Tuesday, 29 June 2021

புதிய கல்விக் கொள்கையும் தாய்மொழிகள் அழிப்பும்.



. "இந்தியாவிலேயே முதன் முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த பீகாரின் நிலையைப் பாருங்களேன்!"
1. "ஆனால் பீகாரின் தாய்மொழி போச்புரி மற்றும் மைத்திலி.'
'உத்திரப்பிரதேசமும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த ஒரு மாநிலம்தான்!"
"அதன் முன்னேற்றத்தையும் நண்பர்கள் ஆய்வு செய்து கொள்ளுங்கள்?"
2. "ஆனால் வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்டி!
வடகிழக்கு உ.பி யின் தாய்மொழி போஜ்புரி, பிரதாப்கர்!
மத்திய உ.பி யில் பேசப்படுவது ஆவ்தி,பிறகு கன்னோஜி என்கிற மொழியும் பேசப் படுகிறது!"
"அடுத்ததாக உத்தராகண்ட் மாநிலத்தின் ஆட்சிமொழியும் ஹிந்திதான் போதாதற்கு சமஸ்கிருதம் additional அலுவலக மொழி."
3. "ஆனால் உத்ராகண்டின் உண்மையான தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி!"
"அடுத்து ஹரியானா மாநிலத்தின் அலுவலக மொழியும் இந்திதான் !"
4, 'ஆனால் தாய்மொழி ஹரியான்வி!'
"ராஜஸ்தானில் ஆட்சி மொழி ஹிந்தி!"
5. "ஆனால் தாய்மொழிகள் ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி!
'"மத்யபிரதேசத்தின் ஆட்சி மொழி இந்தி!"
6. "ஆனால் தாய் மொழிகள் உருது, மால்வி, நிமதி, அவதி,
பகேலி!"
7. 'காஷ்மீரின் தாய்மொழி காஷ்மிரி மற்றும் உருது!"
8. 'ஜம்முவின் தாய்மொழி டோக்ரி, பாடி!'
9. "லடாக்கின் மொழி லடாக்கி, ஆட்சி மொழியாக இந்தி சமீபத்தில் அறிவிக்கப் பட்டுள்ளது!"
10. "சட்டீஸ்கரில் தாய்மொழி சட்டீஸ்கரி, கோர்பா, ஆனால் ஆட்சிமொழியாக ஹிந்தி!"
11. "'ஜார்கன்டில் தாய்மொழி ஜார்கன்ஷி,சந்த்தலி!
ஆட்சி மொழி இந்தி!"
அ) "மேற்கூறிய மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியில் இலக்கியங்களோ படைப்பு க்களோ வருவதில்லை!
வரி வடிவமற்ற வெறும் பேச்சு மொழிகளாக அவை மாறி, சுருங்கிவிட்டன!"
ஆ) "இந்தி மொழி வந்து ஆளுமை பெற்றதால் உண்மையான தாய் மொழிகள் எந்த ஒரு வளர்ச்சி யும் இல்லாமல் அழியும் நிலையை எட்டிவிட்டன!"
இ.) "ஏனென்றால் தாய்மொழி அவர்களுக்கு அவசியமற்றதாகி விட்டது. "
ஈ) "அவர்கள் தாய் மொழியில் படித்தால் அவர்கள் ஊரிலேயே வேலை கிடைக்காது என்பதால் தாய்மொழி வெறும் வாய்மொழி ஆகிப்போயின.'
உ)" கல்விநிலையங்களில் கற்பிக்கப்படுவதில்லை.'
i) "சரி ! மேற்கூறிய மாநிலங்களில் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டதால் பொருளாதார வளர்ச்சி கிடைத்துவிட்டதா என்றால் இல்லை."
ii) "தாய்மொழியை ஆட்சி மொழியாகக்கொண்ட தமிழகத்தைவிட பின்தங்கியே உள்ளன.'
iii) 'சரி! கல்வியளிப்பதிலாவது வளர்சியடைந்துள்ளதா என்றால் அதிலும் தமிழகத்தைவிட பலமடங்கு பின்தங்கியே உள்ளன!"
iv) "பிறகெதற்கு நம்மீது மும்மொழிக் கொள்கை என்று இந்தியைத் திணிக்கிறார்கள் என்றால் இந்தி பேசும் மாநிலத்தினருக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பைப் பெறுவதும்,தொழில் மேற்கொள்வதும் ஏன் தேர்தல் பிரச்சாரம் செய்வதும்கூட எளிமையாக இருக்க வேண்டுமல்லவா?"
"நான் உன்னோடு தொடர்பு கொள்ள எனக்குச் சிரமமாக இருக்கிறது. அதனால் நீ என் மொழியைக் கற்றுக்கொள் என்பது எவ்வளவு திமிரான அடக்குமுறை?"
'அந்த அடக்குமுறைதான் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது; புதிய. கல்விக் கொள்கை வாயிலாக ..., "
இதை தயவுசெய்து அரசியலாக்க வேண்டாம்!"
இவண்
பகிரதன்
பட்டுக்கோட்டை
---------------------------------------------------------------------------------------------------------------------------





