Thursday, 12 March 2026

இந்தியர்கள் , சின்ன சின்ன காரணத்திற்கு கூட ` உடனே சண்டை போடுவது ஏன் ?

 

                                                (படத்திற்கு நன்றி: பிக்ஸ்சாபை)

இந்தியர்கள் ஒரு சின்ன காரணத்திற்கு கூட  உடனே சண்டை போடுவது, உடனே அதை காணொளியாக பதிவு செய்து எதிராளியை அவமானப்படுத்துவது,மற்றவர்கள் துன்பத்தில் இன்பம் காண்பது, அவர்களுக்கு இவர்களிடம் ஏதாவது வேலை என்றால் முடிந்த அளவு இழுத்து அடிப்பது போன்றவை எதைக் குறிக்கிறது ?ஆங்கிலத்தில் SADISM என்று சொல்லப்படும் இந்த மன நிலை ஏன் இந்தியர்களிடம் அதிகம் காணப்படுகிறது?என்ன உளவியல் இந்தியர்களை மட்டும் இப்படி செய்யத் தூண்டுகிறது?

உனக்கு துன்பம் என்றால் அது எனக்கு இன்பம்!

ஒரு முறை சிங்கப்பூர் சுற்றுலா சென்றிருந்தோம். அங்கு முன்பின் தெரியாத சிங்கப்பூர் வாசிகள் எல்லோரும் எங்களுடன் சிரித்து பேசினார்கள். பல சீனர்கள் தமிழை கொஞ்சி கொஞ்சி, அழகாக,ஆனால் கஷ்டப்பட்டு முயற்சி எடுத்து, எங்களிடம் பேசினார்கள் .'அண்ணாச்சி வாங்கோ ! இங்கே உட்காருங்கோ ' என்றெல்லாம் அழகாக பேசினார்கள் .அவர்களுக்கு நாங்கள் வேறு நாட்டவர் என்பது நன்றாக தெரியும் ,ஆனால் ,அவர்களுக்கு எங்கள் மீது  எந்தவித வெறுப்பும் இல்லை. மாறாக எங்களை மிகவும் அன்புடன் நடத்தினார்கள் .ஏன் இந்தியாவில் மட்டும் ,புதிதாக காணும் யாரும்  நம்மிடம் சிரித்து பேசுவதில்லை? அவர்களை  வியாபார நோக்கில் நாடினால் கூட, அந்தப் பணம் நம்மிடமிருந்து கிடைக்க, எந்த அளவு குறைவாக பேச முடியுமோ  அந்த அளவு தான் பேசுகிறார்கள்! எடுத்துக்காட்டாக, நேற்று  என்னுடைய கார் சக்கரம் காற்று இறங்கி ,அதை சரி செய்ய சென்றேன். அந்த சரி செய்தவரிடம் நான் என்ன பேசினாலும் ,பதிலுக்கு அவர்  ஒன்றுமே சொல்லவில்லை !அவர்  பாட்டுக்கு  வேலை செய்து கொண்டிருக்கிறார் ! இது எதனால் ஆயிற்று? என்று கேட்டாலும் ஒன்றும் பதில் இல்லை !என்னிடம் வியாபாரத்தை எதிர்பார்க்கும் அவர்  ஏன் என்னிடம் பேச கூட தயங்க வேண்டும்? இன்னொரு சம்பவம் .எதிர் வீட்டு நபர் ,நான் சிரித்தாலும் சிரிக்க மாட்டார்.ஐந்து வருடத்திற்கு முன்னால் நாங்கள் புதிதாக இந்தத் தெருவுக்கு குடி வந்தோம். வீடு புகு மனை விழாவிற்கு அழைத்த போதும் வரவில்லை .ஒரு நாள் ,அவருக்கு வர வேண்டிய ஆதார் அட்டையை  தவறுதலாக என் வீட்டில் தபால்காரர் போட்டு விட்டு சென்று விட்டார். எனக்கு எதிர் வீட்டுக்காரர் பெயர் கூட தெரியாது. ஆதலால் ,வேறு யாருடையதோ என்று எண்ணி,அந்த ஆதார் அட்டையில் இருந்த அலைபேசி எண்ணை அழைத்து ,உங்களுடைய ஆதார்  அட்டை எங்கள் வீட்டில் தவறுதலாக போட்டிருக்கிறார்கள் .உங்கள் வீடு எங்கே இருக்கிறது? வந்து வாங்கிக் கொள்ள முடியுமா? என்று கேட்டேன். நான் வெளியே இருந்து பேசியதால் எதிர் வீட்டுக்காரர் பதில் பேசியது எனக்கு இங்கிருந்து  தெரிந்தது. 'ஆஹா !இவர் ஆதார் அட்டை தான் போல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்'. உடனே எடுத்துக்கொண்டு அவரிடம் கொண்டு போய் நீட்டினேன். அவர் நன்றி சொல்வார் என்று எதிர்பார்த்தேன். பதிலுக்கு அவர் சொன்னது எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.' இந்த தபால்காரன் அதை ஏன் உங்கள் வீட்டில் போட்டான்? 'என்று ஒரு எரிச்சலான கேள்வி!

