொழி என்பது ஒரு இனத்தின், எல்லா கலாச்சார, பண்பாட்டுக் கூறுகள், விழுமங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பாகும்.நான் இப்போது சொன்னது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். 

இதைத்தாண்டி, தமிழ்மொழி என்று வரும்போது,மற்ற மொழி அறியாத பல தனி  சிறப்புகள் இருக்கின்றன .தமிழ் மொழி உலகின் எல்லா மொழிகளிலும் மூத்த மொழியாகும்.பல மொழிகளுக்கு தாயாகும் .மேலும் ,தமிழ் மொழி எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் ஒரு மொழியாகும். 

மற்ற மொழிகளுக்கு இல்லாத இன்னொரு பெரும் சிறப்பு தமிழுக்கு உண்டு .இந்த சிறப்பு பற்றி  பல மொழி அறிஞர்கள் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அது என்ன அப்படி ஒரு தனி சிறப்பு ?

அது ,என்னவென்றால் தமிழ் மொழியை பேசும் வரை, அந்த பேசும் இனம் அழியாமல் பாதுகாக்கப்படும்  ஒரு உள் அமைப்பு அந்த மொழியில்  மறைந்து இருக்கிறது .அதாவது தமிழினத்தை அழியாமல் பாதுகாக்கும் மறைந்திருக்கும் தற்காப்பு கருவிகள் தமிழின்  உள்ளே உள்ளன . அது எப்படி என்று பார்ப்போம் !

மற்ற மொழிகளைப் போல தமிழ் மொழியில் குழப்பமான சொல்லமைப்பு/வாக்கிய அமைப்பு   இல்லை .தமிழ்மொழியின் சொல்லமைப்பு மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது. ஒரு சொல்லின் பொருள் தெளிவாக, அருமையாக, ஒரே அறுதியான பொருளாக இருக்கும். இதனால் எந்த மொழியிலிருந்து மொழி பெயர்க்கும்  போதும் தமிழில்  ஒரு தெளிவான பொருளே  விளங்கும். எடுத்துக்காட்டாக எதிரி ஒருவன் வந்து அவனுடைய மொழியில் ஒன்றை சொல்கிறான் என்று வைத்துக்கொள்வோம் .அது ,இந்தி என வைத்துக் கொள்வோம் .இந்தி மொழியில்'நேற்று' என்பதற்கு 'கல் 'என்று சொல்வார்கள். 'நாளை' என்பதற்கும் 'கல் 'தான்.ஆக , இந்தி மொழியில்' நாளை வந்தேன் 'என்று கூட சொல்லலாம்! ஆங்கிலத்தில் 'ஹாட்ஸ்பாட் 'என்றால் ' இணையத்தில் ஒரு தயாராக இருக்கும் இணைப்பு புள்ளி 'என்று பொருள் . ஆனால் தமிழில் 'ஹாட்ஸ்பாட் ' என்றால் 'சூடான இடம் 'என்று பொருள் . தமிழின் , இந்த தெளிவான சொல் அமைப்பு , தமிழர்களை ஒருநாளும் தவறான வழியில்/அழிவுப் பாதையில்  போகாமல் காப்பாற்றும் ஒரு பெருங் கருவியாகும் .தமிழில் அன்றாட வாழ்வில் ,அறிவுக்கெதிரான ,மூடத்தனமான ,எதிரியை வீழ்த்தும் கபடங்கள் எதுவும் சாத்தியமில்லை .தமிழனின் சிந்தனை அறிவுப் பூர்வமாய் இருப்பதை அம்  மொழி உறுதி செய்கிறது .

இதை  நன்கு உணர்ந்த ஆரியர்கள்,தமிழ் இனத்தை அழிக்க வேண்டுமானால் ஒரே ஒரு வழி, தமிழை அழிக்க வேண்டும் .தமிழை அழிக்கவேண்டுமானால் ,ஒரு குழப்பமான இன்னொரு மொழியை உருவாக்கி, அந்த மொழியை ,தமிழை விட உயர்ந்ததாக காட்டி , தமிழர்களை ஒத்துக்கொள்ள வைப்பது ஒன்று தான் வழி என்பதை உணர்ந்தார்கள் .அப்படித்தான் 'சமஸ்கிருதம்' என்ற ஒரு மொழியை உருவாக்கினார்கள்.