Saturday, 26 June 2021

அப்படி அய்யன்காளி என்னதான் செய்தார் மகாத்மா என்று சொல்வதற்கு ?

(1863,ஆகஸ்ட் 28...-18-6-1941) திருவாங்கூர் மன்னரின் ஆட்சி, கொடிகட்டி பறந்த நாட்கள்...ஒடுக்கப்பட்ட மக்கள் மீது, எண்ணற்ற ஒடுக்குமுறைகள், சுமத்தப்பட்டிருந்த, கொடிய நாட்கள்...ஒரு முறை, மகாத்மா காந்தி அய்யன்காளியை சந்தித்த போது கேட்டார்:"Mr.அய்யன்காளி, உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும்"?அய்யன்காளி பதிலாக"பாபுஜி.. எங்கள் சாதிகளைச் சேர்ந்த 10பேர், நான் இறப்பதற்கு முன்பு, BA பட்டதாரிகளாகி காண வேண்டும்"என்றார்...

மகாத்மாவால் எந்த பதிலும் சொல்ல இயலவில்லை....ஒடுக்கப்பட்ட மக்கள், மேலாடை அணியக்கூடாது; இடுப்புக்கு கீழே, முழங்கால் வரைமட்டுமே ஆடை அணிய வேண்டும்; பெண்கள் தங்கள் மார்புகளை மறைக்கக் கூடாது, ஆண்கள் மீசை வைக்கக்கூடாது;ஒடுக்கப்பட்ட மக்கள், பொது வழிகளில் நடக்கக்கூடாது; ஒடுக்கப்பட்ட மக்கள், பள்ளிகளில் சென்று படிக்கக்கூடாது;ஒடுக்கப்பட்ட பெண்கள், நகைகள் அணியக்கூடாது; ஒடுக்கப்பட்ட பெண்கள், தாங்கள் கீழ் சாதியினர் என்று அறிவிக்கும் வகையில், கழுத்தில், கல் மாலை தான் அணிய வேண்டும்; காதில், இரும்புத் துண்டுகளை மட்டுமே, கம்மலாக அணிய வேண்டும்; என்றெல்லாம், அன்றைய எசமானர்கள், ஆண்டைகள், #ஆச்சாரங்கள்/#மரபுகள்/#கீழ்வழக்கங்கள் என்ற பெயரில்,ஒடுக்கப்பட்ட மக்களை, குரூரமாக அடக்கி ஆண்டு வந்த காலம் அது...ஒடுக்கப்பட்ட மக்களின் #பெரும்குரலாக ஒலித்தது, #அய்யன்காளியின் குரல்!

#பஞ்சமி எனும் ஒடுக்கப்பட்ட பெண் குழந்தைக்கு, கல்வி மறுக்கப்பட்ட போது, அந்த இளம் குருத்தை அழைத்துக்கொண்டு ஊரூட்டம்பலம் பள்ளிக்கு சென்ற போது, ஆண்டைகள், அந்த பள்ளிக்கூடத்தை தீ வைத்து கொளுத்தியிருந்தனர்!விடவில்லை அய்யன்காளி.... மலபார் வரலாற்றின் முதல், விவசாயிகள் வேலை நிறுத்தத்தை அறிவித்தார்; ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள், வயல்வெளிகள் வறண்டு போய் கிடந்தன;இறுதியில், #பஞ்சமிகள், பள்ளிக்கு சென்றனர்;

ஒடுக்கப்பட்ட மக்கள், நகர வீதிகளில், தெருக்களில், பொது வழிகளில் நடக்கக்கூடாது என்ற ஆண்டைகளின் உத்தரவை, மீற தயாரானார் அய்யன்காளி..