சரி ! இவர் ஏன் நன்றி சொல்வதற்கு, பதில் இப்படி சொல்ல வேண்டும்?ஒரே இ னத்தில் உடன்  வாழும் மக்கள் இப்படி  நடந்து கொள்வதெல்லாம் எதை காட்டுகிறது?ஒருவரை ஒருவர் அறவே வெறுக்கும் ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதைத்தான் அது தெளிவாக காட்டுகிறது . ஒரு அவசர தருணத்திற்கு கூட மகிழ்ச்சியாக பேசுவதற்கு தயங்கக்கூடிய மக்கள் இருக்கும் ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தான் காட்டுகிறது இது.யாரிடமும் என்ன பேச வேண்டும் என்றாலும் பயமாக இருக்கிறது.தவறு செய்யும் சிறுவரைகூட அதை சுட்டிக்காட்டி  திருத்த முயன்றால் அவர்கள் உடனே முறைக்கும் நிலையை கண்கூடாக காண்கிறோம்.எதற்கும் உடனே சண்டைக்கு வந்து விடுகிறார்கள் என்பது ஒரு பொதுவான புகார். 

இதற்கு அடிப்படை காரணம் தான் என்ன?

இதற்கு அடிப்படை காரணம் என்ன ?வேறு எந்த நாட்டிலும் இது நடப்பதில்லையே !ஜெர்மனியில் விமான நிலையத்தில் நாம் புதிதாக காணும் ஜெர்மனியர்கள் நம்மைப் பார்த்து  புன்னகைத்து, வாழ்த்தி விட்டுப் போகிறார்கள் .ஏன் நம் நாட்டில் மட்டும் எப்படி நடக்கிறது என்று கேட்டால் உண்மையான காரணத்தை இந்தியர்கள் யாரும் சொல்ல மாட்டார்கள் .பல இந்தியர்களுக்கு அது தெரியாமலும் இருக்கலாம் அல்லது அவர்கள் உணராமலும்  இருக்கலாம்.

வெளிநாட்டவரின் பார்வை!

