Saturday, 10 September 2016

அதை மட்டும் சொல்ல மாட்டீங்களே !

சமீபத்தில் நடந்த சென்னை  கொலை பொது மக்களையும் ஊடகங்களையும் திரும்பவும்,நம்முடைய சமுதாய ஒற்றுமையைக் குறித்து  பேச வைத்திருக்கிறது .பட்டப்  பகலில் ,ஒரு பரபரப்பான ரயில் நிலையத்தில் ,ஒருவன் வந்து ஒரு இளம் பெண்ணை குத்திக்  கொன்றிருக்கிறான் .அவனுக்கு எப்படி அந்த தைரியம் வந்தது ?அங்கு நிற்கும் ஒருவரும்  நம்மை பாய்ந்து பிடிக்க மாட்டார்கள் என்ற ஒரு அதீத நம்பிக்கை எங்கிருந்து வந்தது ?ஏன் பார்வையாளர்கள் யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன் வரவில்லை ?
ஊடகங்கள் மறைக்கும் உண்மைகள் !
ஊடகங்களில் இதைப் பற்றி  நடந்த பல விவாதங்களில் என்னவெல்லாமோ காரணங்கள் வந்தன .கண்காணிப்பு கேமரா ,அது ,இது என்று பல காரணங்கள் ..ஆனால் உண்மையான காரணம் மாத்திரம் ஒருவருக்கும்  தோன்றுவதில்லை  .அது தான் என்ன ?
ஜெர்மனியில் நடந்தது
ஜெர்மனியில் ரயிலில் பயணித்த என் நண்பன் சொன்ன ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது .ரயில் பெட்டிகளில் அங்கு புகை பிடிக்க அனுமதியில்லை .ஒரு சமயம் ,ஒருவர் ஒரு சிகரெட்டை கையில் எடுக்க போவது போல் தெரிந்ததும் ,பெட்டியில் பயணித்தவர்கள் யாவரும் ஒரே குரலில் ஆட்சேபனை தெரிவித்தவுடன், அந்த நபர் வேறு வழியில்லாமல் அவர் முயற்சியை கை விட்டு விட்டாராம் .சமுதாய நலனுக்காக எல்லோரும் ஒரே மாதிரியான அக்கறை கொண்டதினால் தான் அது சாத்தியமாயிற்று .இதே சூழ் நிலையில் ,அந்த பயணியர் ஒருவருக்கொருவர் எதிரியாக இருக்கிறார்கள் அல்லது பிடிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் .என்ன நடந்திருக்கும் ?
இங்கு தமிழ் நாட்டில் நடந்தது 
நான் ஒரு முறை வேலை நிமித்தமாக, இராஜபாளையத்தில் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன் .விடுதி வாசலருகே ஒரு அப்பாவி சிறுவனை போட்டு அடி அடி என்று அடித்துக்கொண்டிருந்தார்கள் .காரணம் என்ன தெரியவில்லை .சிறுவன் வலியில் அலறிக் கொண்டிருந்தான் .நான் விடுதி காவலாளியை அழைத்து அந்த பையனை உடனே காப்பாற்ற சொல்லி விரட்டினேன் .காவலாளி வாசல் பக்கம் சென்றவுடன் பையனின் சத்தம் அதிகரிக்க ,நானே அங்கு நேரில் ஓடினேன் .அங்கு நான் கண்ட காட்சி உலகத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாத ஒரு காட்சி .ஆம் ,காவலாளியும் சேர்ந்து அந்த பாதிக்கபட்டபையனை அடித்துக் கொண்டிருந்தான் ! அடி வாங்கிக்கொண்டு அலறிக்கொண்டிருக்கும் அப்பாவி சிறுவனை காப்பாற்ற வேண்டிய ஆள் ,அவனும் சேர்ந்து அடிப்பது ஏன் ?
ஜெர்மனியின் அந்த காட்சிக்கும் தமிழ் நாட்டின் இந்த காட்சிக்கும் இவ்வளவு பெரிய வேறு பாடு  ஏன் ?ஏன், தமிழ் நாட்டில் பார்ப்பவர்கள் எல்லோரும் ஒன்றும் செய்யாமல் அவர்கள் பாட்டிற்கு செல்கிறார்கள் அல்லது அவர்களும் ஒரு வேண்டாத அடி கொடுக்கிறார்கள்  ?