அவர் பிறந்த, வெங்ஙானூரில், கொழுத்த இரண்டு வெள்ளை நிற காளைகள் பூட்டப்பட்ட, வில் வண்டியில், ஜரிகை தலைப் பாகையும், முழு வேட்டி சட்டை, அங்க வஸ்திரத்தோடு, வெங்ஙானூர் வீதிகளில் புயல் வேகத்தில், களமிறங்கியது, அய்யன்காளி என்ற இளம் காளை... ஆண்டைகள் அதிர்ந்து போய் நின்றனர்!பிறகு நகர வீதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களோடு வீதிகளில் நடந்து சென்றார் அய்யன்காளி...

காட்டுமிராண்டித்தனமாக அய்யன்காளியும், உடன் சென்றவர்களும் தாக்கப்பட்டனர்; ஓடி ஒளியவில்லை அய்யன்காளி.... தொடர்ந்தது போராட்டம்....வரலாற்றில், வில் வண்டி போராட்டம் என்று நினைவு கூரப்படுகிறது இந்த போராட்டம்...

புகழ்பெற்ற கல்மாலைப் போராட்டம்;

ஒடுக்கப்பட்ட பெண்கள், தங்க/வெள்ளி நகைகள் அணியும் உரிமை இல்லை...
தங்கள் கழுத்துகளில், கல்/ஒடு போன்றவற்றை கோர்த்து மட்டுமே மாலையாக அணிய வேண்டும்; காதுகளில் இரும்புத் துண்டுகளை, கம்மல்களாக அணிந்து கொள்ள வேண்டும்;இது, அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதை அறிவிக்கும் அடையாளமாகவும் இருந்தது...
கல்(லு)மாலை போராட்டத்தில் இறங்கினார் அய்யன்காளி... நீண்ட நெடிய போராட்டம்; அதனால் தான் மக்கள் அவரை, #மகாத்மா #அய்யன்காளி என்று அழைக்கின்றனர்...
சாதியின் பெயரால், வர்ணத்தின் பெயரால், மக்களின் பெரும்பகுதியினர் ஒடுக்கப்பட்ட போது,#ஆச்சாரங்கள், #மரபுகள், #கீழ்வழக்கங்கள் என்ற பெயரில்,இழிவாக நடத்தப்பட்ட போது, அவற்றையெல்லாம், முட்டி மோதி, எதிர் கொண்டு, அனைத்தையும் தகர்த்தெறிந்த,மாவீரன், #மகாத்மா #அய்யன்காளியை #நினைவு கூர்வோம்...

#அய்யன்காளி நினைவு தினம் இன்று...#ShahulHameed
 #மகாத்மா #அய்யன்காளி.....
#மீள்...பதிவு 

Sunday, 20 June 2021

ஆங்கில சொற்கள் தமிழிலிருந்து தான் தோன்றியதா ?

 நான் அடிக்கடி நினைப்பது உண்டு .ஏன் ,இந்த தமிழர்களுக்கு இவ்வளவு  அதீத  ஆங்கில மோகம் என்று!சொல்லுக்கு சொல் ஆங்கிலம்  இல்லாமல் பேசுவதில்லை .  பல வீடுகளில் இப்போது  தமிழ் தெரியாது என்று பெருமையுடன் சொல்லும் குழந்தைகள் உள்ளனர்  ! அவர்கள் பெற்றோரின் முகத்திலும் அப்படி சொல்வதில்  ஒரு பெருமிதம் !'அவளுக்கு தமிழ் தெரியாது !'என் உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தேன் .வீட்டிற்குள் நுழையும் முன்னே ஒரு குட்டிப் பெண்என்னிடம் ஓடி வந்து , 'கேன் யு ஸ்பீக் இங்கிலிஷ் ?'என்றாள் .நான் 'யெஸ் 'என்றவுடன் அவள் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கவேண்டுமே !வரும் தாத்தா ,பாட்டி ,மாமாக்கள் யாருக்கும்  இங்கிலிஷ் தெரியவில்லை என்பது அந்த பிஞ்சு மனதின் பெரிய குறை .மொத்தத்தில் ,தமிழருக்கும் ஆங்கிலத்திற்கும்   ஏதோ ஒரு பூர்வ ஜென்ம தொடர்பு , நெஞ்சம் மறப்பதில்லை பாணியில் உள்ளதோ என்று  நான் அடிக்கடி  நினைப்பதுண்டு .இப்போது அந்த நினைப்பு உண்மையாகி விட்டதோ என்று சொல்லும் படியாக ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது .அதில்  எனக்கு வியப்பு இல்லை தான் .