இந்த சமஸ்கிருதத்தை என்று தமிழர்கள் ஒத்துக்கொண்டு அவர்கள் வாழ்வில்  அனுமதித்தார்களோ ,அன்றிலிருந்து  தமிழனின் அழிவுப்பயணம்  ஆரம்பித்தது.பல நூறு ஆண்டுகள் சமஸ்கிருதத்தை, இவ்வாறாக தமிழர்கள் வாழ்வில் திணித்து ,இன்று தமிழர்களின் அறிவான சிந்தனை திறனை/போக்கை   அழித்து ,அவர்கள் வாழ்வில்  மெதுவாக மூடத்தனத்தை புகுத்தி ,அதைக்கொண்டு  தமிழர்களை அழிப்பதற்கு திட்டம் தீட்டினர் ஆரியர்கள் .அந்த சதி திட்டத்தின் ஒரு பாகமாக சாதியை தமிழரிடையே புகுத்தினர்.அவர் தம் திட்டத்தினில் அவர்கள்  வெற்றி ஒன்றும் அடையவில்லை என்று சொல்ல முடியாது.

தமிழனின் பல வெற்றி பெறும் திறன்களை சமஸ்கிருதத்தால் அழித்தனர் அவர்கள் . எடுத்துக்காட்டாக தமிழன் எப்பொழுதுமே அறிவுக்கு ஒவ்வாத பெயர்கள் அவர்கள் குழந்தைகளுக்கு சூட்டுவதே  இல்லை. 'மான்விழி 'என்றால் 'மான்போல் விழிகளை கொண்டவள் ' என்று  பொருள் .' தமிழரசன்'என்றால் ' தமிழுக்கு அரசன் 'என்று பொருள் .இவ்வாறான  நேரடி அறிவான சிந்தனையை பறிக்க, சமஸ்கிருத பெயர்களை, தமிழர்கள் அவர்கள் பிள்ளைகளுக்கு ,விரும்பி சூட  வைத்தனர் ஆரியர் . தற்போது தமிழர்கள் பலர் , பொருள் புரியாமல் தங்கள்  குழந்தைகளுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கின்றனர் .பொருள் புரிந்தால் ,யாராவது தன் மகனுக்கு 'பெரிய ஆண்குறி' ( மஹாலிங்கம்) என்றும் ,மகளுக்கு ,'கருப்பி '(ஷ்யாமளா ) என்று   வைப்பார்களா !சமஸ்கிருதத்தில் எந்த எந்த மாதிரி அசிங்கமாக தமிழர்களுக்கு பெயர் வைக்கிறார்கள் என்பதற்கு கீழ்க்கண்ட கட்டுரையை வாசிக்கவும்.

சமஸ்கிருத பெயர்களின் பொருள்

தமிழர்களில் ஒரு சாரார், இந்த சமஸ்கிருத சதித்திட்டத்தை அடையாளம் கண்டு , அதை எதிர்த்து  போராட்டத்தில் குதித்தார்கள் .அதனால் சமஸ்கிருத திணிப்பு மெதுவாக தமிழ்நாட்டில் குறைந்து ,கிட்டத்தட்ட இப்போது  இல்லை என்னும்  நிலைக்கு வந்துவிட்டது .ஏற்கனவே ,தமிழ் நாட்டில் சமஸ்கிருதமாக மாற்றப்பட்ட ஊர்  பெயர்களும் பழையபடி தமிழ் ஆக்கப்பட்டுவிட்டது .

ஆக ,சமஸ்கிருதத்தை வைத்து தமிழர்களை அழிக்கும் திட்டம் நிறைவேறாததால் ,இப்போது அதற்கு பதிலாக   இந்தியைக்  கொண்டு தமிழர்களை அழிக்க மாற்று  திட்டம் வகுத்திருக்கிறார்கள் ஆரியர்கள்!

இனி ,இந்தி மொழிக்  கொள்கை என்பது வெளிப்படையாக ஒரு கபடமில்லாத மொழிக் கொள்கையாக தெரிந்தாலும், உண்மையிலேயே அதனுள் மறைந்து இருக்கும் பலவித கொள்கைகள் வெளியில் தெரிவதில்லை .அவைகளை ஒன்று ஒன்றாக இப்போது காணலாம்.