அன்று`இரவு முழுவதும் இதே சிந்தனை  தான் .மறு நாள் காலையில் ஒரு சிறிய ரகசிய புலன் விசாரணை  நடத்தினேன் .அப்போதுதான் தெரிந்தது ,அந்த அடி வாங்கின அப்பாவி பையன் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்த்தவன் என்பது !அந்த காவலாளி உயர் ஜாதியை சேர்ந்தவன் .அடித்து கொண்டிருந்த அனைவரும் உயர் ஜாதியை சேர்ந்தவர்கள் .ஆதலால் காவலாளியும் அவர்களுடன் சேர்ந்து,ஜாதிய தர்மத்திற்க்காக , அப்பாவி பையனை  அவனால் முடிந்த அளவு அடித்தான் !இதிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் ,என்னவென்றால் இந்தியாவில் பாதிக்கபட்ட நபரின் ஜாதியை பொறுத்து, பார்த்துக்கொண்டிருப்பவர்களின் பதில் செயல்  இருக்கும் .இது அவர்களாக யோசித்து ,அப்போது எடுக்கும் முடிவு அல்ல .உள் மனதில் குடி இருக்கும் ஜாதிய ஆவி எடுக்கும் முடிவாகும் .கிராமப்புறங்களில் பாதிக்கப்பட்டவரின்  ஜாதி எல்லோர்க்கும் தெரிவதால் அதற்கு  தகுந்தாற் போல் எதிர்செயல் முடிவு இருக்கும்.ஆனால் நகர்ப்புறங்களில் அப்படியில்லை .அங்கு பாதிக்கபட்ட நபரின் ஜாதியை அறிய முடியாது .ஆதலால் பார்ப்பவர்கள், உடன், ஒரு காப்பாற்றும்  முடிவு எடுக்க முடியாது .இந்த குழப்பத்தில் பார்ப்பவர்கள் இருக்கும் நேரம், குற்றவாளி எளிதாக தப்பி விடலாம் .இந்த ஜாதிய ஆவியின் பிடியில் தான் ஓவ்வொரு  சராசரி இந்தியனின் எந்த முடிவும் இருக்கும் என்ற பெரும் உண்மையை ஊடகங்கள் சொல்வதே இல்லை .இதனால் தான் இன்று நாம் சாலை விபத்துகளில் , பெரும் காயங்களில் கூட யாரும் உதவ முன் வருவதில்லை 
இரண்டாவதாக ,ஒருவர் உதவ சென்றால் மற்றவர்களும் உதவிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் தான் ,அவர்கள் உதவ முடிவெடுப்பார்கள் .எல்லோரும் ஒன்றாக இணையவேண்டுமென்றால் அதற்கும் இந்த ஜாதிய ஆவி தடையாய் அமையும் .காவலாளி கதை இதை தெளிவாக விளக்குகிறது  .அந்த அடி பட்ட சிறுவன்  காவலாளியின் ஜாதியை சேர்ந்தவனாயிருந்தால் ,அவனை இவன் நிச்சயமாக காப்பாற்றியிருப்பான் .
மனத்தை இயக்கும் அந்த மர்ம ஆவி !
இதற்கு இன்னொரு ஆதாரமாக ராஜஸ்தானில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது .உயர் ஜாதி சிறுவன் ஒருவன் ,விளையாடும் போது தவறி ஒரு திறந்த கிணற்றில் விழுந்து விட்டான் .இதைக் கண்ட உறவினர்கள் உதவிக்கு கத்தினர் ,ஆனால் ஒருவரும் சிறுவனை காப்பாற்ற கிணற்றில் குதிக்கவில்லை .அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் துணிச்சலாக கிணற்றில் குதித்து ,போராடி ,அந்த 7 வயது சிறுவனை மேல போட்டு விட்டு களைப்பில் தரையில் விழுந்து கிடந்தார் .அவருடைய வீர செயலுக்கு என்ன பரிசு கொடுத்தார்கள் ?பிழைத்த சிறுவனின் உறவினர் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து .....அவரை அடித்தே...ஆம் !அடித்தே  கொன்றுவிட்டார்கள் !"என்ன தைரியம் இருந்தா,நீ ......பய  அவனை தொடுவே ?"என்று அந்த துணிச்சலான 'தீண்டத்தகாத ' வாலிபரை அடித்தே கொன்று விட்டனர் ! ஜாதிய ஆவியின் சக்தி என்னவென்று தெரிகிறதா?தனக்கு உதவி செய்பவரையே கொல்ல வைக்கும் பயங்கர ஆவி அது !
ஜாதிய ஆவி அழியும் வரை ....
ஒரு விஷ செடி, விஷ கனிகள் கொடுக்கிறதென்றால் ,ஓவ்வொரு கனியாக அழிப்பது விவேகமல்ல .சென்னை கொலை ஒரு கனி .கோகுல் ராஜ் கொலை ஒரு கனி .சங்கர் கொலை ஒரு கனி .ஜாதிய விஷ செடிக்கு நன்றாக  நீர் ஊற்றி வளர்த்து விட்டு ,ஓவ்வொரு கனியாக அழிப்பதை விட்டு விட்டு ,செடியை முற்றிலும் அழிப்போம் .நம் சமுதாய உணர்வு அழிவதை  காப்போம் .சென்னை கொலை கடைசி கொலையாக இருக்கட்டும் !

No comments:

Post a Comment