                          சிறு வயதில் இருந்தே 'எட்டிமொலஜி 'என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் 'வேர்ச்சொல்லியல் 'என் நெஞ்சம் கவர்ந்த ஆர்வம் .என்னுடைய 15 வயதிலே,என் நண்பர்கள் இரட்டை சடை பின்னால் அலைந்து கொண்டிருக்கும் போது ,நான் என்னுடைய அப்பாவின் சேம்பேர்ஸ் ஆங்கில அகராதியை எடுத்துக்கொண்டு ஒதுங்கி விடுவேன் .தினமும்  10 கிரேக்க வேர்ச்சொற்கள் படிப்பேன் .மனதில் வைத்துக்கொண்டு, பின்னர் அரசு மருத்துவ மனை சென்று அங்கு இருக்கும் ஆங்கிலப்  பெயர் பலகைகளை வாசித்து ,அதன் பொருளை ஊகிப்பேன் .எடுத்துக்காட்டாக ,'காது-மூக்கு -தொண்டை 'நிபுணரை,மருத்துவ துறை  ஆங்கிலத்தில்  'ஓட்டோ ரைனோ லரிங்கோலோஜிஸ்ட் 'என்பார்கள்   .எனக்கு கிரேக்க வேர்ச்சொல் தெரிந்ததால் 'ஓட்டோ =காது ,ரைனோ=மூக்கு , லரிங்கோ=தொண்டை ,லோஜிஸ்ட் =நிபுணர் 'என்று  எளிதில் கண்டுபிடித்து விடுவேன் !யாரிடமும் கேட்காமல் நானே கண்டுபிடிப்பது உள்ளுக்குள் ஒரே மகிழ்ச்சியாக இருக்கும் .
                              பின்னர் வளர்ந்து நான் வங்கித்துறையில் பணியாற்றினாலும் ,வேர்ச்சொல் ஆர்வம் என்னிடம் வேர்கொண்டிருந்தது .2003 ல் ,  நாம் தமிழில் அன்றாடம் பயன் படுத்தப்படும் ஒரு சொல், ‘பழைய ‘ என்ற சொல் .இது  எப்படியோ ,கிரேக்க மொழியில் புகுந்து ,’பலயோ ‘என்று இருப்பதை , கண்டு பிடித்து வியப்படைந்தேன் .இந்த கிரேக்க சொல் ,ஆங்கிலத்தில்’ பலயோ ஸூலஜி ‘போன்ற பல ஆங்கிலச் சொற்களில் பயனாகிறது.இந்த சம்பந்தத்தைக் குறித்து தீவிர ஆராய்ச்சியில் இறங்கினேன் .
என்னுடைய ஆராய்ச்சியின் முடிவில்  இந்த சொல் தமிழில் உள்ள சொல் தான் என்று உறுதியானது .அதை தகுந்த ஆதாரங்களுடன் 2003 வது வருடத்தில்,அமெரிக்காவில் இருந்து வெளியாகும்Linguist List ‘லின்குய்ஸ்ட் லிஸ்ட் ‘என்ற சர்வ தேச மொழி தளத்தில் பதிவு செய்தேன் .உலக மொழியிலாளர்களின் கவனத்தை இந்த பதிவு ஈர்த்தது .பல புகழ் பெற்ற மொழியிலாளர்கள் என்னை தொடர்பு கொண்டு ,இதைக் குறித்து பல விதமான ஐயங்களை எழுப்பினார்கள் . மொழியியலின் தந்தை என்று போற்றப்படும் பேரா .லாரி ட்ராஸ்க் அவர்களும் இதில் உண்டு .அவைகளுக்கு எல்லாம் தகுந்த பதில் தந்து ,கிரேக்க தமிழ் தொடர்பு ஒரு ஜனன தொடர்பு என்பதையும் நிரூபித்தேன் .என்னுடைய முடிவுரையை முழுதுமாக '‘லின்குய்ஸ்ட் லிஸ்ட்'இதழ் வெளியிட்டது .(காண்க :ஜூன் 9,2003-14.1630.https://linguistlist.org/issues/14/14-1630.html )