ஒரு வெளிநாட்டு பார்வையாளர்,இந்தியாவில் வந்து சில வருடங்கள் தங்கி இருந்து இந்திய சமூக முறையை ஆராய்ச்சி செய்தார். உண்மையான காரணங்களை அவர் ஆழமாக  அலசி சொல்லும் போது, இவ்வாறாக இருக்கிறதா என்று நாம் வியப்படைகிறோம்.முதலில் அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.இந்து மதத்தில் பிறந்த ஒவ்வொருவரும் பிறந்த உடனே இன்னொரு சாதிக்காரனுக்கு எதிரியாக பிறந்து விடுகிறான் என்கிறார் அவர்!ஏனென்றால் ஒன்றிலோ ,அந்த சாதிக்காரனுக்கு, இவன் மேல் சாதி அல்லது கீழ் சாதி! எப்படி என்றாலும் எதிரிதான்!இரு நபர்கள் சமமாக இருந்தால் தான் இருவரும் நண்பர்களாக முடியும் .மேலாக இருந்தால் அவன் முதலாளி! கீழாக இருந்தால் அவன் அடிமை! இப்படி பொதுவாக இங்கு பிறக்கும் ஒவ்வொரு இந்தியனும் ,பிறந்த உடனேயே காரணமே இல்லாமல், அவன் பிறந்த சாதியின் அடிப்படையில், இன்னொருவனுக்கு தன்னாலே எதிரியாகி விடுகிறான்! ஆதலால், பார்க்கும் போதே இயல்பாகவே ஒரு சிரிப்பு இருக்காது .வராது .ஒரு முறைப்பு தான் இருக்கும் !எப்படி சண்டை போடலாம் என்று தான் எப்போதுமே அவர்கள் இருவருடைய மனநிலையும் இருக்கும்.இந்த நிலையில் ஒரு சின்ன பொறி தட்டினால் போதும்! உடனே அது பெரும் பிழம்பாய் மாறி,ஒரு பெரிய சண்டையாகி,தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் கொலை வரை போய்விடும்!தென்காசி அருகே ஒருவர் அவருடைய சின்ன சரக்கு வாகனத்தை சாலையின் ஓரத்தில்  நிறுத்திவிட்டு பக்கத்துக் கடையில் டீ குடிக்க சென்றார். அவர் திரும்பி  வந்து பார்க்கும்போது ,அவர் வண்டிக்கு நேர்  முன்னாக இன்னொருவர் வாகனத்தை நிறுத்தி விட்டு எங்கோ  சென்று விட்டார் .இதனால் ,இவரால் வண்டியை எடுக்க முடியவில்லை. அவர் வரும் வரை இவர் காத்திருக்க வேண்டி இருந்தது. வந்தவுடன் கோபத்தில், ஏன் இப்படி நிறுத்தி விட்டு சென்றீர்கள்? என்று கேட்க ,அவர் பதிலுக்கு ,ஏன் என்று சொல்கிறேன் என்று ஒரு கத்தியை எடுத்து இவர் வயிற்றில் நேராக குத்திவிட்டார் !உடனே  குடல் சரிந்து ,அதே இடத்தில் அவர் அதிக குருதி இழப்பால் இறந்துவிட்டார்! ஒரு சின்ன விஷயம். அந்த வண்டியை நிறுத்தியவர் மேல் தான் தெளிவாக தப்பு உள்ளது என்று தெரிந்தும் ,அவர் ஏன் கத்தி வைத்து இவரை குத்திக் கொல்ல  வேண்டும்?அவர் கோபத்திற்கு காரணம் ,அவர் உள்ளே குடி கொண்டிருக்கும் அந்த பயங்கரமான சாதிய ஆவி தான் !நீ என்ன  என்னை கேள்வி கேட்பது ?என்ற அந்த மனநிலை தான் அவரை இந்த குற்றம் செய்ய தூண்டியது .இதுவே உண்மையான காரணம்.ஒரு தமிழ் படத்தில் ஒரு காட்சி வரும் .ஒரு பட்டியல் இனப் பையனை, ஒரு ஆதிக்க சாதி பையன்,அடி அடி என்று அடித்து   விடுவான்.அடிபட்ட  பையன்  வீட்டிற்கு  அழுது கொண்டே வந்து ,தன் அப்பாவிடம் முறையிடுவான்.' அப்பா ,நாம்  போய் அவனை திருப்பி அடித்து விட்டு வருவோம்' என்று சொல்லுவான் .அதற்கு அவன்  அப்பா, 'அப்படி முடியாத டா கண்ணா! ஏனென்றால் ,அவன் அடிக்க பிறந்த சாதி! நாம் அடிபட பிறந்த சாதி! 'என்று கண்ணீருடன் சொல்வார்! ஒருவருடைய சாதி என்னவென்று அறிய முடியாத சமூக ஊடகங்கள் வழியாக கூட நாம் யாருடனும் நண்பராக முடியாது. உங்கள் கருத்துடன் இன்னொருவர் ஒத்து போனால் கூட உங்களை பின்பற்ற மாட்டார்கள் . சமூக ஊடகங்களில்  எதிர் கருத்து கூறியவரை உடனே தனிநபர் தாக்குதல் தான் நடத்துவார்கள். பதில் கருத்து கூற மாட்டார்கள்.ஏனென்றால், அடிப்படை காரணம் மேலே நான் குறிப்பிட்ட அதே காரணம் தான்.ஆக உண்மையான காரணம், இதை விட்டுவிட்டு ஏதோ காரணங்களை சொல்லுவார்கள். சட்டம் ,ஒழுங்கு என்பார்கள்.அது ,இது, அறியாமை என்றெல்லாம் சொல்வார்கள் .

 உண்மையான காரணத்தை எப்படித்தான் மாற்றுவது?

உண்மையான காரணத்தை மாற்ற வேண்டுமென்றால், சாதிய கட்டமைப்பு குலைய வேண்டும் .அது உடைந்தால் தான் அது மாறும். சின்ன குழந்தைகளை கூட ஆசிரியர்கள் சாதி அடிப்படையில் அடிக்கிறார்கள். வீணாக பழி போடுகிறார்கள். மதிப்பெண்களை குறைக்கிறார்கள் .சாப்பாடு டப்பாவை தூக்கி எறிகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இந்த சாதி மனப்பான்மை என்ற ஆவி தான். அதை மாற்றாமல் ஒன்றும் ஆகாது, மாறாது  என்கிறார் அவர் .எதையும் மாற்ற வேண்டுமென்றால் முதலில் அது இருப்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.ஆனால், இந்தியர்கள் இப்படி ஒரு சாதிய பாகுபாடு, இந்திய சமூகத்தில் உள்ளது என்பதை ஒருபோதும் ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள் .இந்திய அரசு கூட ஒத்துக் கொள்ளாது .டர்பனில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் இந்தியாவில் சாதிய பாகுபாடு என்று ஒன்று கிடையவே கிடையாது என்று இந்திய அரசு ஒரு அறிக்கை விட்டது. ஆதலால் ,இதே போல ,  சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.இது ஒரு தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கும் .இந்தியா ஒரு நாளும் இதை  ஒழிக்காமல் ஒரு நல்ல ஒற்றுமையான, வலிமையான,சமூகமாக வளர முடியாது ,மற்ற நாடுகளுடன் போட்டி போட முடியாது என்பதுதான் கண் முன்னே காணும் ஒரு பெரும் உண்மை. இதை மறைப்பதால்  அல்லது மறுப்பதால் நாம் ஒன்றையும்  சாதிக்க முடியாது என்பதை நாம் எல்லோரும் உணர வேண்டும் .நம்முடைய தலையெழுத்து  இதன் நடுவே அமைதியாக வாழ முயற்சி செய்வது தான் !

No comments:

Post a Comment