  • இந்தி மொழிக் கொள்கை என்பது ஒரு மறைமுக இரட்டைக் குடியுரிமை கொள்கையாகும் !                                                                                                                                                                                     இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் பிறப்பிலே  இந்தியாவின் எல்லா வேலை வாய்ப்புகளுக்கும்  தகுதி உள்ளவர்களாக பிறக்கிறார்கள் .ஆக , இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் பிறப்பிலே முதல்தர குடிமகனாக  ஆகிவிடுகிறார்கள் மற்றவர்கள் பிறப்பிலேயே இரண்டாவது தரமாக  மாற்றப்படுகிறார்கள் ! ஆக , இந்தி மொழிக் கொள்கை என்பது ஒரு மறைமுகமான இரட்டைக் குடியுரிமைக்  கொள்கையாகும்!
  • இந்தி மொழிக் கொள்கை என்பது ஒரு மறைமுக பிறப்பு பாகுபாடு கொள்கையாகும்!                                                                                                                                                                                                        மேலே குறிப்பிட்டபடி இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் முதல்தர குடிமக்களாக பிறப்பினால் மாற்றப்படுவதால் ,இந்த மொழிக் கொள்கை பிறப்பினால் பாகுபாடு செயல்படுத்தும் ஒரு Discrimination Policy , பாகுபாடு கொள்கை ஆக மாறிவிடுகிறது.
  • இந்தி மொழிக் கொள்கை ஒரு மறைமுக வேலை வாய்ப்பு கொள்கையாகும்.

                                  மேலே சொன்னபடி இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் எளிதாக எல்லா இந்தி போட்டி   தேர்வுகளிலும்  வென்று விடலாம் .மற்றவர்களோ  இந்தியை கடினப்பட்டு படித்து , அதை இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் அளவுக்கு புரிந்து, அவர்களுடன் போட்டி போட்டு வெற்றியடைய வேண்டும்.இது , ஒரு மீனுடன்  ஒரு முயல் நீந்தக் கற்றுக்கொண்டு  தண்ணீரில்  போட்டி போடுவது போல ஆகும்!ஆக ,இந்தி மொழிக் கொள்கை ஒரு  மறைமுக  வேலை வாய்ப்பு கொள்கையாகும்.

*ஒரு மறைமுக சுயவேலைவாய்ப்பு கொள்கையாகும்.

 இதுவரை ஒரு மாநிலத்தின் மொழியை அறிந்தால்தான் அம்மாநிலத்தில்  சுய வேலை வாய்ப்பை தேடிக் கொள்ள முடியும். ஆனால் இந்தி மொழி திணிப்பிற்குப் பின் இந்திக்காரர்கள் அல்லாதவர்கள் அவருடைய சொந்த மாநிலத்திலேயே சுயவேலைவாய்ப்பு தேட முடியாத நிலைமை ஏற்படும் .ஆக , இது ஒரு மறைமுக சுயவேலைவாய்ப்பு கொள்கையாகும்.

*இந்தி மொழிக் கொள்கை ஒரு மறைமுக  மாநில மொழி அழிப்பு கொள்கையாகும்                                        ஒரு இருபது முப்பது ஆண்டுகள் இந்தி மொழியை இந்தியா முழுவதும் புகுத்தி விட்டால்  மற்ற மொழிகளெல்லாம் தன்னாலே இறந்து போகும்  நிலை ஏற்பட்டுவிடும் .ஏற்கனவே  இந்தியினால்  பல வட இந்திய மொழிகள் அழிந்துவிட்டன .எடுத்துக்காட்டாக, மார்வாரி,போஜ்புரி போன்ற மொழிகளை கூறலாம் . இந்தி இதுவரை அழித்த மொழிகளின் பட்டியல் கீழே உள்ளது .வாசித்து தெரிந்து கொள்ளவும் .


ஆக ,இந்தித் திணிப்பு கொள்கை என்பது ஒரு மறைமுக மாநில மொழி அழிப்புக் கொள்கை ஆகும்.

*இந்தி மொழிக் கொள்கை ஒரு மொழி ஆதிக்க கொள்கையாகும் . 

                                     மேலே குறிப்பிட்டபடி இந்திக்காரர்கள் எல்லாம் முதல்தர குடிமக்களாகவும் ,மற்றவர்கள்   இரண்டாந்தர குடிமக்கள் ஆகவும் மாற்றும் இந்த கொள்கை ஒரு மறைமுக ஆதிக்க கொள்கையாகும்.