                                              இதன் தொடர்ச்சியாக ,கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து ,அதன் முடிவுகளை ,Proto-Indo-European Language-Face Unveiled'அதாவது ,' 'புரோட்டோ இந்தோ யுரோப்பியன் மொழி --முகத்திரை வீழ்ந்தது !'(
புத்தகம் வாங்க இதை அழுத்தவும்  )என்ற ஆங்கில  புத்தகமாக கடந்த 2019ல்   வெளியிட்டிருக்கிறேன் .
                                       இந்த புத்தகத்தில் தமிழுக்கும் இந்தோ யுரோப்பியன் மொழிகளுக்கும் பொதுவான சொற்களை பட்டியலிட்டு காட்டியிருக்கிறேன் .அந்த பொதுவான சொற்கள் அன்றாடம் பயன்படும் சொற்களாகவும் ,பாலியல் பற்றிய சொற்களாகவும் இருப்பது இந்தோ யுரோப்பியன் மொழிகள் தமிழுக்கு எந்த அளவில் உறவு கொண்டுள்ளன என்பதை நிருபிக்கும் படியாக அமைந்துள்ளது .
ஆக ,தமிழ் தான் இந்தோ யுரோப்பியன் மொழிகளுக்கு தாயான புரோட்டோ இந்தோ யுரோப்பியன் மொழி என்பது இந்த புத்தகத்தில்சந்தேகமில்லாமல் நிரூபிக்கப்பட்டிருக்கிறது
.உங்களுக்கு தெரியுமா ,இந்த ஆங்கில சொற்களின் மூலம் தமிழ் தான் என்று ?
காட் God , ,போலீஸ் Police ,சாத்தான் Satan,Supreme....இன்னும் இது போல பல தமிழ் வேர்ச் சொற்கள்  ! இதை விட பெரிய விஷயம் ,வெளியே சொல்ல கூசும் தமிழ் கெட்ட வார்த்தைகள் எல்லாம் புரோட்டோ இந்தோ யுரோப்பியன் மொழியில் அப்படியே உள்ளது .'பீப் 'பாடலின் அந்த சொல் கூட உள்ளது !ஆங்கிலத்தில் பரவலாக பயன் படும் அந்த 4 எழுத்து கெட்ட வார்த்தைக்கு சரியான வேர்ச்சொல் ஆங்கிலத்தில்  இல்லை .ஆனால் ,அது தமிழில் உள்ளது !ஆக ,கெட்ட வார்த்தைகளே தமிழிலிருந்து சென்றிருந்தால் ,நல்ல வார்த்தைகளுக்கு சொல்லவா வேண்டும் !அவை 100 கணக்காக உள்ளன !
மறுக்க முடியாத ஆதாரங்கள் !
இந்த நூலில் தரப்பட்டிருக்கும் ஆதாரங்கள் யாராலும் மறுக்க முடியாதவை என்பதே இதன் தனி சிறப்பு .எடுத்துக்காட்டாக ,ஒரு சொல்லை விவாதத்திற்கு  எடுத்துக்கொள்வோம் .

