சமீபத்தில் அமேசான் ப்ரைம் களத்தில் வெளியிடப்பட்ட தமிழ் படம் என்று சொல்லப்படும் சார்பட்டா பரம்பரை என்ற, படத்தை பார்த்தேன். இயக்குனர் பா. ரஞ்சித்தின் இந்த படத்தை பார்த்துவிட்டு ஏற்கனவே பலர் விமர்சனம் பலவிதமாக செய்திருக்கிறார்கள். விகடன் குழு 45 மதிப்பெண் தான் கொடுத்திருக்கிறது. அந்த மதிப்பெண்ணை பொதுவாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .நானும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
மற்ற விமர்சகர்கள் சொல்லாத சில புதிய புள்ளிகளை தான் நான் இங்கு சொல்ல விழைகிறேன். படத்தின் களம் 1970 களின் வடசென்னையாகும். அங்கு முகமது அலி போன்ற உலகப் பெயர் பெற்ற குத்துச்சண்டை வீரர் அளவுக்கு குத்துச்சண்டை வீரர்கள் இருந்தார்களாம். அவர்கள் 2,3 பரம்பரையாம் . ஒன்று சார்ப்பட்டா பரம்பரையாம் . இன்னொன்று,இடியாப்ப பரம்பரையாம் . இவர்களுக்குள் போட்டி நடக்குமாம்.ஊரே திரண்டு வந்து பார்க்குமாம். இத்யாதி இத்யாதி...
இந்த கதை எப்படி பா. ரஞ்சித்துக்கு கிடைத்தது என்று தெரியவில்லை. கூகுள் தேடுதலில் பார்த்தால் சார்பட்டா என்ற சொல்லே உலகில் எங்கும் கிடையாது என்பதுபோல் பதில் வருகிறது. அந்த சொல் தேடுதலில், இந்தப் படத்தை தவிர அந்த சொல் வேறு எங்குமே காண வரவில்லை. ஆக, சார்பட்டா பரம்பரை என்று ஒரு பரம்பரை பெரிய அளவில் இருந்ததாக தெரியவில்லை.1970 வாக்கில் எனக்கு தெரிந்து, சென்னையில் குத்துச்சண்டை மைதானம் boxing ring சென்னை கிறிஸ்தவக் கல்லூரி ஒன்றில் மட்டும் தான் இருந்தது. அங்கு மிகவும் பணக்கார,உயர் வர்க்க மாணவர்கள் மாத்திரம் பங்கெடுக்கும் ஒரு விளையாட்டாக அது இருந்தது. அதைத் தவிர சென்னையில் எங்கும் குத்துச்சண்டை நடந்தததாக சரித்திரப் பதிவுகள் எதுவும் கிடையாது. எனினும், 1976 ல் நெருக்கடி நிலை முடிந்தபின் பொது இடங்களில் குத்துச்சண்டை போட்டி நடத்தக்கூடாது என்ற அரசு ஆணை வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆக, குத்துச்சண்டை போட்டிகள் பொதுவிடங்களில் அதன் முன்னர் நடந்ததாக தெரிகிறது .
இனி இந்த படத்தைப் பற்றி பேசலாம். அந்த காலத்தில், பட இயக்குனர்கள் படத்தின் காலத்தை முதலில் நமக்கு ஏதோ ஒரு வகையில் அறிமுகம் செய்து வைப்பார்கள். அந்த அறிமுகத்தின் பின், நாம் அந்த காலகட்டத்துக்குள் எளிதாக நுழைந்து ஒன்றிவிடுவோம். இப்போதுள்ள இயக்குனர்களுக்கு அந்த மாதிரி திறமை எதுவும் இல்லை. பா. ரஞ்சித் இந்தப்படத்தின் காலப் பின்னணியை எங்கும் அறிமுகப்படுத்தவில்லை.சிறிது நேரத்தில் நாமாக புரிந்து கொள்ள வேண்டும். புதியதாக நாம் அறியாத ஒரு விளையாட்டு . அந்த குத்துச்சண்டை விதிகளை பற்றி யாராவது பேசுவதாக ஒரு காட்சியும் இல்லை. அப்படி இருந்திருந்தால் பார்வையாளர்களுக்கு இந்த குத்துச்சண்டை அடிப்படை பற்றி அறிய உதவியிருக்கும். அப்படி ஒரு காட்சி இல்லாததால், குத்துச்சண்டை பற்றி ஒன்றும் தெரியாமல் அவர்கள் பாட்டுக்கு குருட்டாம் போக்கில் ரசிகர்கள் பார்க்க வேண்டியது தான். ஆர்யா, ரங்கன் வாத்தியாரின் ரசிகன் என்பதையும் அவருடைய ஒவ்வொரு அசைவையும் மனதில் வைத்து ஆராதிக்கும் ஒருவன் என்பதையும் முதலில் தெளிவு படுத்தவில்லை. இயக்கத்தில் பல குழப்பங்கள் உள்ளது. பல காட்சிகள் துண்டு துண்டாக, ஒரு தொடர்பில்லாமல் ஒட்டப்பட்டது போல் உள்ளது. ஆர்யா எதற்காக அவ்வளவு குடிக்கிறார், பின்னர் தாயை போய் ஏன் அடிக்கப் போகிறார்,பின்னர் மன்னிப்பு கேட்கிறார் என்பதெல்லாம் ஒரு தெளிவே இல்லை.
ஒரு கட்டத்தில் குழப்பம் அதிகமாகும்போது, படத்தை பார்க்காமல் அதோடு நான் நிறுத்திவிட்டேன்.முழு படத்தையும் பார்க்க என்னால் முடியவில்லை. பின்னணி இசையமைப்பு கொஞ்சம் கூடகாட்சிகளுக்கு பொருத்தமாக இல்லை. நடிப்பவர்கள் ஒருவரும் தமிழர் சாயலில் இல்லை, ரங்கன் வாத்தியாரை தவிர. வேம்புலி மூக்கு ஏதோ வேறு ஒரு மாநிலம் போல் தோன்றுகிறது. இன்னொரு பெரும் பிழை,தெலுங்கு நாயக்கர்களை,தமிழ் தலித்துகளாக காட்டுவது. முதலிரவில் எந்த தலித் பெண்ணும் இப்படி கேவலமாக ஆட மாட்டார்.
மொத்தத்தில், இந்த படத்திற்கு,விகடன் கொடுத்த 45 அதிகம் . 25/100 கொடுக்கலாம் என்பது என் கருத்து. சங்கராபரணம், பாகுபலி, கபாலி போன்ற படங்கள் வெற்றியடைய முக்கிய காரணம், அதை சுற்றி ஊடகங்கள் போட்ட கூச்சல் தான்! அதேபோல பெரும் கூச்சல் போட்டு, சார்ப்பட்டா பரம்பரையும் வெற்றிப்படமாக காட்டிவிட்டார்கள்! ஆனால் உண்மை என்னவென்றால்,இறுதியில் குத்து வாங்கியது யார் என்றால் படம் பார்த்த ரசிகர்கள் தாம் என்று ஐயமின்றி கூறலாம் ! அதுதான் எனக்கு மிஞ்சியது!