*இந்தி மொழி கொள்கை திறமையையும் வளமையும் நசுக்கும் கொள்கையாகும்                                                         இந்தி  மொழி என்பது மிக சமீபத்தில் உருவான ஒரு மொழி .தமிழோ  சுமார் பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான, உலகிலேயே மூத்த மொழி .தமிழ் எல்லா வகையிலும் உயர்ந்து ,சிறந்து விளங்கும் ஒரு மொழியாகும். இந்தி மொழியில் 'நாளை' என்பதற்குக் கூட ஒரு சொல் கிடையாது.' நேற்று 'என்பதும்' நாளை 'என்பதும் , ஒரே சொல்லான 'கல்' என்ற சொல்லே குறிக்கும் .தமிழிலோ யானைக்கு 60 சொற்களும் ,சிங்கத்திற்கு  24 சொற்களும்  உள்ளன. அவ்வளவு வளமையான  மொழி தமிழ் .ஆக ,இந்தி மொழி என்பது ஒரு வளர்ச்சியடையாத ஒரு காட்டுவாசி மொழி என்னும் நிலையில்தான் உள்ளது. இந்த காட்டுவாசி மொழி ,தமிழைப் போல் ஒரு மூத்த மொழியை  ஆள நினைக்கும் போது ,அதில் திறமையையும் வளமையும் நசுக்கப்படும் என்பது உறுதி .

*தமிழ் எதிர்ப்பு கொள்கை,ஒரு 'பாரம்பரிய எதிர்ப்பு 'கொள்கை !

                             உலகின் மூத்த மொழியான  தமிழ் இந்தியாவின் தனிப் பெருமையாகும் .அவ்வாறான பெருமையை ,மத்திய அரசு உலக ரீதியாக ஒரு சுற்றுலா கவர்ச்சியாக காட்டி உலக மக்களை இந்தியாவிற்கு ஈர்க்கலாம் . அதை விட்டுவிட்டு இந்தியாவின் பழமையான தமிழை எப்படி அழிக்கலாம் என்று திட்டம் போட்டு அதற்காக இந்தியை புகுத்தி  அழிப்பது என்பது ஒரு 'பாரம்பரிய எதிர்ப்பு 'கொள்கையாகும்.

*இந்தி மொழிக் கொள்கை என்பது ஒரு மறைமுக இன அழிப்பு கொள்கையாகும்!

எந்த ஒரு மொழியும்  அந்த குறிப்பிட்ட இனத்தின் முக்கியமான அடையாளமாகும். அந்த இனத்தின் கொள்கைகள் ,கோட்பாடுகள், இலக்கியங்கள்,வாழும்  முறைகள், பண்பாட்டு நெறிகள் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிய ஒரு சொல் தான் 'மொழி' என்பது. ஆக ஒரு மொழியை அழித்தால் அந்த இனத்தை அழிப்பதற்கு சமமாகும். இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். ஆக ,இந்தி மொழிக் கொள்கை என்பது ஒரு மறைமுக இன அழிப்பு கொள்கையாகும்!

 *இந்தி மொழிக் கொள்கை என்பது 'தலைமைப் பண்புகளை அழிக்கும் 'மறைமுக  கொள்கையாகும்.

                              தமிழ் மொழி உலகத்தின் மூத்த மொழி என்பதால் தனிச் சிறப்புகள் பல  உள்ளன. தமிழ் மொழி தன் வளமையினால் ,செழுமையினால் ,பல் துறை  தலைவர்களை உருவாக்கியிருக்கிறது .இந்தி மொழி என்பது ஒரு இனம் இல்லாத உருவாக்கப்பட்ட மொழி .அது இதுவரை பெருந்தலைவர்கள் யாரையும்  உருவாக்கியது இல்லை .தலைமைப் பண்புகள் உருவாக்கக்கூடிய திறனோ ,வளமோ இந்திக்கு இல்லை .கீழே காணும் துறை தலைவர்கள் பட்டியலில் , நம் இந்திய தேசிய தலைவர்களில்  ஒரே ஒருவர்தான் இந்திமொழி பின்னணியில் இருந்து வந்திருக்கிறார். மற்ற எல்லோரும் மற்ற மொழி சமூகத்தினர்  என்பதை நாம் உணர வேண்டும்.