ஆங்கிலம் -நேவி(Navy) ; தமிழ் -நாவாய்  !
இதில் உண்மையான வேர்ச்சொல் எது ?

ஆங்கிலத்தில் நேவி(Navy) என்ற சொல்லின் வேராக 
https://www.etymonline.com/word/navy 'எட்டிமான்லயன்'Etymonline என்ற அகராதி இவ்வாறாக கூறுகிறது :.

Navy (n )
early 14c., "fleet of ships," especially for purposes of war, from Old French navie "fleet; ship," from Latin navigia, plural of navigium "vessel, boat," from navis "ship," from PIE root *nau- "boat." Meaning "a nation's collective, organized sea power" is from 1530s. The Old English words were sciphere (usually of Viking invaders) and scipfierd (usually of the home defenses). Navy blue was the color of the British naval uniform. Navy bean attested from 1856, so called because they were grown to be used by the Navy.

இதில் நேவி(Navy) என்றால் 'கடற்படை' என்ற பொருள் வருகிறது .ஆனால் ,எப்படி அந்த பொருள் வந்தது என்று தெளிவாக இல்லை .புரோட்டோ இந்தோ யுரோப்பியன் மொழி வேராக 'nau 'என்றால் 'படகு 'என்று சொல்லப்படுகிறது .ஆனால் ,புரோட்டோ இந்தோ யுரோப்பியன் மொழியிலோ அல்லது அதன் பிள்ளை மொழிகளிலோ எங்கும் படகுக்கு அப்படி சொல் இல்லை .இதைக்குறித்து நான் கிரேக்க வேர்ச்சொல் நிபுணர்களிடம் உறுதி செய்தேன் .

இனி தமிழ் சொல் 'நாவாய்'என்பதை எடுத்துக்கொள்வோம் .தமிழில் 'நாய் 'என்றால் 'முன் இழுத்து செல் 'என்ற 'lead 'என்ற ஆங்கில சொல்லுக்கு நிகராகும் .'நாய் 'வளர்ப்பவர்களுக்கு தெரியும் ,அது நம்மை முன்னே இழுத்து செல்லும் குணமுடையது என்று .ஆதலால் அதன் பெயர் 'நாய் ';நாயகன் கதையை  முன் நடத்தி செல்பவன் .நாய்க்கர் ,நாயர் படையில் முன்னின்று போரிடுபவர் .இந்த வழியில் 'நாவாய் ' என்பது கடற்படையின் முதல் கப்பல் .வழிகாட்டும் கப்பல் .ஆங்கிலத்தில் pilot 'பைலட் 'கப்பல் .பின்னர் கப்பல் தொகுதிக்கே இந்த சொல் பயனாகிவிட்டது .
ஆங்கில நேவி(Navy) சொல் கி.பி .1530 ல் தான் பயனுக்கு வந்திருக்கிறது  ; தமிழ் -நாவாய் கி .மு .காலத்திலே பயனில் உள்ள சொல் .

சென்னைப் பல்கலைக்கழக அகராதி  'நாவாய்'என்றால் என்ன பொருள் கூறுகிறது ?
ஆக , 'நாவாய்' என்ற சொல் ,தமிழ் சொல் தான் என்பது மறுக்கமுடியாது .
                              இதைப்போல் பல சொற்கள் ,இதுவரை அறியாத வேரியலுடன் ,இந்த  நூலில் தந்திருக்கிறேன் .புத்தகம் வாசித்து முடிக்கும் போது ,ஆங்கிலம் மட்டுமல்ல இந்தோ ஐரோப்பிய மொழிகள் யாவுமே தமிழின் பேத்திகள் தான் என்பது தெளிவாகும் .ஏனென்றால் ,புரோட்டோ இந்தோ யுரோப்பியன் மொழியே தமிழின் பிள்ளை தான் என்பது தெளிவு ! 
                           தற்போதைய மொழி வகுப்பின் படி ,தமிழை இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் சேர்க்கவில்லை .காரணம் ,மொழிக் குடும்பங்கள் வகுக்கப்பட்ட அந்தக் காலங்களில் ,இந்த தெளிவுகள் இல்லாததால் இருக்கலாம் .இவ்வளவு சொற்கள் பொதுவாகவும் ,தெளிவான வேருடனும் இருப்பதால் ,தமிழை இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் சேர்க்கும் படியான தேவை எழுவதை சுட்டிக் காட்டி ,பன்னாட்டு மொழியிலாளர்களுக்கு விரைவில் எழுதப் போகிறேன் . தெளிவுகளை ஆராய்ந்து அவர்கள் இதைக் குறித்த ஒரு நல்ல  முடிவை எடுப்பார்கள் என நம்புகிறேன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------





Tuesday, 1 June 2021

ஸ்டாலின் கீழ் தி .மு .க ஆட்சி --10 நாள் சுவை !

 


                   'ஸ்டாலின்தான் வராரு, விடியல் தர போறாரு 'என்ற மனம் கவர் மெட்டோடு ஒரு  பாடல் தமிழகமெங்கும் தேர்தலுக்கு முன் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது. இப்போது ஒரு வழியாக தேர்தல் முடிந்து விட்டது .தமிழகம் பயந்தது போல் வாக்கு இயந்திரத்தின் கற்பும் பறிபோகவில்லை . ஸ்டாலின் வந்து விட்டார்.ஆட்சி கட்டிலில் ,பெரும்பான்மையோடு அமர்ந்து விட்டார் .

அடுத்த கேள்வி ,ஆக ,அவர் உறுதியளித்த  விடியல் தந்துவிட்டாரா ?

                                இந்த கேள்விக்கு பதிலளிக்க பத்து நாள் உண்மையில் பத்தாது.பொதுவாக ,100 நாள் ஆட்சியை தான் நிறுத்து பார்ப்பார்கள் . ஆனாலும் இந்த பத்து நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் செய்தது இனி வரப் போன நாட்களில் அவர் செய்யப்போவதை  காட்டும் ஒரு முன்னோட்டமாக எடுத்தோம்  என்றால் ,நிச்சயமாக விடியல் வெகு வெளிச்சமாகவே  ஆரம்பித்துவிட்டது எனலாம் .இந்த 10 நாளில்  அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை பார்ப்போம்.

  • இதுவரை இல்லாத ஒரு புதிய அரசியல் நாகரிகத்தை தமிழ்நாட்டு அரசியலில் நுழைத்திருக்கிறார் திரு ஸ்டாலின் அவர்கள் .எதிர்க்கட்சி தலைவரை கடைசி வரிசையில் அமர வைத்து அவமானப் படுத்திய  சர்ச் பார்க் எனும் பெரிய ஆங்கில கான்வென்டில் படித்த அம்மாவுக்கு  நேர்மாறாக,திரு  ஓ .பன்னீர்செல்வம் அவர்களுக்கு  தேனீர் விருந்து அளித்து  முதல்வர்  ஸ்டாலின் அவர்கள் உயர்ந்து நிற்கிறார் .அதேபோல் தினமும்  வசைபாடும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை  நாகரீகமாக வரவேற்றது போன்ற பல காரியங்களை செய்கிறார் ஸ்டாலின் அவர்கள் .கலைஞர்  இறந்தவுடன் மெரினா கடற்கரையில் அவருக்கு சமாதி அமைக்க ஸ்டாலின் அவர்கள் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து கெஞ்சி கூத்தாடி தான் வாங்கினார். ஆனால் இன்று எடப்பாடி அவருடைய அரசு வீட்டை காலி பண்ணாமல் நீடிக்க ஸ்டாலின் அவர்களிடம்  கேட்டவுடன் உடனே அதற்கு சம்மதம் தெரிவித்தது , இரண்டு பேருக்கும் உள்ள ஒரு வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும்  உள்ளது போல் தெளிவாக தெரிகிறது.
  • ஸ்டாலின் அவர்கள் அரியணை ஏறும் நேரம் நல்ல நேரம் அல்ல.கொரோனாவின்  இரண்டாவது அலையில் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு கொடுமையான நேரம் .அரியணையில்  அவர் அமர்ந்த உடன்  சூழ்ந்து நிற்கும்  பல சவால்கள்.முதல் சவால் கொரோனாவிடமிருந்து இவருக்கு வாக்களித்த பொது மக்களை காப்பாற்ற வேண்டும். இதை  ஸ்டாலின் அவர்கள் மிகவும் திறமையாக கையாண்டு நல்ல பேர் வாங்கி விட்டார். முதல் இரண்டு நாட்களுக்குள் அதிகாரிகள் எல்லோரையும் ஒருங்கிணைத்து  ஒரு கொரோனா கட்டுப்பாடு கட்டளை மையத்தை உருவாக்கி ,கொரோனா பரவாமல் தடுத்தார் .இருக்கும் மருத்துவ கட்டமைப்பை திறம்பட பயன் படுத்த வழி வகை செய்தார் .
  •  தேர்தலுக்கு முன்னர் வாங்கிய புகார் மனுக்களை உடனே சரி  செய்ய ஒரு தனித் துறையை உருவாக்கி அதற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமித்தது பாராட்டுக்குரியது .
  •  ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விஷயத்தில் நீதிபதி  அருணா ஜெகதீசன் அவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் பல  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 93 பேருக்கு தலா ஒரு லட்சம் வைத்து இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது .
  • பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் முதல் நாளிலே அறிவிக்கப்பட்டது.
  •  இவ்வாறாக இன்னும் பல நெடுநாள் காத்திருந்த காரியங்கள் உடனே செயல் படுத்தப்பட்டது .முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 10 நாளில் எடுத்த எல்லா முடிவுகளையும் நாம் இந்த பதிவில் அடக்கவில்லை .அதற்கு  இடமும் இல்லை.
  • எல்லாவற்றிலும் ஒரு  வெளிப்படைத்தன்மையும்  நம்பகத்தன்மையும் உள்ளது . 
  • முடிவுகள் வேகமாகவும் ,திறம்படவும் எடுக்கப்படுவது சிறப்பு .
  • அதிகாரம் முறையற்ற வழிகளில் கசியவில்லை என்பதும் சிறப்பு .