  1. வால்மீகி 
  2. வேத வியாசர் 
  3. திருவள்ளுவர் 
  4. நேரு குடும்பத்தினர் 
  5. மோடி 
  6.  அமித்ஷா 
  7. அமிதாப் பச்சன் 
  8. லதா மங்கேஷ்கர் 
  9. அடல் பிகாரி வாஜ்பாய்
  10.  மகாத்மா காந்தி 
  11. சர்தார் வல்லபாய் பட்டேல் 
  12. ராஜேந்திர பிரசாத் 
  13. ராதாகிருஷ்ணன் 
  14. ரவீந்தரநாத் தாகூர் 
  15. கருணாநிதி 
  16. ஜெயலலிதா 
  17. மம்தா பானர்ஜி 
  18. சத்திரபதி சிவாஜி
  19.  சாம்ராட் அசோகன் 
  20. கௌதம புத்தர்
  21.  ஹோமி பாபா 
  22. ஜே .ஆர் .டி .டாட்டா 
  23. முகேஷ் அம்பானி 
  24. சிவ நாடார்
  25. அண்ணாதுரை 
  26. காமராஜர் 
  27. சர் சி வி ராமன்
  28. இன்னும் பல .

ஆக , இந்தி மொழிக் கொள்கை என்பது 'தலைமைப் பண்புகளை அழிக்கும் 'மறைமுக  கொள்கையாகும்.

*இந்தி மொழிக் கொள்கை ஒரு ஜாதிய கொள்கையாகும் .

                          'ஜாதிய கொள்கை' என்றால் பிறப்பின் அடிப்படையில் ஒருவரை மேலானவராகவும் ம் மற்றொருவரை கீழானவராகவும்  வகுப்பதாகும் .இந்தி மொழிக் கொள்கையினால்  இந்திக்காரர்கள் எல்லாம்' மேல் ஜாதியாக,முதல் வகுப்பினராக ' பிறப்பினால் ஆகிறார்கள். ஆகவே இது ஒரு மறைமுக ஜாதிய கொள்கையாகும்.

*இந்தி மொழிக் கொள்கை ஒரு மறைமுக குடியமர்த்தல்  கொள்கையாகும் .

இந்தி மொழிக் கொள்கையை தொடர்ச்சியாக பல ஆண்டுகள் கடைப்பிடித்தால், இந்தி மொழிக்காரர்கள் பலர் தமிழ்நாட்டில் குடி அமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது . குடியமர்த்தப்பட்ட அவர்கள் வாக்குரிமை பெற  வாய்ப்பிருக்கிறது .சில காலம் ,கழித்து தமிழ்நாட்டின் நிலப்பரப்பு அவருடைய கைகளில் சென்று விடும் வாய்ப்பு பெரிதாக உள்ளது.ஆக , இந்தி மொழிக் கொள்கை என்பது போரின்றி   நிலப்பரப்பை அபகரிக்கும் ஒரு மறைமுக 'territory expansion policy  'ஆகும்.

 மொத்தத்தில், 

இந்த இந்தி மொழிக் கொள்கை என்பது நம் தேசிய ஒற்றுமைக்கு பெரும் ஆபத்தாகும். தமிழ்நாட்டில்  வாழும் தமிழர்களின்  வாழ்வுரிமைகளுக்கு முற்றிலும்  எதிரானதாகும். இதை,முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டியது தமிழர்கள் ஓவ்வொருவரின் கடமை .இல்லையெனில் ,தமிழர்கள் அழிவது உறுதி. 

வரும் 2021 தேர்தலில்   யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது முக்கியமல்ல யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதே முக்கியம் .அதை கருத்தில் கொண்டு,எந்த காரணம் கொண்டும் இந்தி மொழியை திணிப்பதில் குறியாக உள்ள  பா .ஜ .க விற்கோ ,இல்லை இந்திக்காரர்களை  மெதுவாக தமிழக அரசுப் பணிகளில் அமர்த்திய அ.தி.மு.க.வுக்கோ  வாக்களிக்கக் கூடாது என்பதை ஓவ்வொரு தமிழனும் உறுதி செய்ய வேண்டும் .இந்த ஒரு விஷயத்திலாவது  தமிழர்கள் யாவரும் ஒற்றுமையாக இல்லாவிட்டால் தமிழகம் அழிவது உறுதி.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இது ஒரு வாழ்வா ,சாவா போராட்ட கட்டம் என்பதை நாம் உணர விட்டால் ,நாம் வாழ தகுதியற்றவர்களாக  மாறிவிடும்  ஆபத்து உள்ளது .அதனால் , இந்த பதிவை குறைந்தது ஒரு பத்து தமிழருக்காவது  பகிரவும்.நன்றி .