முதல்வரை சூழ்ந்திருக்கும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்ன என்ன ?முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று விட்டார் .ஆனால், இன்னும் பல சவால்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது .அவைகள்  என்ன என்ன என்பதை பார்க்கலாம்.

  •  முதலாவதாக மத்திய அரசிடம் மாநிலம் பெறவேண்டியதை சரியான உத்தியில் பெறுவது .இதைப் பொறுத்தவரையில் இதுவரையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசை கேட்டுக் கொண்ட கொரோனா  கட்டுப்பாடு மருந்துகள், மற்ற உதவிகள் எல்லாம் திருப்திகரமாகவே  வந்து கொண்டிருக்கிறது .முந்திய ஆட்சியை விட மத்திய அரசு முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் கொஞ்சம் சீக்கிரமாகவே செயல்படுவதாக தெளிவாக தெரிகிறது. ஆனாலும், குஜராத் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு ஒரு தனி கவனிப்பு நடப்பதை மறுக்க முடியவில்லை. இதையெல்லாம் மெதுவாக,ஆனால் ஒரு கண்டிப்புடன் ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசை கேட்டு வாங்கிக் கொள்வார்கள் என்பதில்  சந்தேகமில்லை.
மொத்தத்தில் இந்த பத்து நாள் ஆட்சிக்கு நாம் எளிதாக ஐந்துக்கு நாலு நட்சத்திரம் என்று மதிப்பீடு கொடுக்கலாம். இந்த கஷ்ட காலத்திலும் இவ்வளவு செய்தார் என்பது பெருமைக்குரிய விஷயம் .



இது ஒருபுறமிருக்க,இன்னும்  செய்யவேண்டிய பல காரியங்கள் உள்ளன. குறிப்பாக, இதுவரை அவர்    தமிழர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு என்பதை குறித்து ஒன்றும் சொல்லவில்லை. அதை செய்ய வேண்டும் .இரண்டாவதாக அவருடைய வெற்றிக்கு இரவு பகல் பாராது  உழைத்த தொண்டர்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும். இந்த ஐந்து வருட ஆட்சியில் அதிமுகவை இல்லாத கட்சியாக மாற்ற வேண்டும். வளர்ந்து வரும் தமிழ்த் தேசிய உணர்வுக்கு  மதிப்பளித்து தமிழர்களுக்கு ஆட்சியில்  அதிக உரிய பங்கு கொடுக்க வேண்டும்.

எனினும்  தமிழர்களுக்கு ஒரு விடியல்  வந்துவிட்டது என்பதை நாம் மறுக்க முடியாது.